Skip to main content

“இதை மறைக்கவே மகளிர் இடஒதுக்கீடு மசோதா...”  -  திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

Thirumurugan Gandhi | Women Reservation Bill

 

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

பா.ஜ.க. வின் ஆட்சியில் அடிப்படையில் பெண்கள் முன்னேற்றம் என்பது இல்லை. அவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு தான் பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறையத் தொடங்கியது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் பார்வையில் பெண்கள் வீட்டில் இருக்கவும், கணவனின் பணியாளாக இருக்கவே நினைப்பார்கள். மேலும், பெண்கள் வேலை செய்வதால் ஆண்களுக்கு வாய்ப்புகள் இல்லை எனவும் கூறினர். எனவே, நாடாளுமன்ற மசோதா பெண்கள் முன்னேற்றத்திற்கு கொண்டுவரவில்லை. மாறாக, இதனை 2029ல் தொகுதி மறுபங்கீடு செய்த பிறகு அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர். எனவே தான் ஏன்? வருகிற தேர்தலில் இதனை அமல்படுத்தவில்லை என எதிர்கட்சியினர் கேட்கின்றனர். இதிலும் ஒ.பி.சி. இட ஒதுக்கீடு குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, ஓவைசி அவர்கள் இஸ்லாமியப் பெண்களுக்கு இடமில்லை என எதிராக வாக்களித்துள்ளார்.

 

பா.ஜ.க. மணிப்பூர் விவகாரத்தை முறையாக கையாளவில்லை. இதனால், பெண்களிடம் ஏற்பட்ட களங்கத்தை மறைக்க இந்த இட ஒதுக்கீட்டை கொண்டுவருகிறார்கள். மேலும், பெண்கள் வாக்குகள் அதிகம் இருக்கும் இடத்தில் வெற்றி பெறுவதாலும் இது போன்று செயல்படுகிறார்கள். இதில் கவனத்தில் கொள்வது, " தொகுதி மறுவரை செய்வது" தான். ஏனென்றால், இவர்கள் மக்கள் தொகையை வைத்து தொகுதி எண்ணிக்கையை தீர்மானிக்க உள்ளனர். இதனால், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்கள் மிகவும் பாதிப்படையும். மாறாக, வடமாநிலங்கள் கூடுதல் எம்.பி. இடங்களை பெறும். ஏற்கனவே, மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்வதனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் குறைந்த நிதியை பெறுகிறது.

 

ஆனால், காங்கிரஸ் அரசு 1971ல் இருந்த மக்கள் தொகை அடிப்படையில் வழங்கி வந்த நிதியை, பா.ஜ.க. அரசு 2011 கணக்கெடுப்பு படி மாற்றிவிட்டது. தென்னிந்தியாவின் நிதிகள் குறைந்ததற்கு முக்கிய காரணம் இதுதான். உதாரணமாக, தமிழ்நாடு 1 ரூ வரி செலுத்தினால் 0.40 பைசா திருப்பி செலுத்தப்படுகிறது. ஆனால், உ.பி. 1ரூ கொடுத்து, 2ரூ பெறுகிறது. இந்த நிலையில், தொகுதி மறுவரையறை செய்தால் மேலும் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும். இதற்கு மறைமுகமாகத் தான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு என சொல்கின்றனர். இதையொட்டி தான் புதிய நாடாளுமன்றத்தின் இருக்கைகளை 843 ஆக அதிகப்படுத்தினர்.

 

தற்போதுள்ள கேரளா,தமிழ்நாடு,கர்நாடக,ஆந்திரா,தெலங்கானா, கோவா வில் 132 எம்.பி.க்கள் இருகின்றனர். மறுசீரமைப்பில் 167 எம்.பி. தொகுதியாக இது உயரும். இதன் மூலம் தென்னிந்திய மாநிலங்களுக்கு 25% சதவிதம் வரை கூடும். ஆனால், உ.பி.யில் 80ல் இருந்து 143 ஆக உயரும். இதனடிப்படையில், ஹிந்தி பேசும் மாநிலங்களின் எம்.பி. எண்ணிக்கை 439ஆக உயர்ந்து, நமக்கு சட்டம் இயற்றுவதில் சிக்கல் உருவாகும். எனவே, வரும் காலங்களில் இந்தியாவை ஹிந்தி பேசும் மாநிலங்கள் தான் ஆளப்போகிறது.  இதுமாதிரி தொகுதி மறுபங்கீடு செய்தால் பா.ஜ.க. தான் தொடர்ந்து மத்தியில் ஆட்சியமைக்கும். இதே போன்ற செயல் தான் இலங்கையில் நடந்து தமிழர்களின் இடங்கள் பறிபோனது. இந்தநிலையில், சட்டமன்ற தொகுதிகளையும் மாற்றியமைத்தால் மாநிலத்தின் அதிகாரங்கள் சிதைந்து விடும். எனவே, பெண்கள் இட ஒதுக்கீடு அல்ல அவர்களின் நோக்கம். 

 

தென்னிந்தியா முழுவதும் சேர்ந்தே பிரதிநிதித்துவம் இல்லை என்றால் தமிழ்நாட்டின் உரிமை எப்படி இருக்கும். மேலும், இவர்கள் மக்கள் தொகை கணக்கெடுத்து மறுசீரமைப்பு செய்யவுள்ளனர். நாங்கள் கேட்கிறோம் 1971 சென்சஸ் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யலாமே. ஏறக் குறைய ஆண்கள் பெண்கள் விகிதம் பாதியளவு தான் இருக்கும். இந்திக்காரர்களின் தேசியமாக இந்தியாவை மாற்றுவது தான் இவர்களின் நோக்கம்.  மேலும், தொகுதி பங்கீடு குறித்த ஆய்வும் வெளிவந்துள்ளது. இதைவைத்து தான் இவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கைகளை அதிகப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே, தமிழகத்தின் குரல் கேட்பது அரிது. தற்போது, கூடுதலாக எம்.பி. இடங்கள் குறைகிறது. இந்த மாதிரியான அடிமைநிலையில் நாம் வாழவேண்டும் என்பதற்கே பெண்கள் மசோதாவை கொண்டுவருகின்றனர். இதனை எங்கள் பத்திரிக்கையில் ஒரு வருடமாக சொல்லி வருகிறோம். ஆனால், வேறு பத்திரிகையில் பேச வாய்ப்பு அமையவில்லை. தற்போது நக்கீரனில் தான் தெரிவிக்கிறேன்.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...

 

 

Next Story

பிஜு ஜனதா தளம் கட்சியின் அதிரடி அறிவிப்பு; பா.ஜ.கவுக்கு ஏற்பட்டுள்ள அடுத்த சிக்கல்?

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Biju Janata Dal Action Announcement to BJP's next problem?

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இதில், ஒடிசா மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதா தளம் கட்சியை வீழ்த்தி முதல் முறையாக பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. 

முதல்வராக பொறுப்பு வகித்து வந்த பிஜு பட்நாயக் மறைவுக்கு பிறகு, அவருடைய மகன் நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கினார். பின்பு கடந்த 2000ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் அமோக வெற்றி பெற்று அம்மாநில முதல்வரானார். அதனைத் தொடர்ந்து, ஐந்து தேர்தல்களில் வெற்றி பெற்று 24 ஆண்டுகளாக முதல்வராக பணியாற்றி வந்த நவீன் பட்நாயக், மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தார். 

அதன்படி, மொத்தம் 147 இடங்களில்  78 இடங்களிலும் பா.ஜ.க கைப்பற்றி முதல்முறையாக ஆட்சியை பிடித்தது. பிஜு ஜனதா தளம் 51 இடங்களையும், காங்கிரஸ் 14 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடங்களிலும், சுயேட்சை 1 இடங்களிலும் வென்றது. அதே போல், மொத்தம் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் வெற்றி பெற்றியிருந்தது. பிஜு ஜனதா தளம் ஒரு தொகுதியைக் கூட பெற முடியாமல் படுதோல்வியடைந்துள்ளது. இந்த நிலையில், பா.ஜ.கவுக்கு எங்களின் ஆதரவு இல்லை என்று அறிவிப்பை நவீன் படநாயக்கின் பிஜு ஜனதா தளம் அறிவித்துள்ளது. 

கடந்த 2000, 2004ஆம் ஆண்டுகளில் பா.ஜ.கவோடு பிஜு ஜனதா தளம் கட்சி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது வெற்றி பெற்றது. கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவை, சட்டமன்றத் தேர்தலின் போது பிஜு ஜனதா, பா.ஜ.க கூட்டணி உடைந்தது. இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டாலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரச்சனையின் அடிப்படையில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவை பிஜு ஜனதா தளம் கடைபிடித்து வந்தது. 

Biju Janata Dal Action Announcement to BJP's next problem?

இதனிடையே, நடைபெற்று முடிந்த தேர்தலில் பிஜு ஜனதா தளம் படுதோல்வியடைந்துள்ளது. இந்த நிலையில், தான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டை பிஜு ஜனதா தளம் எடுத்துள்ளது. இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது, ‘நாடாளுமன்றத்தில் இனி பா.ஜ.கவுக்கு எங்களின் ஆதரவு இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு என்ற கேள்விக்கே இடமில்லை. இனி நாங்கள் எதிர்கட்சி மட்டுமே’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சுழன்று அடிக்கும் நீட் முறைகேடு; மோடிக்கு மம்தா எழுதிய திடீர் கடிதம்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
neet scam; Sudden letter written by Mamata to Modi

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபேத்குமார் சிங்கை நீக்கி புதிய தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமிக்கப்பட்டார். நுழைவுத் தேர்வில் வெளிப்படைத்தன்மை கொண்டுவர உயர்மட்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு எழுதிய 63 மாணவர்களை தகுதி நீக்கம் செய்து நேற்று தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது. பீகாரில் உள்ள தேர்வு மையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்ட நிலையில் இந்தத் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. 1563 மாணவர்கள் நீட் தேர்வில் பெற்ற கருணை மதிப்பெண் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் நீட் மறுதேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 813 பேர் நீட் மறுதேர்வு எழுதி உள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

neet scam; Sudden letter written by Mamata to Modi

நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல்களால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடுகளால் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது குறித்து மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், 'மாணவர்கள் நலனை மனதில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசுகளுக்கு இதற்கான தேர்வுகளை நடத்துவதற்கான அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். மாணவர்களின் நம்பிக்கைக்கு இது மிகவும் அவசியம். தற்போதைய நீட் தேர்வு நடைமுறை பெரும் ஊழலுக்கு இட்டுச் செல்வதாக உள்ளது.  நீட் தேர்வு நடைமுறை வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே  பயனடையச் செய்யும் வகையில் உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.