Skip to main content

காட்டுக்காகவே வாழ்ந்து காட்டிலேயே செத்தாரு! - கர்நாடகாவில் மரணமடைந்த தமிழ் வனஅலுவலர் மணிகண்டன்   

Published on 06/03/2018 | Edited on 06/03/2018

தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் எஸ்.மணிகண்டன்(45) கர்நாடக மாநிலம் நாகரகோலி வன புலிகள் பாதுகாப்பு சரகத்தின் முதன்மை பாதுகாவலராக மற்றும் கள இயக்குனராகவும் இருந்த இவர் கடந்த சனிக்கிழமை (3 மார்ச் 2018) காட்டுயானை தாக்கி பரிதமாக உயிழந்தார். 2001-ஆம் ஆண்டு பணிப்பொறுப்பை ஏற்ற இவர் அந்த வனப்பகுதிவாழ் மக்களுக்கும் வனத்துறைக்கும் ஒரு பாலமாக தன் பணியில்  நேர்மையுடனும், சிரத்தையுடனும் இருந்தவர் என புகழாரம் சூட்டியுள்ளனர் அப்பகுதி மக்கள். தேனி மாவட்டம் கம்பம் பகுதி கொண்டித்தொழு தெருவைச் சேர்ந்த இவரது  மனைவி சங்கீதா. இவருக்கு கவிலேஷ் என்ற மகனும் மிதுலா என்ற மகளும் உள்ளனர்.


 

manikandan forest officer




கடந்த சனிக்கிழமை இவர் தலைமையில் கபிணி ஆற்றை ஒட்டிய வனப்பகுதியில் ஏற்பட்ட சிறிய காட்டுத்தீயை அணைத்து பாதிப்பு நிலவரங்களை பார்வையிட வன அதிகாரி உட்பட 15 பேர் சேர்ந்த குழுவுடன் நள்ளிரவு சுமார் 1.30 மணிக்கு சென்றபோது இந்த காட்டுயானை தாக்குதல் நடைபெற்றது. இதைப்பற்றி வன அதிகாரி சுப்ரமணியம் கூறுகையில், ''எங்கள் குழு காட்டுத்தீயினால் ஏற்பட்ட பாதிப்புகளை தனித்தனியாக பிரிந்து பார்வையிட்டு கொண்டிருந்தோம். பிறகு தீயின் பாதிப்புகள் பற்றிய GST ரீடிங் எடுத்துக்கொண்டிருந்தோம். அப்போது காட்டுப்புதரில் மறைந்திருந்த காட்டுயானை எக்காளமிட்டு, சத்தத்துடன் திடீரென எங்களை நோக்கி விரட்டியது. நான் மற்றும் குழுவிலுள்ளோர் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு தெறித்து ஓடமுற்பட்டோம். அப்போது தடுமாறி கீழே விழுந்த மணிகண்டனை யானை தாக்கியது. நான் சிறு காயங்களுடன் தப்பினேன். மேலும் காட்டுயானையை துரத்த உடனே மிக அதிக சத்தத்துடனான அலாரத்தை எழுப்பினோம். அவரைத் தாக்கிய காட்டுயானை அந்த சத்தத்தினால் காட்டிற்குள் ஓடி மறைந்தது. இந்த நிகழ்வு வெறும் 25 நொடிகளிலேயே நடந்தேறியது. பிறகு குழுவில் உள்ள அனைவரும் தாக்கப்பட்ட அதிகாரியை மீட்டு மைசூர்-மணடவடி சாலையில் காத்திருந்த ஜீப்பில் ஏற்றிக்கொண்டு H.D கோட் மருத்துவமனைக்கு விரைந்தோம். ஆனால் மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

காட்டுயானையால் தாக்கப்பட்டு உயிரிழந்த மணிகண்டனை அவருடன் பணியாற்றிய சக ஊழியர்கள் 'பீல்ட் மேன்' (FIELD MAN) என அன்பாக அழைத்து வந்தனர். அந்த அளவிற்கு நேர்மையும், கடுமையாக பணியாற்றும் திறமையும் இவரிடத்தில் இருந்துள்ளது. மேலும் நாகரகோலி வனச்சரகத்தில் காட்டுயானைகளின் எண்ணிக்கை பற்றிய ஆய்வுகளில் ஆர்வம் கொண்டு முன்னிற்பவர் இவர். இவர் தொடக்கத்தில் பெங்களூரு, BRT சரணாலயம், பல்லாரி, ரய்ச்சூர் போன்ற இடங்களில் பணியாற்றி கடந்த ஆண்டுதான் பதவிஉயர்வு பெற்று இங்கு மாறுதலானார். தேனியில் கம்பம் பகுதியில் கிராமத்து வனப்பகுதி சூழலில் வாழ்ந்து வந்ததால் காட்டுவிலங்குகள் பற்றிய விழிப்புணர்வும், வனவிலங்குகள் பாதுகாப்பு பற்றிய எண்ணங்களும் இவருக்கு அதிகம் என்று ஊர் மக்கள் இவரை புகழின் உச்சியில் வைத்து அலங்கரிக்கின்றனர். தமிழ்நாடு விவசாய பல்கலைகழகத்தில் விவசாய அறிவியல் படித்து பூச்சியியல் (ENTOMOLOGY) படிப்பில் ஆராய்ச்சி முடித்துள்ளார் இவர்.

 

elephant chase




இவருடன் முன்பு பணியாற்றிய, வனப்பாதுகாப்பு அதிகாரி உள்ள தீபிகா பாஜ்பாய் கூறுகையில், ''கடந்த 2015 முதல் இவருடன் பணியாற்றிவந்தேன். முதலில் இவருடன் பணியாற்றுவது மிகவும் சிரமாக இருந்தது. அந்த அளவிற்கு ரொம்ப கண்டிப்பான  நேர்மையான அதிகாரி அவர்''  என்று கூறியுள்ளார். அதேபோல் இவருடன் பணியாற்றி ஓய்வு பெற்ற வன அதிகாரி  மல்லப்பா புட்டண்ணா இவரை பற்றி கூறும்போதும் அதையே குறிப்பிட்டார்.      

HD கோட் மருத்துவமனையிலிருந்து  கொண்டுவரப்பட்ட அவரது உடல் தேசிய கோடி போத்தி ஆர்யா பவன், அசோக்புரத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தபட்டது. நேர்மையான ஒரு வனத்துறை அதிகாரியின் இந்த திடீர் இழப்பு அவரது குடும்பத்தாரையும் ஊர் பகுதி மக்களையும் மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மணிகண்டன் உடலுக்கு தேனி  மாவட்ட கலக்டர் பல்லவி பல்தேவ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தார்க்கு ஆறுதல் கூறினார்.

 

body manikandan



தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காட்டுயானை தாக்கி உயிரிழந்த எஸ்.மணிகண்டன் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய ஜனாதிபதி திரு. ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் '' கர்நாடக நாகரகோலி புலிகள் காப்பக வனப்பகுதியில் காட்டுயானை தாக்கி எஸ்.மணிகண்டன் உயிரிழந்த செய்தி பெரும் வருத்தத்தைத்  தருகிறது. அவருடைய இந்த உயிர் தியாகமானது நாடே அவர்க்கு வீரவணக்கம் செலுத்த உரித்தானது,வீர வணக்கம் செலுத்துவோம்'' என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் 2014 ஏப்ரல் மாதத்திலிருந்து 2017 மே, இந்த இடைப்பட்ட காலத்தில் மட்டும் 1,144 பேர் வனவிலங்குகளால்  உயிரிழந்துள்ளனர் என இந்திய சுற்றுசூழல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் அதில்  27 உயிரிழப்பு புலிகளால் தாக்கியதில் இறந்துள்ளனர்.மேலும் 259 உயிரிழப்பு காட்டுயானைகளாலேயே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார். 

Next Story

கோவை தி.மு.க. வேட்பாளர் ரஜினியின் மருமகன்?

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Coimbatore DMK Candidate Rajini's son-in-law?

தற்பொழுது வரை கூட்டணியும், யாருக்கு எங்கு சீட் என்பதும் முடிவாகாத நிலையில் பரபரப்பின் உச்சத்தில் இருக்கின்றது கோவை நாடாளுமன்றத் தொகுதி. தி.மு.க. கூட்டணியில் நடிகர் கமலஹாசன் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என அனேகம் பேர் எதிர்பார்த்த நிலையில், கோவையை மீண்டும் ஏன் கூட்டணிக்கே தள்ளிவிட வேண்டும்? தி.மு.க.வே போட்டியிட வேண்டும். அதுவும் ரஜினியின் குடும்பத்தாரே போட்டியிட வேண்டும் எனத் தலைமைக்கு தகவலைப் பகிர்ந்து வருகின்றனர் துவக்க கால தி.மு.க.வினர்.

"பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கோவை நாடாளுமன்றத் தொகுதியில், கோவை தெற்கு தவிர மீதமுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளையும் தன்வசமாக்கி வைத்திருக்கின்றது அ.தி.மு.க. தி.மு.க.வைப் பொறுத்தவரை உட்கட்சிக் குழப்பம், கோஷ்டி அரசியல் ஆகியவற்றால் இங்கு பலவீனமாகக் காட்சியளிக்கிறது. கோவை மாவட்டம் ஒரு காலத்தில் கொங்கு சமுதாயத்தினரின் ஆதிக்கமுள்ள பகுதியாக இருந்துவந்தது. காலபோக்கில் கொஞ்சங் கொஞ்சமாக மாறி, தற்போது தெலுங்கு மொழி பேசும் அருந்ததியர் உள்ளிட்ட போயர், நாயக்கர் போன்ற சமுதாயத்தினர் அதிகமுள்ள பகுதியாக மாறிவிடடது. அந்த உண்மையை அறிந்த ஜெயலலிதா, கொங்கு சமுதாயத்தினருக்கு மட்டுமின்றி, தேவர், நாயக்கர், செட்டியார் போன்ற சமூகத்தினருக்கும் வாய்ப்புகளை வழங்கி, தொடர்ந்து வெற்றிபெற்று கோவை மாவட்டத்தை அ.தி.மு.க.வின் கோட்டையாக மாற்றினார். தி.மு.க.வை பொறுத்தவரையோ, முழுக்க முழுக்க குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி, கட்சிப் பொறுப்பு முதல் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புவரை அனைத்தையும் அவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து வழங்கி வருவதால் மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் தி.மு.க.வின் மீது அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.

நடந்து முடிந்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வெளியான முடிவுகளே இதற்கு சாட்சி. இப்பொழுது கூட கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. போட்டியிட்டு, கண்டுகொள்ளப்படாத மாற்று சமுதாயத்தினரையும் அரவணைத்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை வழங்கினால் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதோடு, இத்தொகுதியில் அ.தி.மு.க.வின் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டி தி.மு.க. வளர வாய்ப்புள்ளது'' என்கிறார் ராமநாதபுரத்தை சேர்ந்த உடன் பிறப்பு ஒருவர்.

Coimbatore DMK Candidate Rajini's son-in-law?

பொங்கலூர் பழனிச்சாமி தி.மு.க.வின் மாவட்டச் செயலாளராக வருவதற்கு முன்புவரை வணங்காமுடி மு.ம.சண்முகசுந்தரம், கோவைத் தென்றல் மு.இராமநாதன், சி.டி.தண்டபாணி, இரா.மோகன், கா.ரா.சுப்பையன், அவினாசி இளங்கோ, போடிபட்டி தம்பு உள்ளிட்ட மாற்று சமுதாயத்தினர் தி.மு.க.வில் கோலோச்சி வந்தனர். அப்போது கோவை மாவட்டத்தில் தி.மு.க. அசைக்கமுடியாத சக்தியாக இருந்தது. 1996 தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் செட்டுக்காரர் சமுதாயத்தை சேர்ந்த ப.அருண்குமாரும், சூலூர் தொகுதியில் தேவர் சமுதாயத்தை சேர்ந்த சூலூர் பொன்முடியும், அவினாசி தொகுதியில் தேவேந்திரகுல சமுதாயத்தை சேர்ந்த இளங்கோவும், உடுமலை தொகுதியில் போடிபட்டி தம்பு போன்றோர்களும் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, சட்டமன்ற உறுப்பினர்களானார்கள். அதற்கு அடுத்து வந்த 2001 தேர்தலில் இவர்களுக்கு சீட் கொடுக்க மறுத்த பொங்கலூர் பழனிசாமி, தன்னுடைய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து சீட் கொடுத்ததால் அந்தத் தேர்தலில் தி.மு.க. படுதோல்வியடைந்தது. தற்பொழுது வரை அத்தோல்வியிலிருந்து மீள முடியவில்லை என்கிறது தேர்தல் வரலாறு.

இது இப்படியிருக்க, "பல்லடம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சூலூர் நகரின் முன்னாள் பேரூராட்சித் தலைவருமான பொன்முடியின் குடும்ப வாரிசும், ரஜினியின் மருமகனுமான விசாகன் வணாங்காமுடிக்கு கோவை நாடாளுமன்றத் தொகுதியில் சீட் கொடுக்கும் பட்சத்தில் பிற சமுதாயத்தை அரவணைத்தது போலவும் ஆயிற்று, வெற்றியும் நிச்சயம்'' என்கிற ரீதியில் தலைமைக்கு தகவலை பகிர்ந்து வருகின்றனர் சூலூர்வாசிகள்.

சூலூரைச் சேர்ந்த உடன்பிறப்பு ஒருவரே, "கோவை மாவட்டத்தில் தி.மு.க. அசைக்க முடியாத சக்தியாக இருந்தது என்றால் அது சூலூரில் தான். அன்றைய காலகட்டத்தில் அண்ணாவும், பெரியாரும் சந்தித்துக்கொண்ட இடமும் இதுதான். சூலூரில் திராவிட பாரம்பரியத்தை வளர்த்தெடுத்தவர் சூலூர் சுப்பிரமணியன். தேவர் சமுதாயத்தை சேர்ந்த இவரின் அரசியல் வாரிசாக இருந்தவர், 2012ல் காலமான தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்முடி. வியாபார வாரிசாக இருந்தவர் வணங்காமுடி. சூலூர் பேரூராட்சியின் கட்டடம் அமையவும், சூலூருக்கு நீர் கிடைக்கக் காரணமானவரும் பொன்முடியே. அவர் உயிரோடு இருந்த வரை சூலூர் தி.மு.க. உயிர்ப்போடு இருந்தது. தீவிர திராவிட இயக்க குடும்பமான பொன்முடியின் குடும்பம் அவரது மறைவிற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அரசியலிலிருந்து விலகியது. அவரது மறைவு தி.மு.க.விற்கு பலவீனத்தை ஏற்படுத்தியது. அவர் இருக்கும்வரை தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்த தேவர் சமுதாயத்தினர், அவர் இறந்த பிறகு ஒதுங்கிக் கொண்டனர்.

பொன்முடியின் தம்பியான வணங்காமுடியின் மகன் தான் விசாகன். இந்த விசாகனைத்தான் நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா திருமணம் முடித்துள்ளார். சமீபத்தில் சவுந்தர்யா-விசாகன் தம்பதியினரின் குழந்தைக்கு காது குத்து விழா, சூலூரிலுள்ள விசாகனின் குல தெய்வம் கோவிலில் நடைபெற்றபோது, சூலூருக்கு நடிகர் ரஜினி வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தனது மகளைப் பார்ப்பதற்காக நினைத்த போதெல்லாம் இங்கு வருகை தருவது ரஜினியின் வழக்கம். தி.மு.க. பாரம்பரியத்தோடு, நடிகர் ரஜினியின் மருமகன் என்ற பெருமையையும் கொண்டுள்ள விசாகனை கோவை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராகக் களமிறக்க வேண்டுமென்பது எங்களது விருப்பம். அவர் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சுலபமாக இருக்கும். மேலும், தேவர், நாயக்கர், செட்டியார், அருந்ததியர் போன்ற மாற்று சமுதாயத்தினருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும். இதில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களும் தேர்தல் பணியாற்றுவார்கள். ஆகையால் தி.மு.க. தலைமை கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக விசாகனை நிறுத்த வேண்டும் என்பது எங்களது விருப்பம். இதனைக் கடிதமாகவும், செய்தியாகவும் தலைமைக்கு சேர்த்துள்ளோம்'' என்கிறார் அவர்.

ஆக, கூட்டணியில் கமலுக்கு கோவை கிடைக்குமா? இல்லை தி.மு.க.வே இங்கு போட்டியிட முடிவெடுத்து, தி.மு.க. பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த ரஜினியின் மருமகனை களமிறக்குமா? என்பதுதான் கோவை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடையே எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள மில்லியன் டாலர் கேள்வி!