Skip to main content

“ரவுடியிஸம் பற்றி சொல்வதற்கு தகுதியே இல்லாத கட்சி திமுக...” வானதி சீனிவாசன் ஆவேசம்...

Published on 27/08/2020 | Edited on 28/08/2020
Vanathi Srinivasan

 

 

ஆகஸ்ட் 24ல் நடந்த தமிழக பா.ஜ.க மாநில செயற்குழு கூட்டத்தில், ''தேசிய மற்றும் தமிழக வளர்ச்சிக்கு தி.மு.க தடையாக இருக்கிறது. நாட்டின் நலனுக்காக உழைக்காதவர்களுக்கு, புகலிடமாக தி.மு.க உள்ளது. அவர்களுக்கு பதிலடி கொடுக்க நாம் விழிப்புடன் செயல்பட வேண்டும் என குறிப்பிட்டார் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா. இதற்கு உடனடியாக, தமிழகத்தின் பண்பாட்டிற்கும், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பா.ஜ.க. என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பான அறிக்கை வெளியிட்டிருந்தார். திமுகவில் மேலும் பல நிர்வாகிகள் நட்டாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து கருத்துக்களைப் பதிவு செய்திருந்தனர்.

 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் பாஜகவின் தமிழக மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன்.

 

பாஜக செயற்குழுவில் பேசிய ஜெ.பி.நட்டா, கட்சி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தராமல் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தது ஏன்...

 

“தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ், தேசிய தலைவர் நட்டாவும் ஒருமித்த குரலில் திமுகவை ஆட்சிக்கு வரவிடமாட்டோம் என்ற தெளிவான அரசியல் வழிகாட்டுதலை செயற்குழுக் கூட்டத்தில் கூறியிருக்கிறார்கள். அரசியல் கட்சியினுடைய செயற்குழுவிற்கு செயல் திட்டங்களை வகுப்பது மட்டுமல்ல, மக்களுக்கு யார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அடையாளம் காட்ட வேண்டிய பொறுப்பும் உள்ளது. அந்த வகையில் தேசிய தலைவர், திமுக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கிற வாயிலாக வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் தடையாக இருக்கிறார்கள் என்பதை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். 

 

திமுக மத்திய கூட்டணி அரசில் இருந்தார்கள். சக்தி வாய்ந்த துறைகள் அவர்களிடம் இருந்தது. கல்வியை மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றியது தவறு. மத்திய பட்டியலில் இருந்து முழுமையாக கொண்டுவர வேண்டும் என்கிறார்கள். இவர்களும் 10 வருடம் ஆட்சியில் இருந்தவர்கள்தான். அப்போது அதைப் பற்றி எதுவுமே பேசாமல் இன்று கல்வி பட்டியல் பற்றி கவலைப்படுவது ஏன்? 

 

bjp

 

தமிழகத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்களைவிட அதிகமான நிதி திட்டங்களை மத்தியில் உள்ள மோடி அரசு ஒதுக்கியுள்ளது. ஸ்மார்ட் சிட்டிகள், அம்ருத் திட்டம், 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி மற்றும் நிதி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்,  ரூபாய் 5 லட்சம் கோடிக்கு மேலாக தமிழகத்திற்கு நிதி வழங்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூபாய் 6 ஆயிரம், பெண்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்கு, விலையில்லா எரிவாயு, மாணவர்களுக்கு வித்தியலட்சுமி கடன் உதவி திட்டம், அவர்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் உதவி, விவசாயத்தை சார்ந்து இருக்கும் மாடுகள் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு கிசான் கடன் அட்டை உள்ளிட்ட திட்டங்களைக் கொடுத்திருக்கிற பிரதமரை எப்போது பார்த்தாலும் தமிழகத்திற்கு எதிராக இருக்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். அதனால் நாங்கள் சொல்கிறோம், இந்த வளர்ச்சிகளை பொறுத்துக்கொள்ளமால் ஸ்டாலின் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். அதை மனதில் வைத்துதான் எங்கள் தேசிய தலைவர் அந்த வார்த்தையை கூறினார். 

 

குடும்பத்தின் உறுப்பினர்கள் பொறுப்புக்கு வருவது சமூக நீதியா? பாராளுமன்ற உறுப்பினர்களெல்லாம் கட்சியின் தலைவர்களுடைய வாரிசுகளுக்கு வழங்குவது சமூக நீதியா? பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை மாநிலத் தலைவராக்கி ஒரு அங்கீகாரத்தை கொடுக்கிறது பாஜக.” 

 

தமிழகத்தின் பண்பாட்டிற்கும், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பா.ஜ.க. என நட்டாவுக்கு பதில் அளித்திருக்கிறாரே ஸ்டாலின்... மேலும் மத்திய பாஜக அரசு கொண்டு வரும் புதிய கல்விக்கொள்கை உள்பட சில திட்டங்களை எதற்காக எதிர்க்கிறோம் என்ற காரணத்தையும் எதிர்க்கட்சிகள் சொல்கிறார்களே...

 

“அரசியல் பண்பாட்டை ஒட்டுமொத்தமாக சீர்குலைத்தது திமுக. அவர்களுடைய அரசியல் யாருக்கு பலனளித்திருக்கிறது என்றால் திமுக தலைவர்கள், நிர்வாகிகள் பலன் பெற்றிருக்கிறார்கள். இரண்டு மொழிகள் படித்தால் போதும் என்று ஏழைகளுக்கு சொல்லிவிட்டு அவர்கள் நடத்துகின்ற பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பணம் பெற்றுக்கொண்டு மூன்றாவது மொழியை கற்றுக்கொடுக்கிறார்கள். அவர்கள் நடத்தும் நிறுவனங்களில் தமிழ் வளர்வதை காண முடியவில்லை. தமிழ் பெயர், தமிழ் மொழியை காணவில்லை. ஆனால் பாஜக மீது மொழி ரீதியான அரசியலை முன்னெடுக்கிறார்கள். 

 

புதிய கல்விக் கொள்கையில் எந்த மொழித்திணிப்பும் இல்லை. எந்த மொழியை வேண்டுமானாலும் 3வது மொழியாக கற்றுக்கொள்ளலாம் என்பதுதான் அதன் சாராம்சம். புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள். மற்ற மாநிலங்களில் 3வதாக ஒரு மொழியை தேர்வு செய்ததால் அவர்களது தாய்மொழி அழிந்ததா? உலகத்தின் மிக மூத்த மொழிக்கு நாம் சொந்தக்காரர்கள். தமிழ் மொழியை மற்ற மாநிலத்தவர்களும் படிப்பதற்கான ஒரு வாய்ப்பு உருவாகியிருக்கிறது. தமிழ் படித்தால் வேலைக் கிடைக்காது என்ற நிலையை உருவாக்கியது இங்குள்ள திராவிடக் கட்சிகளின் சாதனை.”

 

ஆளும் அதிமுக அரசும் இதனை எதிர்க்கிறதே?

 

“அதிமுகவுக்கு நாங்கள் வேண்டுகோள் வைத்திருக்கிறோம். உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள். காலத்தின் தேவையை புரிந்துகொள்ளுங்கள். எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என்ற வாய்ப்பை குழந்தைகளுக்கு கொடுங்கள். வசதிப்படைத்தவர்கள் சி.பி.எஸ்.சி.யில் கற்றுக்கொள்கிறார்கள். அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகள் நிலையை பாருங்கள் என சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம்.”

 

இந்தி-சமஸ்கிருத திணிப்பு என்பது தொல்காப்பியர் -நாயன்மார்கள்-ஆழ்வார்கள் இவர்கள் வகுத்த தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிராக இருக்கிறதே? 

 

“நாயன்மார்கள், ஆழ்வார்கள், தேவாரம், திருவாசகம், தொல்காப்பியம், கம்பராமாயணம் இவையெல்லாம் தமிழர்களின் அடையாளங்கள். இதுதான் பண்பாடு. இதைப்பற்றி திமுக தலைவர்கள் என்றாவது யோசித்திருக்கிறார்களா? இதையெல்லாம் ஒட்டுமொத்தமாக சிதைத்தது திமுக தலைவர்கள், அவர்களுடைய சித்தாந்தம்.”

 

அபின் கடத்தல்-குண்டாஸ் பேர்வழிகள் தமிழக பாஜகவுக்குள் முக்கியத்துவம் பெறுவதாக விமர்சனங்கள் எழுகிறதே?

 

“ஒரு கட்சியில் ஒருவர் இணைவதற்கு முன்பாக குற்றவாளியாக இருந்திருக்கலாம். அவர் தனது வாழ்க்கையில் திருந்தி வாழ்கிறேன் எனக் கூறிவிட்டு, அதற்கு பின்பாக கட்சியில் இணைக்கிறார். ரவுடியிஸம் பற்றி குறை சொல்வதற்கு திமுக தகுதியே இல்லாத கட்சி. அரசியலில் ரவுடியிஸத்தை கொண்டு வந்ததே திமுகதான். பாஜகவில் தற்போது நிறைய பேர் இணைந்து வருகிறார்கள். திரைநட்சத்திரங்கள், பிரபலங்கள், முன்னாள் உயர் அதிகாரிகள், முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மந்திரிகள் எல்லோரும் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்”.

 

 

 

 

Next Story

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; பாஜக நிர்வாகி அஞ்சலை கைது

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
nn

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

மீதமுள்ள 10 பேர் பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக இந்த கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  இதில் வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவரும், தாதாவின் மனைவி மலர்க்கொடி என்பவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த கொலை தொடர்பாக பாஜகவினுடைய வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியிலிருந்த அஞ்சலை என்பவரை போலீசார் தேடிவந்தனர். 

nn

தொடர்ந்து பாஜகவின் வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியில் இருந்து அஞ்சலை நீக்கப்படுவதாக கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேநேரம் ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த எல்லப்பன் என்ற ரவுடியையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

“இஸ்லாமியர்களின் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை” - அசாம் முதல்வரின் சர்ச்சை பேச்சு

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Controversial speech of Assam Chief Minister about islam people

அசாம் மாநிலத்தில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் அவ்வப்போது, இஸ்லாமியர்கள் அவதூறாகவும், கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் அதிக பெரும்பான்மை மக்களாக இஸ்லாமிய மக்கள் இருக்கிறார்கள் என்று கூறியது சர்ச்சையாக மாறியுள்ளது. 

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, “2041-க்குள் அசாம், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலமாக மாறும். இது நிஜம், யாராலும் தடுக்க முடியாது. மாநிலத்தில் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் இஸ்லாமிய மக்கள் தொகை சுமார் 30 சதவீதம் அதிகரித்து வருகிறது. புள்ளிவிவர மாதிரியின்படி அசாமின் மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் இப்போது 40 சதவீதமாகிவிட்டனர். எனது அரசாங்கம் இஸ்லாமியர்கள் மத்தியில் மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனால், ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் இந்து சமூகத்தின் மக்கள்தொகை சுமார் 16 சதவீதம் அதிகரித்து வருகிறது. இஸ்லாமியர்களின் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் காங்கிரஸுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. ராகுல் காந்தி மக்கள் தொகைக் கட்டுப்பாட்டின் பிராண்ட் அம்பாசிடராக மாறினால், அவர் சொல்வதை மட்டுமே கேட்கும் சமூகத்தினரை அது கட்டுப்படுத்தும். மாநிலத்தின் மக்கள்தொகையில் ஏற்பட்ட மாற்றம் ஒரு பெரிய பிரச்சினை. நாம் பல மாவட்டங்களை இழந்துள்ளோம். இது எனக்கு அரசியல் பிரச்சினை அல்ல. இது எனக்கு வாழ்வா? சாவா? பிரச்சனை” எனப் பேசினார். இஸ்லாமியர்களின் மக்கள் தொகை குறித்து பா.ஜ.க முதல்வர் பேசியிருப்பது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.