இலங்கை விவகாரம் தொடர்பாக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய திருமாவளவன் அந்நாட்டு அதிபரை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் இதுதொடர்பாக பேசியதாவது, " இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்தொழித்த ராஜபக்சே குடும்பம், தற்போது மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளது. கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை புலிகளையும், தமிழ் மக்களையும் அப்புறப்படுத்திவிட்டு நாடாளுமன்ற வாசலை தொட்டு கும்பிட்டுவிட்டு ராஜபக்சே நாடாளுமன்றம் சென்றதன் காணொளியை நாம் யாரும் இன்றளவும் மறந்திருக்க மாட்டோம். தற்போது அந்த இனப்படுகொலை குற்றவாளிகள் அந்த நாட்டு சட்டப்படி தேர்தலில் மீண்டும் நின்றார்கள், வென்றார்கள்.
அவர்கள் ஆட்சிக்கு வந்த இந்த சில தினங்களில் ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவர்கள் மூவாயிரம் பேரை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் அடித்து விரட்டி உள்ளனர். துப்பாக்கியால் சுடாமல், பாட்டிலாலும், கற்களாலும் அடித்து தமிழக மீனவர்களை துரத்தி உள்ளார்கள். இந்நிலையில், தற்போது கோத்தபய ராஜபக்சே பொறுப்பேற்றுள்ள நிலையில், உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் என்ற ஒரு சட்டத்தை அவசர கதியில் தற்போது கொண்டு வந்துள்ளார்கள். அதன்படி ராணுவமே ஆயுதங்களுடன் இனி ரோந்து பணிகளில் ஈடுபடலாம் என்ற வழிவகையை இந்த சட்டத்தின் படி அவர்கள் ஏற்படுத்தியுள்ளார். இது யாரை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது. முழுவதுமாக தமிழர்களை அழித்தொழிக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டே இந்த சட்டத்தை மிக அவசர கதியில் கொண்டு வந்துள்ளார்கள்.
அதன்படி போலீசாரை கொண்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதை விட்டுவிட்டு அதன் முழு பொறுப்பையும் தற்போது ராணுவத்திடம் ஒப்படைத்துள்ளனர். இதன் முதல் நோக்கம் தனக்கு எதிராக யாரும் இருக்க கூடாது என்று நினைக்கிறார். அவர் ஏற்கனவே மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிர் பிழைத்தவர். எனவே தன்னுடைய உயிருக்கு மீண்டும் ஏதேனும் அச்சுறுத்தல் வந்துவிடக்கூடாது என்று இத்தகைய முடிவினை எடுத்துள்ளார். அவர் தமிழர்களுக்கோ, அவரது உரிமைகளுக்கோ எந்த காலத்திலும் பாதுகாப்பு அளித்தது இல்லை, அளிக்கப்போவதும் இல்லை என்பது நூறு சதவீதம் உண்மை. அவர்களை நாம்தான் பாதுகாக்க வேண்டும். கோத்தபய ராஜபக்சே பதவியேற்புக்கு சென்ற இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.மோடியின் வாழ்த்துக்கடிதத்தையும் அவரிடம் அமைச்சர் ஜெய்சங்கர் கொடுத்துள்ளார். அதுமட்டும் இல்லாது இலங்கை அதிபரின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா இருக்க வேண்டும் என்று மோடி விரும்புவதாக அவரிடம் சொல்லி அதற்கான அவரின் சம்மதத்தையும் பெற்றுள்ளார்கள். இன்னும் சில நாட்களில் அவர் இந்தியாவிற்கு வர உள்ளார். இவர்களிடம் நாம் மனித நேயத்தை எதிர்பார்க்க முடியுமா? இந்தியா தமிழர்களின் நலனுக்காக எதையாவது செய்யுமா என்றால் எதுவும் செய்யாது. கோத்தபய ராஜபக்சே இலங்கையின் மோடி.
நாம் தமிழர்களுக்காக மோடியை எதிர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில், சில சில்லறைகளின் பேச்சுக்களுக்கெல்லாம் நம்மால் பதில் சொல்ல முடியாது. நாம் ஏதோ இந்துக்களை எதிர்ப்பதை போன்ற ஒரு தோற்றத்தை உண்டாக்கப் பார்க்கிறார்கள். நமது இலக்கை, நமது எதிர்கால பயணத்திற்கு இத்தகைய நபர்கள், அவர்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்ய முயன்று பார்ப்பார்கள். அதில் அவர்கள் வெல்ல போவதில்லை. தோல்வியே அவர்களுக்கு பரிசாக கிடைக்கும். அதற்கெல்லாம் நாம் அஞ்சபோவதில்லை, பின்வாங்கப்போவதுமில்லை. அவர்களுக்கெல்லாம் விடுதலைச் சிறுத்தைகள் எப்படிபட்டவர்கள், எத்தகைய மன உறுதி கொண்டவர்கள் என்பதை காலம் கற்று கொடுக்கும். அவர்களின் வெற்று கூச்சலுக்கெல்லாம் நாம் பயப்பட போவதில்லை, தொடர்ந்து மக்களுக்காக பயணிப்போம்" என்றார்.