Skip to main content

அம்பேத்கர் பெயரை உச்சரிக்க தகுதியில்லாதவர்கள் இன்று அவருக்கு ஜெயந்தி விழா எடுக்கிறார்கள் - திருமா சாடல்!

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

ghj

 

சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அம்பேத்கர் ஏன் சங்பரிவார் அமைப்புகளால் கொண்டாடப்படுகிறார் என்பதை தனக்கே  உரிய பாணியில் பேசினார்.

 

அவரின் உரை பின்வருமாறு, "இன்றைக்கு பலருக்குத் திடீரென அம்பேத்கர் தேவைப்படுகிறார். ஏனென்றால் 30 கோடி மக்களின் வாக்குகள் அவர்களுக்குப் பிரதானமாக இருக்கிறது. அவர்களின் வாக்குகளை இழந்துவிடக் கூடாது என்பதை அடிப்படையாக கொண்டு அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். உள்ளபடியே சனாதனத்தின் முதல் எதிரி, மூர்க்கமான எதிரி, ஒரே எதிரி டாக்டர் அம்பேத்கர் என்றால் அதில் மிகையல்ல. தன்னுடைய வாழும் காலம் வரை அந்த சனாதான கொள்கைகளை வேரறுக்க பாடுபட்டார். இந்த சங்கபரிவார் கும்பல் சனாதனத்தை ஆதரிப்பார்கள் என்றால், அவர்கள் வெளிப்படையாக எதிர்க்க வேண்டிய ஒரு நபர் புரட்சியாளர் அம்பேத்கர் மட்டும்தான். எனவே அவரைத்தான் தங்களுடைய முதல் எதிரியாக சனாதான கும்பல் அறிவிக்க வேண்டும். ஏனென்றால் அவரைப் போல் சனாதானத்தை எதிர்த்த ஒரு தலைவன் இதுவரை பிறக்கவில்லை. வெகுமக்களை திரட்டி இந்த சனாதன கோட்பாடுகளைக் கடைசி காலம் வரை எதிர்த்தார். 

 

‘பகுத்தறிவு பகலவன்’ பெரியார் கூட தேர்தல் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் அல்ல. எனவே அவர் வாக்கு அரசியலில் இருந்து விலகியே இருந்து வந்தார். ஆனால் புரட்சியாளர் அம்பேத்கர் தேர்தல் அரசியலில் இருந்துகொண்டே இந்த சானாதான கொள்கையைக் கடுமையாக எதிர்த்தார். இறுதிவரையில் இதனால் பாதிப்பு வரும் என்று தெரிந்தும் அஞ்சாமல் இருந்தவர். வாக்கு அரசியல் அவரின் பாதைகளை இறுதிவரை மாற்றவில்லை. ஓயாமல் சனாதானத்தை எதிர்த்து வந்தார். ஆனால் இன்றைக்கு நாங்களும் கொண்டாடுகிறோம் என்று சனாதனவாதிகள் அவரைக் கொண்டாடுவதைப் போல் நடிக்கிறார்கள். இதில் எந்த நல்ல நோக்கமும் இல்லை. பல கோடி மக்களின் நம்பிக்கையை எப்படியாவது இந்த மாதிரியான சித்து வேலைகளை செய்தாவது பெற்றுவிட மாட்டோமா என்ற எண்ணத்தில் இந்த மாதிரியான வேலைகளை அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இவர்கள் தற்போது அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடுகிறார்கள், அம்பேத்கர் சிலைகளைத் தேடி கண்டுபிடித்து மாலை அணிவிக்கிறார்கள். சனாதான வேலைகளை முன்னெடுத்துக்கொண்டே அதனை எதிர்த்தவருக்கு மலை அணிவிப்பதை எப்படி பார்க்க முடியும். இவர்களின் நடிப்பிற்கு எல்லை இல்லாமல் சென்றுக்கொண்டிருக்கிறது. 

 

அம்பேத்கர் சிலைக்கு அருகில் நெருங்குவதற்கு கூட அருகதை அற்றவர்கள் இந்த சனாதான கும்பல். அம்பேத்கர் பெயரை உச்சரிக்க கூட தகுதி இல்லாதவர்கள். எனக்கு தெரிந்து ஒரு மதத்தை முற்றாக தவிர்த்து ஒரு தலைவரின் பின்னால் வெகுஜன மக்கள் சென்றால்கள் என்றால் அது புரட்சியாளரின் பின்னால் மட்டும்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த 21ம் நூற்றாண்டில் அப்படி யாரையும் நாம் இதுவரை பார்த்ததில்லை. கடந்த காலங்களில் அப்படிபட்ட மனிதர்கள் இருந்தார்களா என்று நமக்குத் தெரியாது. வரலாறு நமக்கு தந்திருக்கிற தரவுகளின்படி பார்த்தால் இந்த சாதனையை செய்திருக்கும் ஒரே தலைவன் அவர் மட்டுமே. மன்னர்கள் மதம் மாறினால் குடிமக்கள் மதம் மாறுவார்கள். அது வேண்டுமானால் அந்த காலத்தில் நிகழ்ந்திருக்கும், ஆனால் குடிமக்களையும் பின்தொடரச் செய்து இத்தகைய மாற்றத்தை இந்த நூற்றாண்டில் செய்தவர் புரட்சியாளர் அம்பேத்கார் மட்டுமே. எனவே அவரை நாம் கொண்டாட வேண்டும். அவரை யாருடைய கைகளிலும் சிக்க வைத்துவிடக் கூடாது" என்றார்.