சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அப்போது பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வை வழி நடத்த திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜே.சி.டி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன், மோகன், கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் ஆகிய 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "2021- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஆதாயம் தேடும் எதிர்க்கட்சிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது" என்றார்.
அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி கடந்து வந்த பாதை!
சேலம் மாவட்டத்தில் 1954- ஆம் ஆண்டு பிறந்தவர் எடப்பாடி பழனிசாமி. 1974- ஆம் ஆண்டு அ.தி.மு.க.வின் கிளைச் செயலாளராக அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1989- ஆம் ஆண்டு அ.தி.மு.க. (ஜெ) அணியில் வெற்றி பெற்று முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். அதைத் தொடர்ந்து 1991- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். 1996- ஆம் நடந்த தேர்தலில் தோல்வியடைந்தார். அதன்பிறகு, 1998- ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் திருச்செங்கோடு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2011- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுநெடுஞ்சாலைத்துறை அமைச்சரானார். விசுவாசமிக்க செயல்பாடுகளால் முக்கியமான 5 அமைச்சர்களில் ஒருவராக மாறினார். ஜெ. மறைவுக்கு பின் முதல்வரான ஓ.பி.எஸ். ராஜினாமா செய்ததால் 2017- ஆம் ஆண்டு முதல்வரானார் பழனிசாமி. ஆட்சிக் கவிழ்ந்து விடும் என்ற பேச்சையெல்லாம் தவிடு பொடியாக்கினார்.
ஜெ.வுக்கு பிறகு அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது!
1991- ஆம் ஆண்டுக்கு பிறகு புதிய முதல்வர் வேட்பாளரை அறிவித்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது அ.தி.மு.க. 1991- ஆம் ஆண்டில் இருந்து 2016- ஆம் ஆண்டு தேர்தல் வரை முதல்வர் வேட்பாளராக ஜெயலலிதா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.