Skip to main content

நனையும் ஆட்டுக்காக அழுகிற ஓநாய்! - கோயில்களை அபகரிக்கும் ஈஷா!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021
ddd

 

சிவராத்திரி விழாவை ஜிலுஜிலு ராத்திரியாக மாற்றிய பெருமைக்குரியவர் ஈஷா யோக மையம் எனும் ஆன்மிக வியாபாரத்தலத்தை நடத்திவரும் ஜக்கிவாசுதேவ் சாமியார். பிரதமர் முதல் பிரபல திரை நட்சத்திரங்கள் வரை பலரையும் அழைத்து, தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டவர். சிவனுக்கு ஆதியோகி சிலை வைக்கிறேன் என்று சொல்லி, தன் முகத்தை சிலையாக வைத்து பக்தர்களையே அதிர்ச்சியடைய வைத்தவர்.

 


ஈஷா மையத்தில் எந்த நிகழ்வாக இருந்தாலும் தனித்தனிக் கட்டணம் விதித்து, அதற்கேற்ப அனுமதிக்கும் கார்ப்பரேட் சாமியாரான ஜக்கி வாசுதேவ், இந்த சிவராத்திரியில் குவிந்த பக்தர்களிடம் ஓர் அட்டையைக் கொடுத்து, உயர்த்திப்பிடிக்கச் சொன்னார். அந்த அட்டையில், “"கோவில் அடிமை நிறுத்து'’’ என எழுதப்பட்டிருந்தது. "கோவிலில் அடிமைகள் இருக்கிறார்களா, அவர்களை எங்கே கொண்டு போய் நிறுத்துவது' என்றெல்லாம் குழம்ப வேண்டாம். அரசாங்கத்தின் இந்து அறநிலையத் துறையிடம் கோவில்கள் அடிமையாக இருக்கின்றனவாம்... அதை நிறுத்தி, அரசாங்கத்திடமிருந்து விடுவிக்க வேண்டுமாம்.

 

எதற்காக அரசாங்கத்திடமிருந்து விடுவிக்க வேண்டும்?

 

பல கோவில்கள் பராமரிக்கப்படவில்லையாம். ஒருகால பூசைகூட நடைபெறவில்லையாம். அதனால், "அரசாங்கத்திடமிருந்து மீட்டு, இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என்கிறார். அவர் சொல்லும் இந்துக்கள் யார்?

 

 

கொஞ்சம் விவரமாகப் பார்க்கலாம்.

 

 

கடந்த மார்ச் 25-ஆம் நாள் திருவாரூர் தியாகராஜ சாமி திருக்கோவிலின் ஆழித் தேரோட்டம் நடைபெற்றது. 1920-களில் ஓடிய தேர், தீவிபத்தில் எரிந்துபோன நிலையில்... புதிய தேர் வடிவமைக்கப்பட்டு, 1940-களின் நடுப்பகுதிவரை ஓடியது. அதன்பிறகு தேரோட்டம் நின்று போனது. வருமானம் இல்லையா? தியாகராஜ சாமி திருக்கோவிலுக்கு 1000 வேலி நிலம் (1 வேலி=ஏழரை ஏக்கர்) உண்டு. அதனை நிர்வகித்தவர்கள் இந்து பரம்பரை தர்மகர்த்தாக்கள்தான். ஆனாலும், தேரோட்டத்தை நடத்த முடியவில்லை.

 

 

ddd

 

1969-ல் முதலமைச்சரான கலைஞர், அடுத்த ஆண்டு திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை சிறப்பாக நடத்திக்காட்டினார். வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள் பெரியளவில் சிரமப்படாதவாறு, தேரோடும் தெருக்களை அகலப்படுத்தி, தேரின் சக்கரத்துக்கு பால்பேரிங் பொருத்தி, தேரைச் சீராக ஓட்டுகிற வகையில் திருச்சி பெல் நிறுவனத்தின் பொறியாளர்களைக் கொண்டு ஹைட்ராலிக் பிரேக் சிஸ்டம் அமைத்து ஆழித்தேரை ஓடச் செய்தார். இப்போதும் அதே நவீன முறைப்படி தேரோட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்து அறநிலையத்துறைதான் தேரோட்டத்தை நடத்துகிறது. அதன் நெறிமுறைகள் -ஆகமங்கள் ஆகியவற்றை அதற்கான பக்தர்களைக் கொண்ட குழு கவனித்துக்கொள்கிறது.

 

திருக்கோவில் திருவிழாக்களுக்கே உரிய அனைத்து அம்சங்களுடனும் தேரோட்டத்தை சிறப்பாக நடத்துகிறார்கள். அதிலும் இந்த முறை, பங்குனி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் தேரோட்ட வேண்டும் என்கிற இந்து முன்னணி -ஆர்.எஸ்.எஸ். -சிவபக்தர்கள் உள்ளிட்ட அமைப்புகளின் கோரிக்கையையும் ஏற்று, அதே நட்சத்திரத்தில் தேரோட்டம் நடைபெற்றது. நவீன முறையில் கலைஞர் ஆட்சியில் தேரோட்டம் நடைபெற்றபோதும் இதுபோலவே பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஆயில்யத்தில் தேரோட்டம் நடைபெற்றது.

 

பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில், புராதன கோவில்களில் பாதுகாப்பற்ற நிலையில் கைவிடப்பட்டிருந்த இறைவன்-இறைவி செப்புத் திருமேனிகளைப் பத்திரமாக எடுத்து வந்து, திருவாரூர் கோவிலில் கட்டப்பட்ட சிலை பாதுகாப்பு மையத்தில் வைத்தனர். அவை எந்தெந்த கோவில்களுக்கு உரியனவோ, அந்தக் கோவிலின் திருவிழா நடைபெறும்போது, இந்த செப்புத் திருமேனிகள் அங்கு எடுத்துச் செல்லப்படும். அதன்பிறகு மீண்டும் சிலை பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு வரப்படும்.

 

இதனிடையே, புராதன கோவில்களைப் பாதுகாக்கும் பணியை இந்து அறநிலையத்துறை, தொல்லியல் துறை ஆகியனவும் மேற்கொண்டன. அதன் காரணமாக பல கோவில்கள் புனரமைக்கப்பட்டன. அங்கேயே பாதுகாப்பாகச் சிலைகளை வைக்கும் வழக்கம் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, ஆசியாவிலேயே உயரமான திருவரங்கம் கோவிலின் தெற்கு ராஜகோபுரப் பணிகள் நிறைவடைந்து, புனித நீராட்டு நடைபெற்றது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் மன்னை ராஜகோபால சுவாமி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் உள்ளிட்ட பல பெரிய கோவில்களுக்கு குடமுழுக்கு நடை பெற்றது. கும்பகோணம் மகாமகம் குளம், மயிலாப்பூர் தெப்பக்குளம், திருவாரூர் கமலாலயம் திருக்குளம் ஆகியவை தூர்வாரப்பட்டன.

 

திருக்கோவில்களில் ஒரு கால பூசை என்பது உறுதி செய்யப்பட்டது. அதற்கான நிதி வசதி இல்லாத கோவில்களுக்கு நன்கொடைகள் பெறப்பட்டன. உபயதாரர்கள் வாயிலாக பூசை மட்டுமின்றி, அன்னதானமும் நடைபெற்றது. ஜெயலலிதா ஆட்சியில் திருக்கோவில்களில் அன்னதானத்தைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தார். இவை அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு இந்து அறநிலையத்துறையினுடையது. அந்த அறநிலையத்துறையிடமிருந்து கோவில்களை மீட்டு ‘இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜக்கி வாசுதேவ் சொல்கிறார்.

 

 

அவர் மட்டுமா சொல்கிறார்? பா.ஜ.கவின் ஹெச்.ராஜா சொல்கிறார். ஆர்.எஸ்.எஸ். சொல்கிறது. விஸ்வ இந்து பரிஷத் சொல்கிறது. அதையேதான் ஜக்கியும் சொல்கிறார். ஜக்கி பேசுவது, செய்வது எல்லாமே பா.ஜ.க பாணியிலேயே இருக்கும். கோவில்களை அறநிலை யத்துறையிடமிருந்து மீட்பதற்காக 3 கோடி பேர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்களாம். மிஸ்டுகால் கொடுத்திருக்கிறார்களாம். இந்த ‘மிஸ்டு கால்’ கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் தனது கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்காக நுழைத்தது பா.ஜ.க.தான். பல லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்ததாக அந்தக் கட்சி சொன்னது. தனித்து நின்று நோட்டாவைவிடக் குறைவாக ஓட்டு வாங்கியது. ஜக்கியும் அதே போல ஏமாற்றுகிறார். ஏற்கனவே காவிரியை காப்பதாகக் கூறி மிஸ்டுகால், பண வசூல் என பல மோசடிகளைச் செய்தார்.

 

திருக்கோவில்கள் பாதுகாப்புக்கான இந்து அறநிலையச் சட்டம் என்பது, பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் சென்னை மாகாணத்தை தேர்தல் வெற்றி மூலம் நிர்வாகம் செய்த நீதிக் கட்சி ஆட்சியின் முதல் அமைச்சர் பனகல் அரசரால் கொண்டு வரப்பட்டதாகும். காஞ்சி சங்கராச்சாரியார் உள்ளிட்ட இந்துமதத் தலைவர்களின் ஆலோசனைகள் -திருத்தங்கள் -ஒப்புதல் இவற்றோடுதான் அது நிறைவேற்றப்பட்டது. இதன்படி கோவில் சொத்துகளை ஆக்கிரமித்து வைத்திருந்த தனியார் பெருமுதலைகளிடமிருந்து அவற்றை மீட்டு, உரிய கணக்கு வழக்குடன் நிர்வாகம் செய்யும் பணியை அரசு மேற்கொண்டது. திருவிழாக்கள் உள்ளிட்ட ஆகமங்கள் சார்ந்தவற்றை அரசாங்கம் மாற்ற முடியாது. 

 

ddd

 

பின்னர் சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஓமந்தூர் ராமசாமியார், காமராஜர் போன்றவர்களின் ஆட்சியில் இந்து அறநிலையத்துறை பலப்படுத்தப்பட்டது. அதன் பிறகே, கோவில் நிலங்கள் காலம்காலமாக எவர், எவர் கைகளிலோ சிக்கியிருப்பது கண்டறியப்பட்டு, மீட்கப்பட்டு கணக்கிற்குள் கொண்டு வரப்பட்டது. இந்து அறநிலையத்துறையில் இந்து மதத்தினர் மட்டுமே இடம்பெறுவர். அது அமைக்கும் கமிட்டிகளில் பட்டியல் இனத்தவர் -பெண்கள் உள்பட இந்துக்களே இடம்பெறுவர். எல்லா வகையிலும் இந்து மதத்தினரை சார்ந்தே இயங்கக்கூடிய அறநிலையத்துறையை அரசாங்கத் திடமிருந்து எடுத்து, தனியாரிடம் கொடுக்க வேண்டிய அவசியம் எங்கே வந்தது?

 

"கோவில்கள் பராமரிக்கப்படவில்லை -கோவில் நிலங்கள் பறிபோகின்றன -சிலைகள் திருட்டுப் போகின்றன' என்கிறார்கள். அரசு நிர்வாகத்தில் முறைகேடுகள் இருந்தால் அவற்றை சரிசெய்ய வேண்டியது கட்டாயம். அதே நேரத்தில், சிலைகள் திருட்டுப் போகிறதென்றால், கோவிலின் அர்ச்சகருக்குத் தெரியாமல் களவுபோக முடியாது. செப்புத் திருமேனியை அன்றாடம் தொட்டுப் பூசை செய்யும் உரிமை கொண்டவர்கள் அர்ச்சகர்கள் மட்டுமே. அதிலும், அனைத்து சாதியினரும் அதற்குள் வரக்கூடாது என்று ஒரு தரப்புக்கே பட்டா போட்டுத் தரப்பட்டிருக்கும் நிலையில்... கோவில் சிலைகள் களவு போகின்றன என்றால் அதற்கு உடந்தையாக இருப்பது யார்?

 

சிதம்பரம் நடராசர் கோவிலை அரசாங்கம் நிர்வகித்தபோது, உண்டியல் காணிக்கை லட்சங் களில் இருந்தது. தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப் பட்டபோது, மூவாயிரம், நான்காயிரம் என வெகு வாகக் குறைந்தது. தனியாரிடம் கோவில்கள் ஒப்படைக்கப்பட்டால் என்னவாகும் என்பதற்கு இதுவே சாட்சியம். கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு எனக் கூவுகிற ஈஷா மையம் எங்கே உள்ளது? வெள்ளியங்கிரி அடிவாரத்தில் யானைகள் வலசை செல்லும் வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தால் இன்றுவரை இயற்கை ஆர்வலர்களும், வனப் பகுதி மக்களும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

 

அதிகாரத்தில் இருப்பவர்களிடம் செல்வாக்கை வளர்த்துக்கொண்டு ஆன்மிகத்தின் பெயரால் இயற்கையைச் சுரண்டி வயிறு வளர்ப்போர், "கோவில் அடிமை நிறுத்து'’என்கிறார்கள். இந்நிலையில், தமிழக பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில், "இந்து கோவில்களை ‘துறவிகளிடம் ஒப்படைப்போம்' என வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

 

இப்போது புரிகிறதா, ஆடுகளுக்காக அழுகிற ஓநாய்களின் லட்சணம்?

 

-கீரன்


 

Next Story

ஈஷா யோகா மையம் தொடர்பான விவகாரம்; வெளியான பகீர் தகவல்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Matter relating to Isha Yoga Centre; Released information

தென்காசி மாவட்டம் குலசேகரப்பட்டியைச் சேர்ந்த விவசாயியான திருமலை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தன் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா தன்னார்வலராக கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில் கடந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் இருந்து தொடர்பு கொண்டவர்கள் கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்களா என்று கேட்டதுடன் கடந்த 3 நாட்களாக கணேசன் ஈஷா யோகா மையத்திற்கு வரவில்லை என கூறினர்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி  ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா கோவை மாவட்டம் பாரந்துறை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்த பாரந்துறை காவல் நிலைய போலீசார் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி காணாமல் போன தனது சகோதரர் கணேசனை மீட்டுத் தர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

Matter relating to Isha Yoga Centre; Released information

இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள், எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு முன்பு இன்று (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜதிலக், “கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஈஷா மையத்தில் பணியாற்றியவர்களில் வெவ்வேறு தேதிகளில் தற்போது வரை 6 பேர் மாயமாகியுள்ளனர்” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும் இந்த வழக்கு ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர். 

Next Story

தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்கத் தடை

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Ban on sale of cotton candy across Tamil Nadu

புதுச்சேரியின் கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவுப் பாதுகாப்புத் துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்திருந்தனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்கத் தடை விதிக்கப்பட்டது. அரசிடம் இருந்து முறையான ஒப்புதலோடு விற்பனைக்கான உரிமம் பெற்ற பிறகுதான் மீண்டும் பஞ்சு மிட்டாயை விற்பனை செய்ய வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் பிறப்பித்திருந்தார்.

அதே சமயம் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறையின் சார்பில் சென்னை மாவட்ட அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறையினர் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஞ்சுமிட்டாய் தயாரிக்கும் இடங்களில் சோதனை நடத்தி தரமில்லாத மற்றும் ரசாயனம் கலக்கப்பட்ட பஞ்சுமிட்டாய் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்திருந்தனர்.

மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் 'ரோடமைன் பி' என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கலப்படம் செய்யப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பிங்க், பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிட வேண்டாம் என உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் ‘ரோடமைன் பி’ உள்ளிட்ட ரசாயனங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு உணவுப் பாதுகாப்புத்துறை பரிந்துரை செய்திருந்தது. 

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பஞ்சுமிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.