Skip to main content

வெமுலா தற்கொலைக்கு பழிதீர்த்த பல்கலை.!

Published on 23/09/2017 | Edited on 23/09/2017
வெமுலா தற்கொலைக்கு பழிதீர்த்த ஹைதராபாத் பல்கலை.!



ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலாவை தற்கொலைக்கு தள்ளிய சாதிவெறிக்கு அந்த பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் சரியான அடி கிடைத்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவரான ரோகித் வெமுலா அம்பேத்கர் மாணவர் அமைப்பு சார்பாக செயல்பட்டதால் பாஜக ஆதரவு மாணவர் அமைப்பினர் மற்றும் மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தால் பழிவாங்கப்பட்டார்.

இதையடுத்து அவர் 2016 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாணவர்களை சாதிரீதியாக பிரித்தாள காவிகள் இந்த சதித்திட்டத்தை தீட்டியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்நிலையில் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக ஆதரவு மாணவர் அமைப்பான ஏபிவிபி ஓபிசி மாணவர்கள் அமைப்புடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதன்மூலம் உயர்சாதி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களை ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டது.

ஆனால், இந்த கூட்டணிக்கு மாற்றாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐ தலைமையில் அம்பேத்கர் மாணவர் அமைப்பு, தலித் மாணவர்கள் அமைப்பு ஆகியவை இணைந்து சமூகநீதிக்கான கூட்டணி என்ற பெயரில் தேர்தலைச் சந்தித்தித்தது. இந்த தேர்தலில் மாணவர் சங்கத்தின் அனைத்து பதவிகளையும் சமூகநீதிக்கான கூட்டணியைச் சேர்ந்த மாணவர்கள் கைப்பற்றி சாதனை படைத்தனர்.

காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு தலைவர் பதவிக்கு மட்டும் போட்டியிட்டு தோல்வி அடைந்தது.

இந்தத் தேர்தலில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் காவிகளின் சதி முற்றாக துடைத்தெறியப்படவில்லை என்பதுதான். போட்டியிட்ட அனைத்து பதவிகளிலும் சமூகநீதிக்கான அணி வேட்பாளர்களிடம் 400 முதல் 500 வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஏபிவிபி கூட்டணி தோல்வி அடைந்திருக்கிறது.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சமூகநீதி அணி வேட்பாளர் ஸ்ரீராக் 1509 வாக்குகளும் ஏபிவிபி-ஓபிசி அணி வேட்பாளர் 1349 வாக்குகளும் பெற்றுள்ளனர். வெறும் 160 வாக்குகள் மட்டுமே வித்தியாசம்.

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட சமூகநீதி அணி வேட்பாளர் ஆரிப் அகமது 1982 வாக்குகளும், காவிக்கூட்டணி வேட்பாளர் 1573 வாக்குகளும் பெற்றனர்.

காவிகளின் சதித்திட்டத்தை பதவி ஆசைகளை துறந்து, பெரியவர் சிறியவர் என்பதை மறந்து வாக்குகள் எந்த வகையிலும் சிதறிவிடாமல் அணி அமைத்தால் மட்டுமே துடைத்தெறிய முடியும் என்பதை உணர வேண்டிய நேரம் இது.

- ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்