திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளைப் பகுதியை அடுத்த அப்புவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர் காலணி தைக்கும் தொழில் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இவருக்கு மூன்று பிள்ளைகள். இவரது மூன்றாவது மகன் முத்தையா (19), தனது பகுதியின் அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வேலை செய்யும் இடத்தில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு அது காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த ஒன்றரை வருடமாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஜுலை மாதம் 23ம் தேதி முத்தையா, தனது வீட்டின் அருகே இருக்கும் ஒரு ஓடக்கரையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். முத்தையாவின் தந்தை கன்னியப்பன் கொடுத்த புகாரின் படி முதலில் எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் திசையன்விளை காவல்துறை இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. பிறகு இந்த வழக்கை விசாரித்த திசையன்விளை காவல்துறை, முத்தையாவை பட்டியலினத்தைச் சேர்ந்த சுரேஷ், மதியழகன் மற்றும் பிரகாஷ் ஆகிய மூவர் தான் கொலை செய்தனர். கொலைக்கு காரணம், சுரேஷின் தங்கையை முத்தையா கேலி கிண்டல் செய்ததன் காரணமாகவே கொலை நடந்துள்ளது எனத் தெரிவித்து எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்த எஃப்.ஐ.ஆரை கொலை வழக்காக மாற்றி வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்து ஆட்சியரின் உத்தரவின்படி குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஆனால், நடந்தது அப்பட்டமான ஆணவக் கொலை, இது மறைக்கப்படுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கொலையான முத்தையா குடும்பம், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சுரேஷ், மதியழகன் மற்றும் பிரகாஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி ஒரு ஆவணப் படத்தை உருவாக்கியுள்ளது. அந்த ஆவணப் படத்தில், இந்தக் கொலை வழக்கில் நியாயத்தை நிலை நிறுத்த போராடி வரும், திராவிட தமிழர் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மனிதம் அமைப்பு ஆகிய இயக்கங்கள் இந்த வழக்கின் ஆரம்பம் முதல் தற்போதைய நிலை வரை விரிவாக ஆராய்ந்து அதன் திசை மாற்றங்களை பகிர்ந்துள்ளனர்.
இந்த ஆவணப் படத்தில் பேசும் முத்தையாவின் தந்தை கன்னியப்பன், அவரது மகன் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததை உறுதி செய்கிறார். அந்தப் பெண்ணின் உறவினர் பெருமாள் ஏற்கனவே முத்தையாவை தாக்கியதையும் அவர் தெரிவிக்கிறார். தொடர்ந்து அவர் ஜூலை 23ம் தேதி நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறார். அதில், முத்தையாவின் நண்பர் கார்த்தி தான் இறுதியாய் அவரை அழைத்து சென்றதாகவும், ஆனால், மகனை தேடியபோது அவர் கொல்லப்பட்டிருந்த இடத்தில் இருந்து ஆறு நபர்கள் வந்ததாகவும் சொல்கிறார். மேலும், திசையன்விளை காவல் ஆய்வாளரும், ஊராட்சி மன்றத் தலைவரும் ரூ. 3 லட்சம் நஷ்ட ஈடு பேசியதாகவும் விவரிக்கிறார்.
இந்த வழக்கில் திசையன்விளை காவல் ஆய்வாளர், எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ததையும் அந்த ஆவணப் படத்தில் உறுதி செய்கிறார்.
இந்தக் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மதியழகனின் தாய், “என் மகனை காவல்நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கி குற்றத்தை ஒப்புக்கொள்ள சொன்னார்கள்” என்று சொல்லி உடைந்துபோய் அழுதார். பிரகாஷின் மனைவி பேசும்போது, “கொலை சம்பவம் நடந்த அன்று என் கணவர் என்னுடன் வீட்டில்தான் இருந்தார்” என்கிறார். மூவரையும் கொலை செய்ததாக ஒப்புக் கொள்ளச் சொல்லி காவல்துறை கடுமையாக தாக்கியதாக அவரது குடும்பத்தினர் வேதனையுடன் சொல்கின்றனர்.
இந்தக் கொலையின் அடிப்படை காரணமாக காவல்துறைச் சொல்லும் சுரேஷின் தங்கை முத்தையாவை தனக்கு தெரியாது என்றும் காவல்துறையினர் தன்னை ஒப்புக்கொள்ள சொன்னர் என்றும் சொல்லியுள்ளார்.
முத்தையா கொல்லப்பட்ட அன்று அவரை அழைத்துச் சென்ற கார்த்தி, போலீஸின் அடியின் காரணமாக பொய் சாட்சி சொன்னேன். உண்மையில் அன்று பெருமாளும், வேறு ஒருவரும் அங்கு வந்தனர். நான் அங்கிருந்து தப்பிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
மனிதம் அமைப்பைச் சேர்ந்த எஸ்.ஜி.ரமேஷ் பாபு என்பவர் ஒரு உண்மைக் கண்டறியும் குழுவை அமைத்து அறிக்கை தயார் செய்துள்ளார். அதிலும் இது ஒரு அப்பட்டமான ஆணவக் கொலை என தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சி.பி.எம். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கனகராஜ், எஃப்.ஐ.ஆர்.-ல் முழுமையான விசாரணை நடக்காமல் திருத்தங்கள் நடந்துள்ளன. போலீஸும், பேரூராட்சி தலைவரின் கணவரும் ஏன் நஷ்ட ஈடு குறித்து பேச வேண்டும் என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இந்த ஆணவக் கொலை குறித்து வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன், “இந்த ஆணவக் கொலை என முத்தையாவின் தந்தை சொல்லியுள்ளார். ஆனால் போலீஸ் ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த மூவரை கைது செய்துள்ளது. காவல்துறை கொலைச் செய்யப்பட்ட முத்தையா குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், கைது செய்யப்பட்ட ஆதி திராவிடர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஒரே இடத்தில் அமர்ந்து நீதி கேட்கிறார்கள்” என்று பேசியுள்ளார்.
பலியான முத்தையாவின் தந்தை இது ஆணவக் கொலை என சொன்னபிறகும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை; இதில் அப்பாவி மூவர் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர். உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழுத்தமாக சொல்கிறது அந்த ஆவணப் படம்.