Skip to main content

தீக்கிரையான 44 உயிர்களும்; கீழ்வெண்மணி படுகொலை வழக்கும்! 

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

thanjavur keezhvenmani daily wage hike request incident due to affected labours 

 

1960 கால கட்டங்களில் இன்றைய திருவாரூர் நாகப்பட்டினம் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்தது. அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் முக்கிய தொழில் விவசாயம். இந்திய உணவு உற்பத்தியில் சுமார் 30 சதவீத அளவை இப்போது வரை இந்த பகுதிகள்தான் தருகின்றன. இப்படி உலகிற்கே உணவளித்து வந்த இந்த பகுதியின் விவசாய தொழிலாளர்கள் தாங்கள் உண்ணும் கால் வயிற்று கஞ்சிக்கு கூட வழி இல்லாமல் தங்களின் பண்ணையார்களிடம் அடிமைகளாக இருந்து வந்தார்கள் என்பதும், கொஞ்சமாவது கூலியை உயர்த்தி தரச் சொல்லி கேட்டால் கடும் சித்திரவதைக்கு உள்ளானார்கள் என்பதும் இந்த உலகின் கண்களுக்கும் காதுகளுக்கும் தெரியாமலேயே இருந்து வந்தது. ஆனால் 1968 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் அருகே உள்ள கீழ வெண்மணி கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் ஒடுக்கப்பட்ட எளிய மக்களுக்கு எதிராக எந்த அளவுக்கு அடக்குமுறைகள் நிலவி வருகிறது என்பது  இந்த உலகிற்கு முதன்முறையாக தெரிய வந்தது.

 

நாகப்பட்டினம் அருகே உள்ள கீழ வெண்மணி மற்றும் அதனைச் சுற்றியிருந்த பல்வேறு கிராமங்களில் அப்போது விவசாய வேலைகளுக்கு மிகக் குறைந்த கூலி மட்டுமே கொடுப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அப்படி கொடுக்கப்பட்ட அந்த கூலி என்பது தொழிலாளர்களின் அன்றாட உணவு தேவையை கூட பூர்த்தி செய்யாததால விவசாய தொழிலாளர்கள் விவசாய வேலை நேரம் போக மற்ற நேரங்களில் அந்த ஊரின் நில உடைமையாளர்கள் வீட்டில் பண்ணையாட்களாக அடிமை வேலைகள் செய்து வந்துள்ளார்கள். ஆனால்  அப்படி செய்யப்பட்ட வேலைகளுக்கு ஊதியம் எதுவும் கொடுக்காமல் பழைய சோறும் கிழிந்த துணிகளும் மட்டுமே ஊதியமாக தரப்பட்டிருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் தங்களிடம் வேலை செய்யும் பண்ணையாட்கள் ஏதாவது தவறு செய்தாலோ அல்லது கூலியை கொஞ்சம் உயர்த்திக் கேட்டாலோ அவர்களின் வாயில் சாணத்தை கரைத்து ஊற்றுவதும், சவுக்கால் அடித்து கொடுமைப் படுத்துவதையும் அவர்களுக்கான தண்டனையாக கொடுத்து வந்துள்ளார்கள் நில உடைமையாளர்கள்.

 

இதனால் அஞ்சி நடுங்கிய விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தங்களின் முதலாளிகளான நில உடைமையாளர்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத சூழல் இருந்து வந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் 1967 ஆம் ஆண்டு அந்த பகுதியின் விவசாய தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து விவசாய தொழிலாளர்கள் சங்கம் என்ற ஒரு அமைப்பைத் தொடங்கினார்கள். இப்படி  இந்த அமைப்பை தொடங்குவதற்கு கம்யூனிஸ்ட் கட்சியானது விவசாய தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்திய விழிப்புணர்வு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. கம்யூனிஸ்ட்டுகள் விவசாய தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அமைப்பாக்குவதை அறிந்த நில உடைமையாளர்கள் கண்டிப்பாக கம்யூனிஸ்ட்டுகள் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் மூலமாக ஏதாவது பிரச்சனை செய்வார்கள் என்பதால், நிலக்கிழார்கள் தங்களின் ‘நில உரிமையாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பின் பெயரை ‘நெல் உற்பத்தியாளர்கள் சங்கம்’ என்று  மாற்றி அமைத்தார்கள். இரிஞ்சூர் கோபால கிருஷ்ண நாயுடு  என்பவர் இதன் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

 

விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் தொடங்கிய சில காலம் கழித்து அந்த சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அதுவரைக்கும் வழங்கப்பட்டு வந்த கலம் நெல் அறுவடைக்கு நாலரைப்படி கூலி என்பதை உயர்த்தி தரும்படி கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால் நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் அந்த கோரிக்கையை மறுப்பதோடு அதற்கு கடுமையான எதிர்ப்பையும் தெரிவிக்கிறார்கள். ஆனால் கூலி உயர்வு தரவில்லை என்றால்  வேலை செய்ய வர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கிறது விவசாயத் தொழிலாளர்கள் சங்கம். இதனால் விளைந்த கதிர்கள் எல்லாம் அறுவடை ஆகாமல் தேங்கும் சூழல் ஏற்பட்டது. நெல் அறுவடை செய்ய முடியாததால் கோபம் கொண்ட நெல் உற்பத்தியாளர்கள் சங்கம். ‘வேலைக்கு ஆள் வரவில்லை என்றால் வேறு ஊர் வேலை ஆட்களை வைத்து அறுவடை செய்து கொள்வோம் என்று  விவசாய தொழிலாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கிறார்கள். ஆனால் அதற்கும் அசைந்து கொடுக்க மறுக்கிறது விவசாய தொழிலாளர்கள் சங்கம். பிரச்சனை தீவிரம் அடைவதை அறிந்த கம்யூனிஸ்ட் தலைவர்களான என். சங்கரய்யயாவும், ஏ. பாலசுப்ரமணியமும் அப்போதைய முதல்வர் அண்ணாவை சந்தித்து கூலி பிரச்சனையில் அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

 

thanjavur keezhvenmani daily wage hike request incident due to affected labours 

 

அரசின் உத்தரவின்படி அப்போதைய தஞ்சை மாவட்ட ஆட்சியர் ரங்கபாஷ்யம் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். அந்த பேச்சுவார்த்தையில் அப்போது வழங்கப்படும் கூலியை விட அரைப் படி உயர்த்தி கொடுக்க வேண்டும் என்றும் ஆறு படி கூலி கொடுக்கப்படும் இடங்களில் அந்த நிலை அப்படியே தொடரலாம் என்றும் முடிவு எடுக்கப்படுகிறது. ஆனால் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட அந்த முடிவை நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் செயல்படுத்த மறுக்கிறார்கள். இதனால் பிரச்சினை மேலும் தீவிரம் அடைந்தது. எப்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று யூகித்த மாவட்ட நிர்வாகம் அந்தப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்தினார்கள்.

 

அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூந்தாழங்குடி ஊரில் விவசாய தொழிலாளர்கள் தங்களின் கட்சிக் கொடியை புதிதாக ஒரு இடத்தில் ஏற்ற முயற்சி செய்கிறார்கள். இதனால் அங்கு கலவரம் ஏற்பட்டது. அந்த கலவரத்தில் விவசாயத் தொழிலாளர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால் வெகுண்டெழுந்த விவசாயத் தொழிலாளர்கள், அறுவடைக்குத் தயாராக இருந்த வயல்களில் இறங்கி அறுவடை செய்துவிட்டு  அதில் தங்கள் கூலி போக மீதமுள்ள நெல்களை களத்திலயே போட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். இதனால் கோபம் கொண்ட நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை என்பவரை கடத்தி கொலை செய்து விடுகின்றனர். இதனால் இரண்டு தரப்பும் பற்றி எரியத் தயாராக இருக்கும் நெருப்புக் குழம்புகள் மாதிரி பகையோடு காத்திருந்தார்கள்.

 

இந்த சூழ்நிலையில், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற வன்மத்தோடு ஒரு பெரும் அடியாட்கள் கும்பலை தயார் செய்தது நெல் உற்பத்தியாளர்கள் தரப்பு. அடியாட்கள் கும்பல் தயார் ஆனதும் தொழிலாளர்களை தாக்குவதற்கு சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்த நெல் உற்பத்தியாளர்கள் தரப்பிற்கு அப்போது கேரளாவில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு ஒன்று சரியான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது. பெரும்பாலான கம்யூனிஸ்ட் தலைவர்கள் கேரளாவிற்கு சென்றுவிட்டார்கள் என்பதை தெரிந்து கொண்ட அவர்கள், இப்போது தாக்கினால் அவர்களை காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால் 1968 டிசம்பர் 25 ஆம் தேதியை தாக்குதலுக்கான நாளாக நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் குறித்தார்கள்.

 

thanjavur keezhvenmani daily wage hike request incident due to affected labours 

டிசம்பர் 25 ஆம் தேதி மாலை, பண்ணையார் தரப்பின் அடியாட்கள் கும்பலைச் சேர்ந்த பக்கிரிசாமி என்ற ஒருவர் விவசாயத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் அத்துமீறி நுழைந்துள்ளார். அவரைப் பார்த்த விவசாயத் தொழிலாளர்கள் அவர் கலவரம் செய்யத்தான் வந்திருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு அவரை அங்கிருந்து வெளியேறச் சொல்லி பிரச்சனை செய்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அங்கு அடிதடியும் ஏற்பட்டது.  அங்கு ஏற்பட்ட அந்த பிரச்சனையில் பக்கிரிசாமி கொல்லப்பட்டார்.  பக்கிரிச்சாமி கொல்லப்பட்ட தகவல் நெல் உற்பத்தியாளர்கள் தரப்பை சென்று சேர்ந்தது.

 

அங்கு நூற்றுக்கணக்கில் குவிந்திருந்த அடியாட்கள் கும்பல் விவசாயத் தொழிலாளர்கள் வசிக்கும் குடிசைப் பகுதியை நோக்கி கொலை வெறியோடு வந்தார்கள். தங்களைத் தாங்குவதற்கு ஒரு பெரும் கும்பல் நெல் உற்பத்தியாளர் சங்க தலைவர் கோபால கிருஷ்ணன் நாயுடு  தலைமையில் பயங்கரமான ஆயுதங்களுடன் வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்த விவசாயத் தொழிலாளர்கள், அதற்கு மேலும் அங்கு இருந்தால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என பயந்து இரவையும் பொருட்படுத்தாமல் திசைக்கு ஒருவராக ஓடி கீழ்வெண்மணி கிராமத்திற்கு வெளியே இருந்த வயல்வெளிகளுக்குள் பதுங்கிக் கொண்டார்கள். அவர்களோடு ஓடி பதுங்கிக் கொள்ள முடியாத பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் அங்கே இருந்த ராமய்யா என்பவரின் வீட்டிற்குள் பயந்தபடி அமைதியாக பதுங்கி இருந்தார்கள்.

 

அப்படி அவர்கள் அந்த குடிசைக்குள் பதுங்கியதற்கு காரணம், விவசாயத் தொழிலாளர்கள் வசித்து வந்த அந்தப் பகுதியில் கதவும் மண் சுவரும் கொண்ட ஒரே குடிசை வீடு அது மட்டும் தான். மற்ற குடிசைகள் எல்லாம் வெறும் ஓலையால் மட்டுமே வேயப்பட்டிருந்தது. இதனால் அந்தப் பகுதியில் அதிக பாதுகாப்பு கொண்ட வீடாக ராமய்யாவின் குடிசையை கருதிய அந்த மக்கள் சப்த நாடி ஒடுங்க அந்த சின்ன குடிசைக்குள் ஒடுங்கி இருந்தார்கள். ஆனால் பாதுகாப்பு என நினைத்து அவர்கள் பதுங்கி இருந்த அந்த இடம்தான் அவர்கள் மொத்த பேருக்கும் ஒற்றை வரலாற்றில் நினைவிடமாக இருக்கப் போகிறது என அப்போது  அவர்கள்  யாரும் நினைத்து  கூட பார்த்திருக்க மாட்டார்கள். 

 

கோபால கிருஷ்ணன் நாயுடு தலைமையில் விவசாயத் தொழிலாளர்களின் குடிசைப் பகுதிக்குள் நுழைந்த அந்தக் கொலை வெறி கும்பல், கண்களில் ஆத்திரத்தோடும் கையில் ஆயுதங்களோடும் விவசாயத் தொழிலாளர்களைத் தேடி அலைந்தது. எங்கு தேடியும் ஒருவர் கூட அவர்கள் கையில் சிக்கவில்லை. இதனால் மேலும் வெறி ஏறிய அவர்கள் ஒவ்வொரு குடிசையாக அடித்து நொறுக்கத் துவங்கினார்கள். அப்படி அவர்கள் நடத்திய படு பயங்கர தாக்குதலின் போது ஒரு குடிசை மட்டும் சாத்தி இருப்பதை கவனித்தார்கள். உடனே ஊர் மொத்தமும் அந்தக் குடிசைக்குள் தான் ஒளிந்துள்ளனர் என்பதை உணர்ந்த அந்தக் கொலை வெறி கும்பல், தனித்தனியாக தாக்குவதை விட மொத்த பேரின் கதையையும் ஒரேடியாக முடிக்க நினைத்து அடங்காத கொலை வெறியோடு ராமையாவின் குடிசையை சுற்றி வளைத்த அந்த கும்பல், அந்த குடிசையில் இருந்து யாரும் வெளியேறாதபடி குடிசையின் எல்லா பக்கமும் தீ வைத்தார்கள். எல்லா பக்கமும் தீயை பற்ற வைத்ததால் பற்ற வைத்த கொஞ்ச நேரத்திலேயே தீ திகு திகுவென பற்றி எரிய ஆரம்பித்தது.

 

குடிசை பற்றி எரிய ஆரம்பித்ததும் உள்ளே இருந்த மக்கள் அனைவரும் அலறித் துடித்தனர். எந்த ஓசையும் இல்லாத இரவு நேரம் என்பதால் அலறித் துடித்த அந்த மக்களின் மரண ஓலம் அந்தப் பகுதி முழுவதும் எதிரொலித்தது. எரிந்து கொண்டிருந்த குடிசைக்குள் ஒரு இளம் தாயும் சிக்கிக்கொண்டதால் அந்தத் தாய் தன் பிஞ்சுக் குழந்தை மட்டுமாவது பிழைத்துக் கொள்ளட்டும் என்று நினைத்து தன் குழந்தையை எரியும் குடிசைக்கு உள்ளிருந்து வெளியே வீசி இருக்கிறார். தீயில் கருகி வெளியே வந்து விழுந்த அந்தக் குழந்தையை மறுபடியும் எடுத்து நெருப்புக்குள் வீசி இருக்கிறது கோபால கிருஷ்ண நாயுடுவின் கொலைவெறி கும்பல். மறுநாள் விடிந்த பிறகுதான் கீழ வெண்மணியில் இப்படிப்பட்ட துயரம் நடந்து முடிந்திருக்கிறது என்பது இந்த உலகிற்கு தெரிய வந்தது.

 

ஒரு இரவு முழுவதும் நடந்த அந்த கொலைவெறித் தாக்குதல் அந்தப் பகுதியில் இருந்த காவல்துறைக்குத் தெரியாமல் இருந்ததா அல்லது தெரிந்தும் அந்தத் திட்டமிட்ட  படுகொலையில் காவல்துறைக்கும் பங்கு இருந்ததா என்பது அப்போது மிகப்பெரிய விவாதப் பொருளாகப் பேசப்பட்டது. மறுநாள் காவல்துறையும், பத்திரிகைகளும், பொதுமக்களும் வந்து சேர்ந்த பிறகுதான் எரிந்த அந்த ஒற்றைக் குடிசைக்குள், முதியவர்களும் பெண்களும் குழந்தைகளுமாக 44  உயிர்கள் பலி ஆகி இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் பத்திரிகைகளில் வெளியான பிறகு உலகம் முழுவதும் அதிர்ச்சியில் உறைந்தது.

 

கீழ்வெண்மணி படுகொலை சம்பவம் தொடர்பாக கீவளூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 327/68 என்ற எண்ணில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நெல் உற்பத்தியாளர் சங்க தலைவர் இரிஞ்சூர் கோபால கிருஷ்ணன் நாயுடு முதல் குற்றவாளியாகவும் அவரைத் தவிர மேலும் 22 பேர் குற்றவாளிகளாகவும் சேர்க்கப்பட்டார்கள். ஆனால் உள்ளூர் காவல் நிலையத்தின் மீது பாதிக்கப்பட்ட மக்கள் அதிருப்தி தெரிவித்ததால் கீழ்வெண்மணி படுகொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதே போல் விவசாயத் தொழிலாளர்களோடு நடந்த கலவரத்தில் இறந்த பக்கிரிசாமி என்பவரின் கொலை வழக்கும் கீவளூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 328/68 என்ற எண்ணில் பதிவு செய்யப்பட்டது.

 

கீழ்வெண்மணி படுகொலை வழக்கின் விசாரணையும், பக்கிரிசாமி என்பவர் மரணம் தொடர்பான விசாரணையும் கீழத்தஞ்சை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மேற்கண்ட இரண்டு வழக்குகளும் ஒரே சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதால் இரண்டு வழக்குகளையும் தஞ்சை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சி.எம் குப்பண்ணா என்பவர் விசாரித்தார். இந்த இரண்டு வழக்குகளும் ஒரே மாவட்ட நீதிபதி முன்னால் விசாரணை நடைபெற்றாலும், அவை தனித்தனி வழக்காக விசாரிக்கப்பட்டன. முதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிலர் இரண்டாவது வழக்கில் சாட்சிகளாகவும், இரண்டாம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர் முதல் வழக்கில் சாட்சிகளாகவும் இருந்தார்கள்.

 

சுமார் இரண்டு  வருட காலம் நடந்த அந்த இரண்டு வழக்குகளுக்கும் 30.11.1970 அன்று தீர்ப்பளித்தது தஞ்சை விசாரணை நீதிமன்றம். அந்தத் தீர்ப்பில் முதல் குற்றவாளியான இரிஞ்சூர் கோபால கிருஷ்ணன் நாயுடு மற்றும் எட்டு பேருக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மேலும் ஐந்து பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்த தஞ்சை நீதிமன்றம். சட்டவிரோதமாக கூடி சட்டத்திற்கு புறம்பான காரியங்களை செய்தததும்  மேலும் கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தான் இந்த தண்டனைக்கான காரணங்களாகக்  கூறியது. 

 

thanjavur keezhvenmani daily wage hike request incident due to affected labours 

 

44 பேர் உயிரோடு எரிக்கப்பட்டதற்கு எந்த தண்டனையும் வழங்காமல் அவர்களை கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்தது. ஆனால் பக்கிரிசாமி என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் குற்றவாளியான கோபால் என்பவருக்கு ஆயுள் தண்டனையும் இரண்டாவது குற்றவாளியான ராமையாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மீதி நான்கு பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்திருந்தது தஞ்சை நீதிமன்றம். பக்கிரிசாமி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் மற்றும் சிறைத்தண்டனை பெற்ற ராமையன் இருவரும் 1971 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். அதே போல் கோபால கிருஷ்ணன நாயுடு தரப்பும் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து 1970 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். ஆனால் பக்கிரிசாமி கொலை வழக்கை உடனே விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் 1972 ஆம் ஆண்டில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை மீண்டும் உறுதி செய்தார்கள். அதை எதிர்த்து கோபால் மற்றும் ராமையன் இருவரும் உச்சநீதிமன்றம் சென்று 13 வருடங்களுக்குப் பிறகு அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், அவர்களின் மனுவை தள்ளுபடி செய்தது.

 

thanjavur keezhvenmani daily wage hike request incident due to affected labours 

 

சில காலம் கழித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கீழ்வெண்மணி படுகொலை வழக்கில் கோபாலகிருஷ்ண நாயுடு தரப்பு செய்த மேல்முறையீடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும் கோபால கிருஷ்ண நாயுடு விவசாயத் தொழிலாளர்களின் போராட்டம், கீழ்வெண்மணியில் மாவோயிசம் பரவ காரணமாக அமைந்து விட்டது. எனவே விவசாயத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிக்கக் கூடாது என்று அப்போதைய அரசுக்கு எழுதிய கடிதத்தையும் தாக்கல் செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் நாள் 44 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட அந்த வழக்கில் ஓர் அதிர்ச்சிகரமான தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பில், குடிசைக்கு தீ வைத்த சம்பவத்திற்கு போதிய ஆதாரம் இல்லை என்றும் சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்பட்ட 23 பேரும் மிராசுதார்கள் என்பதால் அவர்கள் நேரடியாக குற்றச் செயலில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்பதாலும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக அறிவித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

 

thanjavur keezhvenmani daily wage hike request incident due to affected labours 

 

குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது அன்றைய தமிழக அரசு. ஆனால் அதை 14 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், 1990 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த வழக்கை  முதலில் விசாரித்த கீழ் நீதிமன்றமும் மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றமும் ஒருமித்த கருத்தை கூறி இருப்பதால் கீழ் நீதிமன்றங்களின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று தமிழக அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது. ஆனால் கீழ் நீதிமன்றங்கள் வெவ்வேறான தீர்ப்பு வழங்கி இருந்தது என்பதும் அதை உச்சநீதிமன்றம் ஏன் உணராமல் போனது என்பதற்கும் இப்போது வரை விடை கிடைக்கவில்லை. மேலும் இந்தியாவையே உலுக்கிய ஒரு சம்பவம் எப்படி இந்திய நீதிமன்றங்களின் முன்னால் எடுபடாமல் போனது என்பதும் நீதித்துறை வரலாற்றில் இப்போது வரைக்கும் பெரும் கரும்புள்ளியாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.