Skip to main content

“சாதி மதம் பெண்களை அடிமைப்படுத்தவே... ஆண்களுக்கு விழிப்புணர்வு தேவை” - வனிதா ஐபிஎஸ்

 

 Vanitha IPS  Interview

 

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. புரட்சியாளர்கள் மூலம் எவ்வளவோ விழிப்புணர்வு வந்துவிட்டது. ஆனாலும் சமுதாயத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் இன்னும் அப்படியே தான் இருக்கின்றன. பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள், ஆண்களுக்கு ஏற்பட வேண்டிய விழிப்புணர்வு குறித்து நம்மோடு கூடுதல் காவல்துறை இயக்குநர் வனிதா ஐபிஎஸ் உரையாடுகிறார்.

 

என்னுடைய சொந்த ஊர் ராமநாதபுரம். வளர்ந்த ஊர் மதுரை. இரண்டும் வீரத்திற்குப் பெயர்போன ஊர்கள் தான். ஆனால், வீரம் என்றாலே அது ஆண்களோடுதான் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகிறது. மனதில் அதீத தைரியத்தோடு செயல்படும் பெண்கள் ஒரு காலத்தில் ஆண்களின் வெற்றிக்குப் பின்னால் இருந்தார்கள். இப்போது அவர்களே வெளியே வந்து சாதிக்கிறார்கள். மகாகவி பாரதியாரும், தந்தை பெரியாரும் தான் எனக்கு பெரிய ரோல்மாடல்கள். திருமணம் பல நேரங்களில் பெண்கள் சாதிப்பதற்கு இடையூறாக இருக்கிறது. திருமணம் குறித்த என்னுடைய புரிதலை முற்றிலும் மாற்றியது தந்தை பெரியார் தான்.

 

பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் இயங்குகின்றனர். திருமணமான பிறகு ஆண், பெண் இருவரும் வேலைக்குச் செல்லும் நிலை வரும்போது குடும்பத்தை நிர்வகிப்பதற்காக பெண்கள் தான் தங்களுடைய வேலையை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. குடும்பத்தையும் வேலையையும் ஒன்றாக நிர்வகிக்க முடியும் என்கிற நம்பிக்கை பலருக்கு இல்லை. பெண்களுக்கான சிறை மனதில் தான் இருக்கிறது. சதி, குழந்தைத் திருமணம் போன்றவற்றிலிருந்து விடுபடுவதற்குப் பெரிய போராட்டங்கள் தேவைப்பட்டன. அப்போதுதான் அவர்களுக்கு 'விடுதலை' தேவைப்பட்டது.

 

ஒரு பெண் ஏன் தன்னுடைய சுதந்திரத்தை ஆணிடமிருந்து வாங்க வேண்டும்? ஆண்கள் செய்யும் தவறுகளை நாங்களும் செய்ய வேண்டும் என்பதுதான் தற்போது பெண் சுதந்திரமாகக் கருதப்படுகிறது. மேலைநாட்டு உடைகள் அணிவதிலும் பெண் சுதந்திரம் இருப்பதாக நினைக்கிறார்கள். ஒரு காலத்தில் இன்ஜினியரிங் ஆண்களுக்கான துறையாகத் தான் இருந்தது. மருத்துவப் படிப்பும் அப்படித்தான் இருந்தது. இப்போது நிலைமை மாறி வருகிறது. தங்களுடைய பலத்தை மேலும் அதிகரித்து அதன் மூலம் பெண்கள் வளர வேண்டும்.

 

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பெண் குழந்தைகளின் பிறப்பு வீதம், கல்வி கற்பது, வேலைக்குச் செல்வது என அனைத்தும் அதிகம். நம்முடைய அரசாங்கங்கள் தொடர்ந்து சமூகநீதியைத் தூக்கிப் பிடிப்பவையாக உள்ளன. அனைத்து இடங்களிலும் தற்போது பெண்கள் இருக்கின்றனர். அவர்களின் மனத்தடை நீங்கியுள்ளது. பெரியார் சொன்ன பல கருத்துக்கள் அப்போது ஏற்கப்படவில்லை. அதனுடைய மகத்துவம் இப்போது புரிகிறது. தமிழ்நாட்டில் இருந்தது போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் வேறு எங்குமே இல்லை.

 

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து நான் வந்திருக்கிறேன். யாருக்கும் நான் அடிமை இல்லை என்கிற எண்ணம் எனக்கு வந்தது பெரியாரால் தான். பெரியார் எதையும் யார் மீதும் திணித்ததில்லை. திருமணம் என்பதே ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான இலக்கு அல்ல என்று உணர்த்தியவர் பெரியார். கற்பு என்கிற விஷயத்தை வைத்து தான் பெண்களை அடிமைப்படுத்தினர். கலப்புத் திருமணத்தை ஆதரித்தவர் பெரியார். அவர் கூறிய பல விஷயங்கள் ஆண்களை விட, ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு அதிகம் புரியும்.

 

அவரைப் போலவே அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரும் பல்வேறு காலங்களில் பெண்களுக்கு உந்துசக்தியாக இருந்திருக்கின்றனர். ஆண்கள் செய்யும் அனைத்தையும் இந்த சமூகம் எளிதாகக் கடந்து செல்லும். ஆண்கள் போலவே ஒரு பெண்ணும் சகஜமாக அனைவரோடும் பேசினால் அவளை ரவுடி என்று சொல்வார்கள். பெண்களை மீண்டும் மீண்டும் அடிமைப்படுத்தவே இந்த சமூகம் விரும்புகிறது. மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் தொடர்ந்து ஒடுக்கப்படுவது பெண்கள்தான். நீயும் நானும் சமம் என்று சொன்னதால் தான் தந்தை பெரியார் ஆதிக்கவாதிகளால் அதிகமாக விமர்சிக்கப்படுகிறார்.

 

ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் என்று பிரிப்பது தான் தவறு. மனிதரை மனிதராக மதிக்க அனைவருக்கும் கற்றுத் தர வேண்டும். ஆண், பெண் இருவரையும் சமமாக மதித்து வளர்க்க வேண்டும். சமையற்காரராக வேலை செய்பவர்கள் கூட வீட்டில் பெண்களைத் தான் சமைக்கச் சொல்வார்கள். ஆணாதிக்கத்தின் குறியீடு இது. உடல் மீதான உரிமை தங்களுக்கு இருக்கிறது என்று தெரியாமலேயே பல பெண்கள் வாழ்கின்றனர். எதையுமே அடுத்தவருக்காகத் தான் நாம் செய்கிறோம். ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை அனைத்து பெண்களும் உணர வேண்டும்.

 


 

இதை படிக்காம போயிடாதீங்க !