Skip to main content

புதிய கல்விக் கொள்கையல்ல… வர்ணாச்சிரம கொள்கைதான் இது!!!

60 களிலும், 70 களிலும் ஆரம்பப் பள்ளியைத் தாண்டுவதற்கே திண்டாட வேண்டியிருக்கும். படித்த மேல்தட்டு குடும்பத்து பிள்ளைகளும், அடித்தட்டு கூலிகளின் பிள்ளைகளும் ஒரே தராசில் நிறுக்கப்பட்டார்கள்.

 

modi amitshah


வசதிபடைத்த குடும்பத்தினரும், நடுத்தர மற்றும் ஏழை வீட்டு பிள்ளைகளும் ஒரேவிதமாக கணக்கில் கொள்ளப்பட்டார்கள். ஊருக்குள் உயர்சாதி, தாழ்த்தப்பட்ட சாதி என்றும், நில உடமையாளர், கூலித்தொழிலாளி என்றும் பிரிக்கப்பட்டாலும் கல்வித்தரத்தை சமமாக வைப்பதில் குறியாக இருந்தார்கள்.

ராஜாஜி காலத்தில் மதியம்வரை பள்ளியை நடத்தி, மிச்ச நேரத்துக்கு அப்பா பார்க்கும் குழத்தொழிலை பார்க்க வசதியாக அனுப்பினார்கள். அதை எதிர்த்து திராவிட இயக்கம் நடத்திய போராட்டத்தின் விளைவாகவே காமராஜர் தலைமையில் புதிய அரசு அமைய தந்தை பெரியார் காரணமாக இருந்தார்.

காமராஜர் பதவியேற்ற பிறகு, நீதிக்கட்சி ஆட்சியில் சென்னையில் மட்டும் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டத்தை தமிழகம் முழுவதும் நிறைவேற்றினார். இதையடுத்து, ராஜாஜியால் மூடப்பட்ட 5 ஆயிரம் பள்ளிகளும் திறக்கப்பட்டன. இந்தப் பள்ளிகளில் வசதிபடைத்த குழந்தைகள் முழுநேரமும் படிப்பார்கள். கூலித்தொழிலாளி வீட்டு பிள்ளைகள் மதிய உணவு போடும்வரை பள்ளியில் இருப்பார்கள்.

ஆரம்பப் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பில் இருந்து நான்காம் வகுப்பு போவதும், ஐந்தாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு போவதும், எட்டாம் வகுப்பிலிருந்து 9 ஆம் வகுப்பு போவதும் ஆசிரியர்களின் கையில் இருந்தது. டெஸ்ட் என்ற பேரில் வடிகட்டப்படும் நடவடிக்கை இருந்தது. இதில் ஆசிரியர்களின் சாதி மனோபாவமும் உள்ளடங்கியிருந்தது.
 

 

school


மூன்றாம் வகுப்பில் மூன்று ஆண்டுகளும், ஐந்தாம் வகுப்பில் 3 ஆண்டுகளும் படித்து வெறுத்துப்போய் சொந்த குடும்பத்து வேலையை செய்வதற்கு போன எனது நண்பர்கள் பலர் இருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் எந்த வேலைக்கும் குறைந்தபட்ச தகுதி எட்டாம் வகுப்பு என்று இருந்தது. ராணுவத்தில் சேர வேண்டும் என்றாலும், டிரைவராகவோ, பியூனாகவோ வேலைக்கு சேர வேண்டும் என்றாலும் எட்டாம் வகுப்பு சான்றிதழ் வேண்டும். இதற்காகவே பலர் எப்படியேனும் உயர்நிலைப்பள்ளிக்கு போக ஆசைப்படுவார்கள்.

ஆனால், தங்களைவிட சின்னக் குழந்தைகளுடன் படிக்க வெட்கப்பட்டு பலர் படிப்பை கைவிடுவதே வாடிக்கையாக இருந்தது. கலைஞர் ஆட்சியில் ஐந்தாம் வகுப்பு வரை தேர்வு இல்லை என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் எம்ஜியார் ஆட்சிக்காலத்தில் 8 ஆம் வகுப்புவரை தேர்வு இல்லை என்று நீடிக்கப்பட்டது.

இரண்டு முடிவுகளும் ஏராளமானோரின் வாழ்க்கையை திசைதிருப்பியது. எட்டாம் வகுப்பு என்ற தகுதியோடு குறைந்தபட்ச வேலைவாய்ப்புகளை அவர்கள் பெறமுடிந்தது.
 

bus pass


எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பதாம் வகுப்பு நுழைந்த பலர் படிப்பில் புதிய ஆர்வம் ஏற்பட்டு பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரிப் படிப்புவரை சென்றதும் உண்டு. அவர்களில் பலர் பெரிய பொறுப்புகளையும் பெற முடிந்தது. பிள்ளைகளை படிக்க வைக்க தமிழக அரசுகள் அவர்களுக்காக செய்யும் சலுகைகளை வேறு எந்த மாநில அரசுகளும் செய்வதில்லை. சத்துணவு, இலவசப் பாடப்புத்தகங்கள், இலவச சீருடை, இலவச செருப்பு, இலவச சைக்கிள், இலவச பஸ்பாஸ், இலவச மடிக்கணினி என்று தமிழக மாணவர்கள் அனுபவிக்கும் சலுகைகள், மாநிலத்தின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தியிருக்கிறது.

பெண்கள் கல்விக்காக கலைஞர் அரசு கொண்டுவந்த திட்டங்களை வேறு எந்த மாநிலமும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஐந்தாம் வகுப்போடு அடுப்படியில் முடக்கப்பட்ட தமிழக கிராமப்புற பெண்களை எட்டாம் வகுப்புவரை படிக்க வைத்தால் அவர்களின் திருமணத்துக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தவர் கலைஞர். சில ஆண்டுகளில் 10 வகுப்பு வரை படித்தால் உதவித்தொகையை அதிகரித்து உத்தரவிட்டவரும் அவர்தான். அப்படியே கல்லூரி படிப்பு முடித்தவர்களுக்கு உதவித்தொகையை இரட்டிப்பாக்கியதும் அவர்தான். அதுமட்டுமின்றி தகுதி, திறமை என்று கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு மறுக்கப்பட்ட நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்து அவர்களையும் அந்த படிப்புகளுக்கு தயாராகும் அளவுக்கு ஆர்வத்தை உருவாக்கியதும் கலைஞர்தான்.
 

kalaignar


ஆனால், மனுவின் வர்ணாச்சிரம கோட்பாடுகளை வலியுறுத்தும் ஆர்எஸ்எஸ் ஆணைக்கு ஏற்ப செயல்படும் பாஜக அரசு மத்தியில் பதவியேற்றதிலிருந்து ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே ரேஷன், ஒரே உணவு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்றெல்லாம் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறது.

குறிப்பாக 2016ல் ஜெயலலிதா இறந்தபிறகு மாநில அரசை தனது அடிமையாக்கி, ஒரு நூற்றாண்டு காலம் தமிழகம் போராடிப் பெற்ற சமூகநீதியை எல்லா வகையிலும் பறித்துவிட மத்திய மோடி அரசு துடிக்கிறது. அதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வை கட்டாயமாக்கியது. இப்போது, புதிய கல்விக் கொள்கை என்று பழைய வர்ணாச்சிரம கல்வி முறையை அமலாக்க முயற்சிக்கிறது.


குறிப்பாக, தொடக்கப் பள்ளிகளிலேயே கிராமப்புற மாணவர்களுக்கு தேர்வுகளை அறிமுகப்படுத்தி பள்ளிகளை விட்டு துரத்த இந்த புதிய கல்விக் கொள்கை திட்டமிடுகிறது. இதன்மூலம் பெற்றோரின் தொழில்களை செய்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்ற நிலையை உருவாக்க முயற்சிக்கிறது.

தரமான கல்வியை பள்ளிக்கூடங்களில் கொடுக்க வேண்டிய அரசாங்கம், கார்பரேட் நிறுவனங்கள் நடத்தும் கோச்சிங் சென்டர்களுக்கு மாணவர்களை விரட்ட விரும்புகிறது. அந்தக் கோச்சிங் சென்டர்களில்தான் தரம் தீர்மானிக்கப்படுவதாக அரசாங்கமே சொல்கிறது. இதன்மூலம், தனது மக்களுக்கு தரமான கல்வியை அரசுப் பள்ளிகளில் கொடுக்க முடியாது என்ற கேவலமான உண்மையை மத்திய அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது.

அனைவருக்கும் கல்வி என்ற அரசியல் சட்ட உரிமையை பாஜக அரசு காலில் போட்டு மிதிக்கிறது. ராஜஸ்தானில் 2016-2017ல் மாணவர்கள் குறைவாக இருப்பதாகக் கூறி 17 ஆயிரம் பள்ளிகளை வசுந்தராராஜே அரசு மூடிவிட்டது. தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாகவே இந்த முடிவை மாநில அரசு எடுத்தது. இந்த முடிவால் மேற்படி பள்ளிகளில் இருந்து வெளியேறிய மாணவர்களில் 65 சதவீதம் பேர் மேற்கொண்டு படிக்காமல் குலத்தொழிலுக்கு செல்ல நேர்ந்தது.
 

 

jayalalithaa


பிராமணன் மட்டுமே படிக்க வேண்டும். வைசியன் தனது வியாபாரத்துக்கு தகுந்த அளவுக்கு படித்தால் போதுமானது. மற்றவர்கள் படிக்க உரிமையற்றவர்கள் என்றும் பிராமணர்களுக்கு சேவகம் செய்ய படைக்கப்பட்டவர்கள் என்றும் காலங்காலமாக கற்பிக்கப்பட்ட பொய்களை பாஜக மீண்டும் நடைமுறைப்படுத்த திட்டமிடுகிறது.

இந்த உண்மையை கல்வியாளர்கள் அம்பலப்படுத்தி இருக்கிறார்கள். தமிழகத்தில் இந்தியைத் திணிக்க வேண்டும். தமிழர்கள் பெற்றிருக்கிற சமூகநீதியை சீர்குலைக்க வேண்டும். தமிழர்களின் கலாச்சாரம் பண்டுபாடு ஆகியவற்றைச் சிதைக்க வேண்டும். தமிழர்களின் புராதனப் பெருமைகளையும், தமிழ் மொழியின் சிறப்புகளையும் மறைத்துவிட வேண்டும் என்று பாஜக துடிக்கிறது. பாஜகவின் இந்த முயற்சிகளுக்கு எதிராக அரசியல் கட்சிகளும், பெற்றோரும் பொங்கியெழ வேண்டிய கட்டாய சூழல் உருவாகி இருக்கிறது.

இந்த விவகாரத்தில் கல்வித்துறையைத் தாண்டி, திரைத்துறையிலிருந்து ஒரு குரல் ஓங்கி ஒலித்திருக்கிறது. நடிகர் சூரியாவின் தார்மீகக் கோபம் மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் தகுதித் தேர்வுகளின் நோக்கத்தை தெளிவுபடுத்தி இருக்கிறது. அதனால்தான், எச்.ராஜா, தமிழிசை போன்றவர்கள் சூர்யாவின் குரலுக்கு புதுப்புது விளக்கங்களை சொல்லி திசைதிருப்ப பார்க்கிறார்கள்.

பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் ஒரு விஷயத்தை ஆதரித்தால் அது தமிழர்களுக்கு எதிரானது என்பதையும், எதிர்த்தால் அது தமிழர்களுக்கு நல்லது என்றும் தமிழர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

எல்லா வகையிலும் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து அதை தமிழகத்திற்குள் நுழையவிடக்கூடாது. கட்சிகளைக் கடந்து தமிழர்களாய் ஒன்றிணைந்து அதை விரட்டி அடிக்க வேண்டியது தமிழக மக்களின் கடமை. அப்போதுதான் தமிழகத்தின் சமூகநீதி காப்பாற்றப்படும்.