Skip to main content

கனடா கவிஞர் மணிமேகலை கைலைவாசனுக்கு மாண்புறு தமிழர் விருது!

Published on 02/03/2020 | Edited on 02/03/2020
m

 

சென்னை வடபழனி மேப்பிள் ட்ரீ ஓட்டலில், நந்தவனம் பதிப்பகத்தின் வெளியீடான கனடா கவிஞர் மணிமேகலை கைலைவாசன் எழுதிய ’எழுதுகோல் பேசுகிறேன்’, ’ஒரு மழை நாளும் சில தூறல்களும்’ஆகிய இரு நூல்களில் வெளியீட்டு விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. காவியா காடி நாட்டியப் பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. 


பன்முகக் கலைஞர் பிரேமா கார்த்திகேயன் இனிய தமிழில் வரவேற்புரையாற்ற, கவிஞர் நந்தவனம் சந்திரசேகரன் விழாவை சுவைபடத் தொகுத்து வழங்கினார். அப்போது “கவிதை எழுதுவதை விட கவிதையாக வாழ்வது சிறந்தது. கவிஞர் மணிமேகலை கவிதைகளை எழுதுவதோடு கவிதையாகவும்  வாழ்ந்துகாட்டுகிறார்” என்று அவர் வாழ்த்தினார். 

 

m


மணல்மேல்குடி  அன்னை கதீஜா மகளிர் கல்லூரி முதல்வர் சுமதி நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். அவர் தன் உரையில்... கவிதை உலகின் இன்றைய போக்கு குறித்தும், கவிக்கோ அப்துல்ரகுமான் கவிதைகள் குறித்தும் சுட்டிக் காட்டியதோடு... ”மணிமேகலையின் கவிதை காதலைத்  தாலாட்டுகிறது.  இப்படிப்பட்ட உயர்ந்த, சிறந்த கவிதை வரிகள் தமிழுக்கு  நலம் பயக்கும். எனக்கு அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால், நான் அப்போது  மணிமேகலையின் காதலராகப் பிறக்க ஆசைப்படுகிறேன். அந்த அளவிற்கு அவரது கவிதைகள் ஈர்க்கின்றன” என்று சொல்லி அவையைக் கலகலப்பாக்கினார்.


நூல்களின் வெளியீட்டுக்குப் பின் நந்தவனம் பவுண்டேசன் சார்பில் கவிஞர் மணிமேகலை கைலைவாசனுக்கு மாண்புறு தமிழர் விருதை கவியரசர் கண்ணதாசனின் புதல்வர் கோபி கண்ணதாசனும் ஆரூர் தமிழ்நாடனும் இணைந்து வழங்கினர். நூலின் முதல் படிகளை தொழிலதிபர்களான லிம்ரா பேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் எம்.சாதிக்பாட்சாவும், ராஜேந்திரன் டிம்பர் டிரேடர்ஸ் உரிமையாளர் கே.எம்.ராஜேந்திரனும் பெற்றுகொண்டனர்.

 

m


வாழ்த்துரை வழங்கிய கவிஞர் தென்றல் ”எனக்கு முகநூல் மூலம் சுடர்வீசும் முத்தாகக் கிடைத்தவர் மணிமேகலை. அவரது கவிதைகளின் ரசிகை நான். அவர் கவிதை கலைபப்டிக்கவில்லை என்றால் அன்றைய நாள் எனக்கு சுவையாகக் கழியாது.  அவரைப் பாராட்டவேண்டும் என்றுதான், என் வேலைச் சுமைகளுக்கு மத்தியில் சிவகங்கையில் இருந்து  ஓடி வந்திருக்கிறேன்” என்று வாழ்த்தினார்.


கோபி கண்ணதாசனோ” மணிமேகலை அட்சய பத்திரம் போல் அன்பைச் சொரிபவர். கனடாவுக்குப் போகும் போதெல்லாம் அவர் அன்போடு அழைத்துச்சென்று விருந்துகொடுத்து உபசரிப்பார்” என்று கவிஞரின் விருந்தோம்பலைப் பாராட்டிவிட்டு, கவியரசரின் நினைவுகளையும் கவிதைகளையும்  சுவையாகப் பகிர்ந்தார்.


மூத்த  தமிழறிஞர் முனைவர் நா. நளினிதேவியோ ’அந்தக் கால மணிமேகலையின் கைகளில் அட்சயபாத்திரம் இருந்தது. இப்போதைய நம் மணிமேகலையின் கைகளில் தமிழுக்கு விருந்து கொடுக்கும் கவிதையெனும் அட்சயபாத்திரம் இருக்கிறது” என்று வாழ்த்தி மகிழ்ந்தார்.


மணிமேகலையின் ’எழுதுகோல் பேசுகிறேன்’ நூல் குறித்த திறனாய்வை வழங்கிய கவிஞர் பாரதி பத்மாவதி, தன் உரையை சுவைபட வழங்கினார்.அப்போது ‘வாழ்க்கையின் காசோலையில் இறைவனின் கையெழுதுதான் புன்னகை. அந்தப் புன்னகையை தன் ஏழுத்துக்களின் வழியாகவும் மலர்த்துகிறார் நம் மணிமேகலையம்மா” என்று கவித்துவமாய்க் குறிப்பிட்டார்.


கவிஞரின் ’மழைநாளும் சில தூறல்களும் நூல் குறித்து திறனாய்வுரை வழங்கிய ’கல்வெட்டு பேசுகிறேன்’ இதழாசிரியர் சொர்ணபாரதி “இந்த நூலை காதலுக்கு அர்ப்பணம் என்று கவிஞர் மணிமேகலை குறிப்பிட்டிருக்கிறார். எனக்குத் தெரிந்து பாடு பொருளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட  நூல் இதுதான்.  ஆதாம் ஏவால் ஆடையற்று இருந்த போது... உலகம் அமைதியாகத்தான் இருந்தது. அவர்களுக்கு சத்தான் ஆடைகளை வழங்கிய பிறகுதான் மனித மணங்கள் நிர்வாணமாகிவிட்டது. அதன் பிறகுதான் கோளாறுகள் தொடங்கிவிட்டன. மணிமேகலையின்  கவிதைகள், சைவக் கவிதைகளால் மால்ர்ந்து காதலை உயர்வுசெய்கின்றன”என்று பாராட்டினார்.


தேனியில் வந்திருந்த கவிஞர் புருசோத்தம குமரகுருவோ “ முகநூலில் கவிஞர் மணிமேகலை கவிதைகளை எழுதும் வேகம் அலாதியானது. அவரது கவிதையை ரசித்து நம் கருத்துக்களைப் பதிவிட்டு முடிப்பதற்குள் அவரது அடுத்த கவிதை அங்கே மலர்ந்திருக்கும். அவரைப் பாராட்டிப் பேசக்கிடைத்த வாய்ப்பை, நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்’ என்று நெகிழ்ந்தார். 


நிறைவாக வாழ்த்திய நக்கீரன் முதன்மைத் துணை ஆசியரான  ஆரூர் தமிழ்நாடன் ”மணிமேகலை ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர். தன் குடும்பத்தினரையும் உறவுகளையும் பிரிந்த வலியை அனுபவித்தவர். அவரது தந்தையார் என்ன ஆனார் என்றே தெரியாத நிலை.  போர்க்களத்தில் தொலைந்து போன தன் தந்தையைத் தேடி, அவர் ஆண்டுதோறும் இலங்கைக்கு வந்துகொண்டிருக்கிறார். வலிகளையும் காயங்களையும் சுமந்த போதும், அவர் புன்னகையையும் தன்னம்பிக்கையையும் மட்டுமே  தன் கவிதைகளில் விதைக்கிறார்.இப்படிப்பட்ட தன்னம்பிக்கை மிக்க பெண் கவிஞர்கள், திரைப் படங்களுக்கும் பாட்டெழுத முன்வரவேண்டும்” என்று பாராட்டினார். ஏற்புரையாற்றிய கவிஞர் மணிமேகலை “என் அன்னைக்கும் தந்தைக்கும் என் அன்பான முதல் வணக்கம்.

 

என் பிள்ளைகள், துணைவர் உள்ளிட்ட குடும்பத்தினரின் ஒத்துழைப்பால்தான் என்னால் இலக்கியத்திலும் நிம்மதியாய் இயங்க முடிகிறது. கனடாவில் சாப்பிடக் கூட நேரமில்லாமல் இயங்கிக்கொண்டே இருக்கிறேன். அதற்கெல்லாம் எனக்கு ஆறுதலாக, களைப்பைப் போக்கும் தென்றலாக எனக்கு இருப்பது இலக்கியம்தான். நான் தொடர்ந்து எழுதுவேன்.” என்று நெகிழ்ந்தார். 


நூல் விற்பனை மூலம் கிடைத்த தொகை, மாற்றுத் திறனாளியான பாலசுந்தரத்திற்கு வழங்கப்பட்டது. சுவையான விருந்தோடு நூல்வெளியீட்டு நிகழ்வுகள் நிறைவடைந்தன.  கோடை வெப்பத்திற்கு இதமாக, இலக்கிய மழையில் நனைத்த நிகழ்ச்சி இது.


-கதிரவன்   
 

சார்ந்த செய்திகள்