Skip to main content

அதிமுக அதிரடி பட்டாசு... திமுக பசுமை பட்டாசு - 2021 களம் யாருக்கு..? தேர்தல் தீபாவளியில் யாருக்கு வெற்றி?

Published on 13/11/2020 | Edited on 13/11/2020
பர

 

இன்றிலிருந்து இன்னும் சரியாக 40 வாரங்கள், தமிழகத்தின் புதிய முதல்வராக கோட்டையில் ஒருவர் பொறுபேற்றிருப்பார். இந்த ஒற்றை கேள்விக்கான தேடல்தான் கடந்த இரண்டு வருடங்களாக தமிழகத்தை சுழன்றடித்துக் கொண்டிருக்கும் கேள்வி. ஆனால், இந்த ஒற்றை கேள்விக்கு நாம் ஒரு வினாடியிலோ அல்லது சில நிமிடத்திலோ பதில் சொல்லிவிட முடியாது. கிட்டத்தட்ட பல வருட தமிழக அரசியலை பின்நோக்கிப் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆம், குமாரசாமி ராஜாவிடம் இருந்து அந்த வரலாற்றை தொடங்கினால்தான் இந்த தேடலில் முழு விடை கிடைக்காவிட்டாலும் ஒரு சிறு துப்பாவது கிடைக்கக் கூடும்.

 

சுதந்திரத்துக்கு பிறகு தமிழகத்தின் முதல் முதல்வர் அவர்தான். ஆனால் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்குப் பிறகுதான் அதாவது, தமிழகத்தின் தலைமகன் அண்ணா ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகுதான் தமிழகத்தின் அரசியல் போட்டிக் களம் விறுவிறுப்பாகியது எனலாம். ஆனால்,  காமராஜருக்கும் அண்ணாவுக்கும் இடையேயான அந்த அரசியல், லெட்சுமி வெடியை போல பொறுமையாகத்தான் வெடித்தது. அது எம்ஜிஆருக்கும், கலைஞருக்குமாக அரசியலாக மாறிய போதுதான் அது வான வெடியானது, அதுவே கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்குமான அரசியலாய் மாறியபோது, அது சரவெடியாய் வெடித்து சிதறியது. ஆனால் தற்போது தமிழக அரசியல் களம் தடை செய்யப்பட்ட சீனப் பட்டாசாய் உள்ளது. எந்த வெடி வெடிக்கும் என்பதை கண்டறிவதற்கே இன்னும் எட்டு மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால் வெடி வெடிக்கும், அது வெறும் கருப்பு சிவப்பு வெடியா அல்லது அண்ணா படத்தை தன்னகத்தே கொண்ட கருப்பு சிவப்பு வெடியா என்பதே, தற்போது எழுந்துள்ள மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இதற்கான பதிலை நாம் முழுவதுமாக கண்டறிய முடியாவிட்டாலும் கேள்வியின் ஆழத்தில் உள்ள உண்மையை புரிந்துகொள்ள 50களின் ஆரம்பத்தில் பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

 

ு

 

நாடு குடியரசு ஆனதற்குப் பிறகு தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களின் எண்ணிக்கை 15. தமிழகத்தை ஆண்ட முதல்வர்களின் எண்ணிக்கை 11. ஆம், 52-ஆம் ஆண்டில் இருந்து தமிழகம் பொதுதேர்தலை சந்தித்து வந்தாலும் 67ம் ஆண்டு தேர்தல்தான் ஓங்கி வெடிக்கும் அணுகுண்டாய் இருந்தது. அதுவரை தமிழகத்தில் காலூன்றி இருந்த காங்கிரஸ் என்ற பேரியக்கத்தை இன்றளவும் எழ முடியாத அளவுக்கு சுக்கு நூறாய் சிதறடித்திருந்தார் அண்ணா. இந்தியாவில் மற்ற மாநில கட்சிகள் எல்லாம் காங்கிரஸ், இந்திரா என்ற பத்தாயிரம் வாலா பட்டாசுக்கு பயந்திருந்த வேளையில், வானில் சீறிச் சென்று வெற்றி வெடி வெடித்தது  திமுக என்னும் ராக்கெட். இந்த பட்டாசு இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது. ஆனால் அதற்குப் போட்டியாக எம்ஜிஆர் என்ற கன்னி வெடி உருவாக்கிய அதிமுக என்ற ராக்கெட், அண்ணா உருவாக்கிய ராக்கெட்டை விட பல முறை அதிக சத்தமாக வெடித்துள்ளது, இன்றளவும் வெடித்துக்கொண்டே இருக்கிறது. தமிழக அரசியல் களம் என்பது அதிமுக என்ற அசைக்க முடியாத தொண்டர்கள் உள்ள கட்சிக்கும், கட்சி சாரா மக்களையும் தன்வசப்படும் ஆற்றல் உள்ள திமுக என்ற கட்சிக்கும் நடக்கின்ற சரவெடி போட்டியாகத்தான் தற்போதும் உள்ளது.

 

வல

 

தமிழக அரசியல் களத்தின் 'சங்கு சக்கர காலம்' என்றால் 77-ஆம் ஆண்டுக்கும் 89-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலம் எனலாம். ஆம், எம்ஜிஆர் என்ற சங்கு சக்கரம் திமுக என்ற தீயணைப்பானை அருகில் வராமல் 13 ஆண்டுகள் சுழன்று சுழன்று பார்த்துக்கொண்டது. எம்ஜிஆருக்கு எண்ணற்ற வெற்றிகள், இடையிடையே தோல்விகள் வந்தாலும் அதிமுக என்ற இரும்புக் கோட்டை சிதையாமல் பார்த்துகொண்டார். மறுபுறம் அணு ஆயுதமே வீசினாலும் திமுக என்ற இயக்கத்தை தட்டிப் பார்க்கலாமே ஒழிய, வெட்டி வீழ்த்தி விட முடியாது என்பதை இந்த 13 ஆண்டு காலத்தில் தன்னுடைய முன்னாள் நண்பர் எம்ஜிஆருக்கு பலமுறை தனக்கே உரிய பாணியில் நிரூபித்துக் காட்டினார் கலைஞர். இதில் எம்ஜிஆர் என்ற 'சங்கு சக்கரம்' மறைந்த பிறகு, சற்று நிம்மதி பெருமூச்சு விடலாம் என்று நினைத்த திமுகவுக்கு மத்தாப்பாய் வந்து பயம் காட்டினார் ஜெயலலிதா. கலைஞர், ஜெயலலிதாவுக்கு இடையேயான அரசியல் போட்டியில் பலமுறை ஜெயலலிதா என்ற வெடி உச்சம் தொட்டிருந்தாலும், கலைஞர் என்ற அரசியல் வெடி பலமுறை வெடிக்காமலே எதிரிக்கு பயம் காட்டியது. கிட்டத்தட்ட ஏழு தேர்தல்கள் இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்றிருந்தாலும் அதில் நான்கு முறை ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவே வெற்றி என்ற சாட்டைவாரை பிடித்திருந்தது. அபார வெற்றியை அதிமுகவும், கவுரவமான வெற்றியை திமுகவும் மாறிமாறி பெற்றிருந்தன. இதில் 2006ம் ஆண்டு தேர்தல் முடிவு திமுகவுக்கு மழையில் காய்ந்த வெடியாய் போனது. இருந்தும், கலைஞர் என்ற அணுகுண்டு அந்த வெடி மழையில் நனையவே இல்லை என்று கூறி தொடர்ந்து 5 ஆண்டுகள் எதிரி 'பிஜிலி வெடி'களை நம்பவைத்து ஆட்சி செய்தார்.

 

ரப

 

ஆனால் தற்போது ஜெயலலிதா, கலைஞர் என்ற சரவெடிகள் இயற்கை என்ற வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்தாலும், தமிழக அரசியல் களம் சிவகாசி மத்தாப்பாய் தகதகத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை தனியாக வெடித்து பழக்கப்படாத வெடிகளாக அதிமுகவும் திமுகவும் இருந்தாலும், திமுக என்ற வெடி கடந்த மக்களவை தேர்தலின் போது மக்களால் வெடிக்க தகுதியான பட்டாசு என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஜெயலலிதா என்ற அதிரடி வெடி ஏற்றிவைத்த "சீனி வெடிகளுக்கு" மக்கள் இதுவரை  பொதுத்தேர்தல்களில் அங்கீகாரம் வழங்கவில்லை. ஆனால் நாங்கள் அடுத்த முறை மட்டும் அல்ல, அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாங்கள்தான் என்று சீறுகிறார்கள் பாம்பு மாத்திரை மந்திரிகள். சிவகாசி வெடிக் கூட்டணி திமுக என்றால், சீன வெடிக் கூட்டணியாக உள்ளது அதிமுக கூட்டணி. எந்த கூட்டணி 'தேர்தல் தீபாவளி' வரை தொடரும் என்ற குழப்பம் ஒருபுறம் இருக்க, வெடிக்காத கூட்டணி வெடிகளை முன்னரே கழட்டிவிடவும் கணக்குப் போடுகிறார்கள் கழகங்களின் சில மூத்த ஓலை வெடிகள். எந்த வெடிகள் யாரிடம் இருந்தாலும் தேர்தல் முடிவு என்பது தமிழகத்துக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பயன்தரும் 'நாட்டு வெடி'யாக இருக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. நம்முடைய எதிர்பார்ப்பும் அதுவே!