Skip to main content

குட்டி கதைகளும் குறியீடுகளும்; விஜய் செய்த அதிரடி அரசியல் சம்பவங்கள்!

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

vijay controversy and political timeline

 

தமிழ்நாட்டிலிருந்தும் தமிழ் மக்களிடமிருந்தும் பிரிக்கவே முடியாத இரு விஷயங்கள் அரசியலும் சினிமாவும். காலத்திற்கேற்ப அரசியலில் கொள்கைகளும் சினிமாவில் தொழில்நுட்பங்களும் மாறியிருந்தாலும் அன்றிலிருந்து இன்றுவரை மாறாமல் தொடரும் சில விஷயங்களும் உள்ளன. அதில் ஒன்று மூன்றெழுத்து செண்டிமெண்ட். எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி தனுஷ், சிம்பு வரை திரையுலகில் ஆளுமை செலுத்திய, செலுத்திக்கொண்டிருக்கிற மூன்றெழுத்துக்காரர்கள் ஏராளம். இதில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோர் செய்த சில சம்பவங்கள் சினிமாவை தாண்டி அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இப்படி முந்தைய தலைமுறை உச்ச நட்சத்திரங்கள் அக்கால சினிமாவிலும் அரசியலில் ஏற்படுத்திய தாக்கத்திற்குச் சற்றும் குறைவில்லாமல் இக்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறவர் விஜய். விஜய் செய்த சில செயல்கள் தமிழகத்தைக் கடந்து இந்தியா முழுவதுமே அதிர்வலைகளை ஏற்படுத்தின. அப்படி விஜய் செய்த சில முக்கியமான தரமான சம்பவங்களைப் பற்றி பார்ப்போம்.

 

பொதுவாக கோட்டைக்குச் செல்ல வேண்டும் என்றால் கோடம்பாக்கத்தின் உதவி தேவை என்ற பேச்சு தமிழக அரசியலில் காலங்காலமாகப் பரவலாகப் பேசப்பட்டு வரும் ஒரு சொல்லாடல். அந்த வகையில் எம்.ஜி.ஆர் கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் வரிசையில் நடிகர் விஜய்யும் கோட்டை வாசலை மிதிக்க வேண்டுமென அவரது ஒரு தரப்பு ரசிகர்கள் விரும்புகின்றனர். இதனை ரசிகர்கள் விரும்புவதை விட விஜய்யுமே  விரும்புகிறார் என்று கூட ஒரு தரப்பு கூறி வருகிறது. இதற்கு பிள்ளையார் சுழிப் போடும் வகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு விஜய் ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, இந்த இயக்கம் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் என அறிவித்தார் விஜய். இதற்கேற்றார் போல 2010க்கு பிறகு வெளியான விஜய்யின் பல படங்களில் அரசியல் வசனங்கள் ஆங்காங்கே அனல் பறக்கத் தொடங்கின. இது ரசிகர்களுக்கும் மிகப்பெரியா பூஸ்ட்டாக அமைந்தது. இந்த காலகட்டம் தான் தற்போது விஜய் செய்யும் சம்பவங்களுக்கான ஆரம்பப்புள்ளி எனலாம்.

 

தலையாய் அமைந்த தலைவா

கடந்த 2013 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் தலைவா படம் வெளியானது. பொதுவாக விஜய் படம் வெளியாகும் போது அவ்வப்போது சிறுசிறு சர்ச்சைகள் வருவது வழக்கம் என்றாலும், 'தலைவா' வுக்கு படத்தின் தலைப்பிலேயே சர்ச்சை வந்தது. 'டைம் டு லீட்' என்ற டேக் லைனுடன் வெளியான தலைவா படத்தின் டைட்டில் அப்போது மிகப்பெரிய பேசுபொருளானது. இந்த டேக் லைன் விஜய்யின் அரசியல் வருகைக்கான முடிவை உறுதி செய்துள்ளது என ரசிகர்கள் பேசத் தொடங்கினர். இந்த பேச்சு பெரிதாகவே, அப்போது இருந்த அதிமுக ஆட்சியால் படத்திற்கும் விஜய்க்கும் சில குடைச்சல்கள் கொடுக்கப்பட்டன. அதன்பின் அந்த டேக் லைன் நீக்கப்பட்டு, சில காட்சிகள் கத்தரிக்கப்பட்ட படம் வெளியானது. இந்த பிரச்சனையின் போது ரசிகர்களிடம் இருந்து விஜய்க்குக் கிடைத்த ஆதரவு பிற்காலங்களில் அவர் செய்யப்போகும் சம்பவங்களுக்குத் தலையாய் அமைந்தது என்றுகூடச் சொல்லலாம்.

 

அதிமுகவைத் தொடர்ந்து திமுக

அதிமுகவுடன் ஏற்பட்ட சிக்கல் ஓரளவுக்குத் தீர்ந்திருந்த சூழலில், அதற்கடுத்த ஆண்டே கத்தி படத்தில் விவசாயிகள் பிரச்சனை குறித்து ஆழமாகவும் அழுத்தமாகவும் பேசியிருப்பார். மேலும், இப்படத்தில் 2ஜி வழக்குகள் குறித்தும் விஜய் வசனங்கள் பேசியிருப்பார். இது திமுக தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்தாலும் படத்தைக் கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள், மிகப்பெரிய வெற்றியை விஜய்க்கு பரிசளித்தனர்.

 

பான் இந்தியா பிரச்சனை

அதுவரை தமிழகத்தில் மட்டுமே சம்பவம் செய்து கொண்டிருந்த விஜய் மெர்சல் திரைப்படம் மூலம் இந்திய அளவில் ட்ரெண்டானார். மருத்துவத் துறையில் நடைபெறும்  ஊழலை மையமாக வைத்து வெளியான இப்படத்தில் ஜி.எஸ்.டி க்கு எதிராக வசனம் பேசி மத்திய அரசைக் கண் சிவக்க வைத்தார். இது அன்றைக்கு மத்தியில் ஆளும் பாஜகவினர் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. பாஜக தலைவர்கள் தங்களுடைய கண்டங்களைப் பதிவு செய்தனர். இதற்கு எல்லாம் ஒருபடி மேலே சென்ற எச். ராஜா விஜய்யின் இயற்பெயரான ஜோசப் விஜய் என்பதைக் குறிப்பிட்டு அவர் மீது மத ரீதியிலான சாயத்தைப் பூசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் விஜய் மெர்சல் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு கடிதம் ஒன்றை வெளியிட்டார். இவ்விவகாரத்தில் ஸ்டாலின் தொடங்கி ராகுல் காந்தி வரை விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர்.

 

சர்க்காரும் முதல்வரும்

மெர்சலை தொடர்ந்து நடிகர் விஜய் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியீட்டிற்கு முன்பே மீண்டும் வெடித்தது ஒரு அரசியல் சர்ச்சை. அதற்கு காரணம் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய கருத்துக்கள் தான். ஆம், இந்த விழாவில், "எல்லாரும் கட்சி தொடங்கி, பிரச்சாரம் செய்துதான் தேர்தலில் நிப்பாங்க , ஆனால் நான் சர்க்கார் அமைத்துவிட்டுத் தேர்தலில் நிற்கிறேன். சர்க்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. நிஜத்தில் முதலமைச்சரானால் நான் நடிக்க மாட்டேன்" என்று பேசினார். இது பெரும் விவாதத்தை உண்டாக்கியது. இதுமட்டுமல்லாமல் படத்தில் வில்லியாக வரும் வரலட்சுமிக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி என்ற பெயரை வைத்ததற்காக அதிமுகவினர் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். இப்படி ரீலிலும், ரியலிலும் நிகழ்கால அரசியலையும் எதிர்கால திட்டங்களையும் கூறி அரசியல்வாதிகளை அதிரவைத்தார் சர்க்கார் விஜய். 

 

பிகில் மேடைப் பேச்சு

அடுத்ததாக மீண்டும் அட்லீயுடன் இணைந்த விஜய் பிகில் படத்தில் நடித்திருந்தார். வழக்கம் போல இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பேச்சுக்கள் அடுத்தநாளே பெரும் பேசுபொருளானது. அந்த விழாவில், "யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ, மக்கள் அவர்களை அங்குதான் உட்கார வைக்க வேண்டும்" என்று கூறினார். அத்துடன் அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற பெண் பலியானதைச் சுட்டிக்காட்டிய விஜய், "சுபஸ்ரீ விவகாரத்தில் யார் மீது பழி போட வேண்டுமோ, அதைச் செய்யாமல் லாரி ஓட்டுநர்கள் மீது பழி போடுகிறார்கள். சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுநர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுகிறார்கள்" என்றார். இது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், இதற்கு அப்போது தகவல் மற்றும் செய்தி தொடர்புத்துறை அமைச்சராக இருந்த கடம்பூர் ராஜு, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனிடையே வெளியான இப்படம் பெரும் ஹிட்டடித்து பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

 

இப்படி கிடைக்கிற கேப்பில் எல்லாம் அரசியல் பேசும் விஜய் அடுத்தாக மாஸ்டர் படத்தில் நடித்து வந்தார். அப்போது வருமான வரித்துறையினர் அதிரடியாக அவரது இடங்களில் சோதனை நடத்தினர். இதற்காக நெய்வேலி படப்பிடிப்பில் இருந்த விஜய் சென்னை அழைத்து வரப்பட்டு அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இறுதியாக நடைபெற்ற விசாரணையில் விஜய் வீட்டில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நெய்வேலியில் நடந்த படிப்பிடிப்பில் விஜய்யை பார்க்க தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான ரசிகர்கள் ஒன்றாகக் கூடினர். இதைப் பார்த்த விஜய் அவர்களுடன் அங்கிருந்த வேன் ஒன்றில் ஏறி செல்ஃபீ எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் இந்திய அளவில் வைரலானது.

 

இதனிடையே நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் வீட்டிற்குச் சென்று இரங்கல் தெரிவித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சைக்கிளில் சென்று வாக்களித்தார். இதனை விஜய் டீசல், பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வாக்களிக்க சைக்கிளில் சென்றதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தனர். இன்னும் சிலர் அவரது மாஸ்க் கலரில் குறியீடு இருப்பதாகக் கூறி அதனை டீகோடிங் செய்து கொண்டிருந்தனர். விஜய்யின் இந்த செயல் உள்ளூர் மீடியாவையும் தாண்டி நேஷனல் மீடியாவிலும் தலைப்பு செய்தியாக மாறிப் போனது. இப்படி விஜய் செய்யும் சிறு சிறு செயல்கள் கூட சினிமாவையும் தாண்டி அரசியல் வட்டாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்படி பல சம்பவங்களைச் செய்து எப்போதும் லைம் லைட்டில் இருக்கும் விஜய்க்கு இன்று பிறந்தநாள். திரைப்பிரபலங்கள் போல ரசிகர்களைப் போல் நாமும் வாழ்த்துவோம்.

 

 

 

 

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.