இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்ற நிலையில் தற்போது 15 பேர்கள் கொண்ட குழுவினரை 12,000 ஆண்டுகளின் வரலாற்றை எழுத மத்திய அரசு அமைத்துள்ளது. அந்தக் குழுவில் 6 பேர் சமஸ்கிருத பேராசிரியர்கள். 4 பேர் வரை பா.ஜ.க வரலாறு பேசும் நபர்கள், ஒருவர் பிராமணர் சங்கத் தலைவர், மற்றொருவர் கனடாவில் வசிக்கும் மருத்துவ ஆய்வாளர்.
மொத்த வரலாறும் புதைந்துகிடக்கும் தென்னிந்தியாவில் இருந்தோ அல்லது சுமார் 70 ஆயிரம் கல்வெட்டுகளை தன்னகத்தே கொண்ட தமிழ்நாட்டில் இருந்தோ ஒரு அறிஞரும் இல்லை என்பதுதான் வேதனையாக உள்ளது.
இந்தியாவின் வரலாறு என்பது தமிழகத்தில் இருந்து தான் தொடங்கப்பட வேண்டும் என்பதை பல காலங்களில் வரலாற்று ஆய்வாளர்களும், அறிஞர்களும் சொன்னாலும் கூட அதை இந்த மத்திய அரசாங்கம் ஏற்றதாகத் தெரியவில்லை. அதற்கு மாநில அரசும் அழுத்தம் கொடுக்கவில்லை. கனிமொழி எம்.பி. நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய நிலையில் சரியான பதிலும் இல்லை.
தமிழக முதல்வர் தலையிட்டு உண்மையான வரலாற்றை எழுத ஆய்வாளர்களை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழக தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் கூறுகையில்,
"இப்ப இருக்கிற அரசாங்கம் தனக்கு வேண்டிய வரலாற்றை எழுதுவதற்கு ஆய்வாளர்களை நியமித்திருப்பார்கள். உண்மையான வரலாறு எழுதுவது என்பது வேறு, அவங்க அவங்களுக்கு வேண்டியது போல எழுதுவது என்பது வேறு.. அதனால் இப்ப இருக்கிற பா.ஜ.க அரசாங்கம் தமிழ்நாட்ல ஒரு வரலாறு இருந்தது என்பதையே ஏற்காது. அதாவது தென்னிந்திய வரலாற்றையே ஏற்காது.
அதாவது புராணகாலத்தில் இருந்து மேலே இருந்து விமானம் வந்தது. விநாயகருக்கு கழுத்தை வெட்டி ஆபரேசன் செஞ்சதா புராணங்களில் சொல்வதை வரலாறாகச் சொல்வார்கள். அதற்கு வேண்டிய அறிவாளிகளை வைத்துக் கொண்டு எழுதுவார்கள். மற்றபடி பொதுவான வரலாறு எழுத தமிழ்நாட்டில் இருந்து அறிவாளிகளை போட்டால் அவங்க கீழடி அகழாய்வு முடிவு, ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவு, சிந்து சமவெளி ஆய்வு முடிவுகளைக் கொண்டு வர நினைப்பார்கள். அந்த வரலாறு இந்த ஆட்சியாளர்களுக்குத் தேவையில்லை.
அதற்காக அவர்கள் விரும்புகிற ஆய்வாளர்களை நியமித்து வரலாறு எழுதுகிறார்கள். இந்தக் குழுவில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை. தலித்துகள் இல்லை. முழுமையாக தென்னிந்தியர்களின் பிரதிநிதித்துவம் இல்லை என்பதைப் பார்க்கும் போது உண்மையான வரலாறு எழுதவில்லை. பா.ஜ.கவுக்கான வரலாறு எழுதுவதாகத்தான் காட்டுகிறது.
கனிமொழி எம்.பி. கூட பேசினாங்க. ஆனால் அதையெல்லாம் மத்திய அரசாங்கம் கேட்கமாட்டாங்க. பெரிய ஆய்வாளர்கள் பலர் இருக்காங்க அவங்களை எழுதச் சொன்னால் அவர்கள் உண்மையான வரலாற்றை எழுதுவாங்க. அந்த உண்மையான வரலாறு இவர்களுக்குத் தேவையில்லை. அதனால அவர்களை அனுமதிக்கல. சமஸ்கிருத பேராசிரியர்கள், பிராமண ஆதரவாளர்கள் தான் எழுதுவார்கள். அதனால் உண்மையான வரலாறு எழுதப்படாது. சார்பு நிலையில் தான் எழுதப்படும்" என்றார்.
தமிழ் செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கு மிக அபரிமிதமான சான்றுகளை தமிழகத்திலிருந்து தொகுத்துக் கொடுத்த ஆய்வாளர்களில் ஒருவரான தொல்லியலாளர் ராஜவேலு கூறுகையில்,
"ஆங்கிலேயர்கள் காலத்திலேயே தென்னிந்தியாவில் இருந்துதான் இந்திய வரலாறுகள் எழுதப்பட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். தமிழ் தான் பழமையான மொழி என்று பாரதப் பிரதமர் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், இந்தியாவிலேயே அதிக கல்வெட்டுச் சான்றுகள், பட்டயங்கள், கற்காலச் சான்றுகள் உள்ளிட்ட இன்னும் பிற முதன்மை வரலாற்றுச் சான்றுகளையும் தொடர்ச்சியாக வெளிக்கொணர்ந்து அனுபவம் பெற்றிருக்கிற ஏராளமான தமிழக ஆய்வாளர்கள் இருப்பினும், அவர்கள் யாரையும் அரசாங்கம் சேர்க்கவில்லை. எனவே இந்த விஷயத்தில் தமிழ்நாட்டில் இருந்தும், தென்னிந்தியாவில் இருந்தும் தொடர்ச்சியாக தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் தமிழக தொல்லியலாளர்களையும், தமிழ் அறிஞர்களையும் இணைப்பதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதன்மைச் செம்மொழியாக தமிழ் இருக்கும் போது அம்மொழியில் நிபுணத்துவம் பெற்ற வரலாற்று ஆய்வாளரை நியமிக்க வேண்டும். அதேபோல நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும், இது சார்ந்து அரசின் கவனத்தை ஈர்த்து, தமிழக ஆய்வாளர்களை இடம் பெறச் செய்வதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
கடந்த 40 ஆண்டுகளாக 1,000 -க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளிட்ட தொல்லியல் சான்றுகளைக் கண்டுபிடித்து இந்திய தொல்லியல் துறைக்கு உதவி வரும் கல்வெட்டு ஆய்வாளர் மேலப்பனையூர் கரு.ராஜேந்திரன் கூறுகையில்,
"வரலாறு என்பது முதன்மைச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட வேண்டும். அவ்வாறு எழுதப்படும் போதுதான் அது உலகளவிலும் அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். தொல்லியலில் முதன்மைச் சான்றுகளாக இருக்கக்கூடிய கல்வெட்டுகள் பட்டயங்கள், தொல்லிடங்கள், அகழ்வாய்வுச் சான்றுகள், வாழ்வியல் தடயங்களை, அடிப்படையாக வைத்தே வரலாறு எழுதப்பட வேண்டும்.
அந்த அடிப்படையில் பார்த்தால் இந்திய அளவில் முதன்மைச் சான்றான கல்வெட்டுகளை அதிகமாகக் கொண்டது தமிழ்மொழி. அதாவது நான்கில் மூன்று பங்கு கல்வெட்டுகள் தமிழகத்திலும் தென்னிந்திய மொழியிலும் உள்ளன.
25 சதவீத அளவில் மட்டுமே கல்வெட்டுகளையும் இன்னும் பிற சான்றுகளையும் கொண்டுள்ள அல்லது அதுபற்றி சமஸ்கிருத மற்றும் வடநாட்டில் ஆய்வு செய்து வரும் ஆய்வாளர்களை வைத்து இந்திய வரலாற்றைக் கட்டமைப்பது என்பது சரியான அணுகுமுறை அல்ல.
75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகளை வாசிக்காமல் அதன் உண்மை வரலாற்றைத் தவிர்த்துவிட்டு ஒரு குறிப்பிட்ட பகுதியின் வரலாற்றை மட்டும் இந்தியாவின் வரலாறாகக் கூற நினைத்தால், எப்படி அது சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். இது இன்றோடும் நாளையோடும் முடியப் போகிற விடயமல்ல. 'வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியா'வின் தாரக மந்திரம், பன்மொழிகளையும் பல்வேறு கலாச்சார வேறுபாடுகளையும் கொண்ட இந்தியத் திருநாட்டில் அதன் வரலாறு பன்முகத் தன்மையோடு இருப்பதே ஏற்புடையதாக இருக்கும் அதுதான் இயற்கையானது. அதை மாற்ற நினைத்தால் அது நமது நாட்டின் வரலாற்றைத் திரிபு செய்வதாக அமைந்துவிடும்.
புதுக்கோட்டையின் நீர் பாசனங்கள் பற்றியும்,அதுகுறித்து உள்ள கல்வெட்டுகள் பற்றியும் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டி பேசியவர் பாரதப் பிரதமர். அவரின் கீழ் இயங்கும் பண்பாட்டுத் துறை, உரிய பிரதிநிதித்துவத்தை தமிழ் மொழி அறிஞர்களுக்கும், தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்களுக்கும் வழங்கிட முன்வர வேண்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் தென் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து மாநில முதல்வர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் இது சார்ந்து கவனயீர்ப்பு செய்ய வேண்டும்.
பல நாடுகளுக்குச் செல்லும் போதும் பல்வேறு பொது மேடைகளிலும், தமிழ் மொழியையும் அதன் இலக்கியங்களையும், கல்வெட்டுகளையும் மேற்கோள் காட்டி பேசிவரும் மாண்புமிகு பாரத பிரதமர் தமிழக பிரதிநிதிகளை வரலாற்றை எழுதப் போகும் குழுவில் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் அவர் பேசிய பேச்சு முழுமையடையும் "என்றார்.
இப்படிப் பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில், டெல்லியில் இருக்கும் தமிழக எம்.பி.க்களும், தமிழக அரசும் உரிய அழுத்தம் கொடுத்து உண்மையான இந்திய வரலாற்றை எழுத, தென்னிந்திய ஆய்வாளர்களை உள்ளே கொண்டுபோக வேண்டும் என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.