உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற சம்பவம் சில நாட்களாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் அடுத்தகட்டமாக அண்ணாமலையின் வாட்ச் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரபேல் போர் விமானத்தைத் தயாரித்த நிறுவனம் உருவாக்கியதாக அண்ணாமலையால் கூறப்பட்ட அந்த வாட்ச் உலகத்திலேயே மொத்தம் 500 மட்டுமே இருப்பதாகக் கூறியுள்ளார். இந்த வாட்ச் விலை 5 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகின்ற நிலையில், இந்த வாட்ச் வாங்கியதற்கான பில்லை வெளியிடும் படி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். ஆனால் அதுதொடர்பாக பேசாத அவர், அமைச்சர்களின் சொத்துக்கணக்கை வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "எங்கள் அமைச்சர்கள் மீது சொத்துக்கணக்கை வெளியிடுவேன் என்று தொடர்ந்து கூறிவருகிறார். அவர் சொத்துக்கணக்கை மட்டும் அல்ல, எந்தக் கணக்கை வேண்டுமானாலும் வெளியிடட்டும். அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை.
நாங்கள் ஒன்றும் மற்றவர்களைப் போல் சமூக விரோத காரியங்கள் செய்யவில்லை. இன்றைக்கு இவர்களைப் போல் ரவுடிகளையும், சட்டவிரோத காரியங்கள் செய்பவர்களை தேடித்தேடிப் போய் கட்சியில் சேர்க்கவில்லை. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, கஞ்சா விற்பவன் எந்தக் கட்சியில் இருக்கிறான் என்று பார்த்தால் அவனெல்லாம் பாஜகவில் உறுப்பினராக இருக்கிறான். இந்த லட்சணத்தில் கட்சியை வைத்துக்கொண்டு அடுத்த கட்சிக்காரர்களை விமர்சனம் செய்து வருகிறார் அண்ணாமலை. இப்போது பில்லை கேட்டால் நடைப்பயணம் போறேன் என்கிறார். அண்ணாமலைக்கு சுகர் அதிகமாக இருப்பதனால் போகிறார் போல என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அண்ணாமலை பேசுவதை நீங்கள் எப்போதாவது கூர்ந்து பார்த்திருக்கிறீர்களா?
அண்ணாமலை பேசுகிறார் என்றாலே தொலைக்காட்சியில் வேலை செய்பவர்கள், ரிப்போர்ட்டர், யூடியூப் வைத்திருப்பவர்கள் எல்லாம் அடித்துப் பிடித்துப் போவது எதற்காக என்று நினைக்கிறீர்கள், ஒரு அரை மணி நேரம் வாயில் வந்ததை எல்லாம் பேசுவார். காமெடியாக பொய் பேசுவதைக் கேட்டுவிட்டு வரலாம் என்ற நினைப்பில் போகிறார்கள். அதைத்தவிர அவர் பேசுவதைக் கேட்டு என்ன அறிவையா வளர்த்துக்கொள்ள முடியப் போகிறது? வடிவேல் அவர்களை போல் இவர் பேசுவதைப் பார்த்தால் கூட அதற்கு இணையான சிரிப்பு வர வைப்பார். எனவே இவர் எந்த காலத்திலேயும் அரசியல் தலைவராக மாறவே முடியாது. அரசியல் காமெடியனாகவே எப்போதும் இருப்பார் என்பதில் மட்டும் உறுதியாகச் சொல்கிறேன்" என்றார்.