Skip to main content

தமாகாவுக்கு நெருக்கடி தந்த எடப்பாடி! - நடந்தது என்ன?

Published on 11/03/2021 | Edited on 12/03/2021

 

ஜி கே வாசன்

 

அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் எண்ணிக்கையை முடிவு செய்வதிலும், தொகுதிகளை ஒதுக்குவதிலும் கறாராக இருந்த எடப்பாடி, த.மா.கா.வுக்கு எண்ணிக்கையையே சொல்லாமல் இழுத்தடித்தபடியே இருந்தார். இந்த நிலையில், கடந்த 9-ந்தேதி, 'தமாகாவுக்கு 3 சீட் ஒதுக்குகிறோம்; இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுங்கள்' என வாசனிடம் அதிமுக தலைமை சொன்னது. ஜெயலலிதா பாணியை வாசனிடம் கடைப்பிடித்தார் எடப்பாடி. 


அதாவது, கடந்த 2016 தேர்தலில் வாசனுக்கு 5 சீட்டு கொடுக்க சம்மதித்த ஜெயலலிதா, இரட்டை இலையில் போட்டியிட வலியுறுத்தினார். தனிச் சின்னத்தில்தான் போட்டியிட விரும்புகிறோம் என வாசன் வலியுறுத்தியபோதும், ஜெயலலிதா அதை ஏற்கவில்லை. இதனால், அதிமுகவுடன் கூட்டணி வைக்காமல் மக்கள் நலக் கூட்டணிக்குத் தாவினார் ஜி.கே.வாசன். 


அதேபோல, இந்த தேர்தலில் ஜெயலலிதா வலியுறுத்தியது போலவே எடப்பாடி தகவல் சொல்லியனுப்பியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் வாசன். அவரை பொறுத்தவரை, 12 சீட்டுகளில் போட்டியிட விரும்பி, த.மா.கா.வின் விருப்பப் பட்டியலையும் ஏற்கனவே எடப்பாடியிடம் ஒப்படைத்திருந்தார். 


இதனை, அமைச்சர்களுடன் அலசி ஆராய்ந்த எடப்பாடி, "ஏற்கனவே வாசனுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்தாச்சு. ராஜ்யசபா சீட்டுக்காக அவருக்கு போடப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு 34. அதாவது, 34 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இது சமம். அப்படியிருக்கும் போது 12 சீட்டுகள் கேட்டு இப்போது அடம் பிடித்தால் எப்படி? அதனால், 3 சீட்; இரட்டை இலையில் போட்டியிட வேண்டும். இதுதவிர வேறு வழியில்லை" என்று விவாதித்து அதனை ஜி.கே.வாசனுக்கு அமைச்சர்கள் மூலம் பாஸ் செய்துள்ளார் எடப்பாடி. 


ராஜ்யசபா சீட் கொடுத்துட்டோம்; அதனால், இந்த முறை இவ்வளவுதான் என்றால் எப்படி? பாமகவுக்கும் தான் ராஜ்யசபா சீட் கொடுத்தாங்க. அவங்களுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கலையா? என்று ஜி.கே.வாசனிடம் தமாகா சீனியர் நிர்வாகிகள் ஆதங்கப்பட்டுள்ளனர். ராஜ்யசபா சீட் கொடுத்ததைச் சொல்லிக் காட்டிய விதம் வாசனை மிகவும் காயப்படுத்தியிருக்கிறது. 


எடப்பாடி சொல்வதை ஏற்பதா? இல்லை தேமுதிக போல விலகிவிடுவதா? என்கிற குழப்பத்தில் இருந்துவந்த வாசன், மீண்டும் எண்ணிக்கையை உயர்த்துங்கள்; எங்கள் சின்னத்தில் போட்டியிடுகிறோம் எனச் சொல்லியிருக்கிறார். ஆனால், அதற்கு மறுத்த எடப்பாடி, "அதிமுகவின் முடிவு இதுதான். அதில், மாற்றமில்லை எனத் தெரிவித்து இருக்கிறார். இதனிடையே, வாசனுக்காக டெல்லியும் தலையிட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்துப் பேசினார். இவ்வளவு கடுமை காட்டவேண்டாமே என்று டெல்லியிலிருந்து சொல்லப்பட்டிருப்பதால், எடப்பாடியின் மனம் மாறும் என தமாகாவினர் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், 6 தொகுதிக்கு எடப்பாடி ஒத்துக்கொண்டுள்ளதாகவும் இரட்டை இலையில் போட்டியிட ஜி.கே.வாசன் சம்மதம் தெரிவித்ததாகவும் தமாகா மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

 

இந்தநிலையில், நேற்று இரவு  அதிமுக கூட்டணியில் த.மா.கவுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

 

 

 

 

 

 

 

Next Story

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய அதிமுக கவுன்சிலர்; எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை!

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
EPS action on AIADMK councilor involved in Armstrong incident case

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவரும், தாதாவின் மனைவி மலர்க்கொடி என்பவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும், ஆம்ஸ்ட்ராங் வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் பா.ஜ.க நிர்வாகி அஞ்சலையை கைது செய்தனர் . இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கெனவே கைதான அருள் என்பவரின் செல்போன், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் 3வது வார்டு அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலராக பொறுப்பு வகித்து வரும் ஹரிதரன் என்பவரிடம் இருந்ததால் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் மீது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, ஹரிதரன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்திருந்தார்.

Next Story

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; அ.தி.மு.க கவுன்சிலர் பக்கம் திரும்பிய திடீர் திருப்பம்!

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
 ADMK councillor arrested Armstrong's murder case

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

மீதமுள்ள 10 பேர் பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக இந்த கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  இதில் வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவரும், தாதாவின் மனைவி மலர்க்கொடி என்பவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த கொலை தொடர்பாக பாஜகவினுடைய வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியிலிருந்த அஞ்சலை என்பவரை போலீசார் தேடிவந்தனர். 

தொடர்ந்து பா.ஜ.கவின் வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியில் இருந்து அஞ்சலை நீக்கப்படுவதாக கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, ஆம்ஸ்ட்ராங் வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலையை கைது செய்தனர் . அதேநேரம் ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த எல்லப்பன் என்ற ரவுடியையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது. 

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே கைதான அருள் என்பவரின் செல்போன், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் 3வது வார்டு அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலராக பொறுப்பு வகித்து வரும் ஹரிதரன் என்பவரிடம் இருந்ததால் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில், வழக்கறிஞர் அருள் மற்றும் ஹரிஹரனின் நெருங்கிய நண்பர்தான் ஹரிதரன் என்பதும் தெரியவந்தது.

மேலும், ஹரிதரன் அளித்த தகவலின் பேரில், வெங்கத்தூர் கூவம் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட கொலையாளிகள் பயன்படுத்திய 5 செல்போன்களை மீட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த பிறகு 6 செல்போன்களை ஹரிதரனிடம் அருள் ஒப்படைத்துள்ளதாகவும், அந்தச் செல்போன்களை உடைத்து வெங்கத்தூர் கூவம் ஆற்றில் ஹரிதரன் வீசியதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.