ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறை மக்கள்தொகை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன்படி, கடந்த 2011- ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்போது இந்த விவரங்கள் தெரிய வந்திருக்கிறது. சொல்லப்போனால், இந்த எழுதப்படிக்க தெரியாதவர்களின் புள்ளி விவரம் என்பதும்கூட கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் பழையது.
தமிழகத்தில்,1990- களில் அறிவொளி என்ற பெயரில் எழுத்தறிவு இயக்கம் செயல்பட்டு வந்தது. அறிவொளி இயக்கத்தில் கொஞ்சம் மாற்றங்கள் செய்யப்பட்டு, கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது 'சச்சார் பாரத்' என்ற பெயரில் வயது வந்தோருக்கான எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இப்போது பாஜக ஆட்சியில் மீண்டும் அத்திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, 'கற்போம் எழுதுவோம் இயக்கம்' என பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த புதிய எழுத்தறிவு இயக்கத்தின்படி, 15 வயதுக்கு மேற்பட்ட, கொஞ்சமும் எழுதப்படிக்க தெரியாத மக்களுக்கு அடிப்படை கற்றல் பயிற்சி அளிப்பதுதான் நோக்கம். தன்னார்வலர்கள் மூலம் இத்திட்டத்தில் கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ''புதிய எழுத்தறிவு திட்டத்தின் கீழ், எழுதப்படிக்க தெரியாத மக்களுக்கு ஆண்டுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி வழங்கப்படுகின்றன. அதன்படி மே முதல் ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர், ஜனவரி முதல் ஏப்ரல் வரை என மூன்று கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படும்.
கற்றல் பயிற்சிக்கு வரும் மக்களின் விருப்பத்திற்கேற்ப பயிற்சி வகுப்புக்கான நேரம் ஒதுக்கப்படும். தினமும் 2 மணி நேரம் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மொத்தம் 120 மணி நேரத்திற்கு கற்றல், கற்பித்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
பயிற்சி அளிக்கும் தன்னார்வலர்களுக்கு ஏற்கனவே மாவட்ட அளவிலான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இப்போது வட்டார அளவிலான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை இத்திட்டத்தில் பணியாற்ற 1200 தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் நவ. 30- ஆம் தேதி முதல் கற்றல், கற்பித்தல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன,'' என்கிறார்கள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள். பயிற்சி முடிவில் வாய்மொழி மற்றும் எழுத்துத்தேர்வும் நடத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.