உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 19 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 300-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 10,000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியதாவது,
"கரோனா தொற்று இந்திய அளவில் மிகத் தீவிரமாக இருக்கிறது. இந்தியா முழுவதும் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயின் காரணமாகப் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். தமிழகத்தில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நாம் ஏற்கனவே மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் பலமுறை வேண்டுகோளை விடுத்திருக்கிறோம். இந்திய அளவில் தமிழகத்தில் நோய் தொற்றுக்கான பரிசோதனைகள் குறைந்த அளவே நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பிட்ட சிலரை மட்டும் அடையாளம் கண்டு அவர்களை மட்டும் சோதிக்கின்ற தன்மை அதிகம் இருக்கின்றது. இது வெளிப்படையாகவே விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. அதனால் தான் பரிசோதனைகளைப் பரவலாக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சில நாட்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்தோம்.
தலைமைச் செயலாளர் ஒரு பேட்டியில் தமிழகத்துக்கு வரும் ரேபிட் டெஸ்ட் கிட்டுக்கள் அமெரிக்காவிற்குத் திருப்பி விடப்பட்டுள்ளது என்று கூறுகிறார். இதில் என்ன அரசியல் நடந்துள்ளது என்ற உண்மை தெரிய வேண்டும். தமிழகத்தில் தொற்றின் சதவீதம் 11 என்ற அளவில் இருக்கிறது. அதாவது 100 பேரை சோதித்தால் அதில் 11 பேருக்கு நோய் தாக்குதலுக்கு உரிய அறிகுறி இருக்கிறது என்று பொருள். பிற மாநிலங்களில் எல்லாம் 3 சதவீதம் தான் இந்த நோய்தொற்று உறுதி செய்யப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த சதவீதம் அதிகம் இருக்கிறது. அதனால் தான் விரைவு சோதனை அடிப்படையில் மக்களை சோதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
கரோனா தொற்றுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது, மராட்டியம் மாநிலத்திற்கு 1000 கோடி அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கே பாதிப்பு மிக அதிகம். அதனால் அதுகுறித்து விமர்சிக்கவில்லை. ஆனால் தமிழகம் கரோனா தொற்றில் இரண்டாவது இடத்தில் இருந்தும், போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கவில்லை. 500 கோடி என்ற அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது வருத்தத்துக்குரிய ஒரு செய்தி. இதுகுறித்து முதல்வர் உள்ளிட்ட யாரும் வாய் திறக்கவில்லை. நோய்த் தொற்று விவகாரத்தில் அரசியலை மறந்துவிட்டு போதுமான நிதியினை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்" என்றார்.