Skip to main content

ஐபிஎல் வீரர்களை சிறைப்பிடிப்போம்! தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 07/04/2018 | Edited on 07/04/2018
thamimun ansari



காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தஞ்சை, நாகை, திருவாரூர், உள்ளிட்ட காவிரி சமவெளி மாவட்டங்களில் சாலை மறியல் அறிவிக்கப்பட்டது. சமவெளியின் கடைகோடி பகுதியான வேதாரண்யத்தில் நடைப்பெற்ற சாலை மறியலில் மஜக பொதுச்செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான மு.தமிமுன் அன்சாரி கைது செய்யப்பட்டார்.
 

போராட்டம் குறித்து நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அவர்,
 

காவிரி உரிமை மீட்புக்குழுவின் சார்பில் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஒத்துழையாமை இயக்கம் என்ற பெயரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் வானொலை நிலையத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றினார்கள். திருச்சி - தஞ்சை சாலையில் பெ. மணியரசன் தலைமையில் 700க்கும் மேற்பட்டவர்கள் மறியல் செய்து கைதாகினர். சமவெளியின் கடைகோடி பகுதியான வேதாரண்யத்தில் எனது தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் 250க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.
 

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் இழைத்துள்ளது. இனி மத்திய அரசை நம்பி பலனில்லை. உச்சநீதிமன்றமே நேரடியாக தலையிட்டு வலிமை வாய்ந்த அதிகாரங்களுடன் கூடிய காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்ட கிராமங்கள் சோகத்திலும், துக்கத்திலும் துடித்துக்கொண்டிருக்கின்றன. கிராமம் கிராமமாக மக்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதுக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட துன்பமான ஒரு நிலையில், சோகமான ஒரு சூழலில் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்துவது தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிரான நிகழ்வாகும்.

 

thamimun ansari


ஒரு சோகமான சூழலில் தமிழகம் இருக்கும்போது ஒரு கேளிக்கை போட்டியை நடத்த யாரும் விரும்பவில்லை. எனவே இந்த போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று நாங்கள் வைத்த கோரிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழ் தேசிய இயக்க தலைவர்களும், சமூக நீதி அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும், விவசாய சங்கத் தலைவர்களும் ஆதரவு வழங்கியிருக்கிறார்கள்.
 

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இருந்து எங்களுக்கு ஆதரவு பெருகியிருக்கிறது. அவர்களும் எங்களுடைய நியாயத்தினை உணர்ந்து எங்களுக்கு ஆதரவாக இணையதளங்களில் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள்.
 

தமிழக முதல் அமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அதில், இதற்கு முன்பு முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மா, ஈழத் தமிழர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி பங்கேற்கக் கூடாது என்று நெருக்கடி கொடுத்தார். அதையே முன்மாதிரியாக வைத்து தற்போது ஐபிஎல் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளேன்.

 

thamimun ansari


 

முதல் அமைச்சர் தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து இந்த போட்டியை ரத்து செய்வார் என்று எதிர்பார்க்கிறோம். அதையும் மீறி ஐபிஎல் போட்டி நடக்குமேயானால் மூன்று வகையான போராட்டங்களை நடத்துவோம். கிரிக்கெட் ரசிகர்களை மைதானத்தில் இறக்கிவிடுவோம். டிக்கெட்டை திரும்பக்கொடுத்து கட்டணத்தை திரும்பப்பெறும் போராட்டத்தை நடத்துவோம். கிரிக்கெட் மைதானத்தில் நுழையும் வீரர்களையும் சிறைப்பிடிப்போம்.
 

காவிரி உரிமை மீட்பு குழுவின் சார்பில் இந்த போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்தில் நான், சீமான், தனியரசு எம்எல்ஏ, கருணாஸ் எம்எல்ஏ, காவிரி உரிமை மீட்பு குழுவின் தலைவர் பெ.மணியரசன், விவசாய சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் நேரடியாக கலந்து கொள்வோம்.

 

Thamimun Ansari


 

நாங்கள் யாரும் கிரிக்கெட் விளையாட்டுக்கு எதிரானவர்கள் அல்ல. கிரிக்கெட் ரசிகர்கள் எங்களுடைய சகோதர, சகோதரிகள்தான். நம்முடைய விவசாயிகளின் துன்பத்தை அவர்கள் பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்த போராட்டத்தில் ஆதரவு தர வேண்டும் என்ற கேட்டிருக்கிறோம். ஒரு ஐபிஎல் போட்டியை ரத்து செய்வதன் மூலம் தமிழக விவசாயிகளின் வலிகளையும், கண்ணீரையும் உலகம் அறிய வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.