அமமுக தலைமை மீது கடும் விமர்சனம் செய்த தங்க தமிழ்செல்வன், தனக்கு ரெஸ்ட் தேவை, சில காலம் அமைதியாக இருக்கப்போகிறேன் என்று மீடியாக்களிடம் தெரிவித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்து கொண்டார்.
இதுதொடர்பாக அமமுகவின் புகழேந்தி கூறுகையில்,
இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்னை விமான நிலையத்தில் இறங்கியவர், ரெஸ்ட் வேண்டும் என்று சொல்லிவிட்டு போனார். அந்த ரெஸ்ட் என்னவென்று இப்போது எல்லோரும் பார்த்துவிட்டனர். சென்ற இடத்திலாது விஸ்வாசத்தோடு தொடர வேண்டும். நாளை திமுக ஒரு தோல்வியை சந்தித்தால், அங்கிருந்து ஜம்ப் பண்ணி போய்விடக்கூடாது. அமமுக தோல்வி என்றதும் இங்கிருந்து போனார். நாளை அங்கு தோல்வி என்றால் அங்கிருந்து செல்வாரா?
தங்க தமிழ்செல்வன் எடுத்த முடிவு தெரிந்துவிட்டது. இதனைத்தான் தினகரன் சொன்னார் பொறுத்திருந்து பாருங்கள், இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள், என்ன செய்யப்போகிறார்கள் என்பது தெரியும் என்றார்.
அமமுகவில் இருந்து வருபவர்களை வரவேற்று ஆர்வத்துடன் திமுக சேர்த்துக்கொள்வது புரியவில்லை. அமமுகவை ஒழிக்கலாம், அழிக்கலாம் என்று நினைக்கிறார்களா என்பது புரியவில்லை. காலம் பதில் சொல்லும். தங்க தமிழ்செல்வனால் அமமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
தங்க தமிழ்செல்வன் அமமுகவில் நடந்துகொண்டதைப்போல, திமுகவில் நடந்து கொள்ள முடியாது. எனது நண்பர் தங்க தமிழ்செல்வன் சென்ற இடத்தில் நன்றியோடு விஸ்வாசத்தோடு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தொடர்ந்து அமமுகவில் இருந்து வெளியேறிக்கொண்டிருக்கிறார்களே...
இந்த இயக்கத்தில் இருந்து பலன் தேடி வெளியே செல்கிறார்கள். சில நிர்வாகிகள் செல்வதால் இயக்கம் போய்விடும் என்று சொன்னால் எந்த இயக்கமுமே இருந்துவிட முடியாது. எனவே இயக்கம் இருக்கும். நடந்து முடிந்த தேர்தலில் வாக்கு சதவீதத்தில் மூன்றாவது இடத்தை பிடித்தது அமமுக. சில நிர்வாகிகள் செல்வதால், வாக்களித்த அனைவருமே போய்விடுவதாக நினைக்கக்கூடாது. உண்மையான தொண்டர்கள் எங்களிடம் உள்ளனர். இவ்வாறு கூறினார்.