Skip to main content

"சீமானுக்கு கார், சொத்துக்கள் எல்லாம் எத்தனை நாள் வேலை திட்டத்தில் வந்தது... சீமான் ஒரு ஆரிய காரிய கைக்கூலி.." - சூரியா சேவியர்!

 

vc

 

தமிழகத்தில் நூறுநாள் வேலைத் திட்டத்தை நீக்க வேண்டும், அது அனைவரையும் சோம்பேறிகளாக மாற்றுகிறது என்று சில தினங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்திருந்தார். இதனைத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் வழிமொழிந்தார். இந்நிலையில் நூறுநாள் வேலை திட்டம் அவர்கள் சொல்வது போல நீக்க வேண்டிய ஒன்றா? என்பது குறித்து சமூக செயற்பாட்டாளர் சூரியா சேவியரிடம் நாம் கேள்வி எழுப்பினோம்.

 

நம்முடைய கேள்விக்கு அவரின் பதில்கள் வருமாறு, "  சீமான் குருமூர்த்தியின் வேலைத் திட்டத்தை செயல்படுத்திக்கொண்டிருப்பவர். மிகப்பெரிய ஆரிய காரிய கைக்கூலி சீமான் என்றுதான் அவரை நான் எப்போதும் விமர்சனம் செய்வேன். 100 நாள் வேலைத் திட்டத்தை சொல்கிறார், மீதமுள்ள 265 நாளுக்கு இவர் வேலை கொடுப்பாரா? அவர் இதுபற்றி ஏதேனும் சொல்ல முடியுமா? இவரின் பேச்சு என்பது உழைக்கும் மக்களை இழிவுபடுத்துகிறது. இவர் நூறுநாள் திட்டத்தை வேண்டாம் என்கிறார், அவர் கூறி முடிந்ததும் அடுத்த நாளே பாஜக அண்ணாமலை அதனை ஆதரிக்கிறார்.

 

இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருந்து கிளம்பி வருவார்கள், இவர்கள் அஜெண்டாவே அதுதான், இது சிலருக்குத் தெரியாது, அவர்களின் செயல்பாட்டை அறிந்தவர்களுக்கு அவர்களைப் பற்றி நன்கு தெரியும். நூறுநாள் வேலைத் திட்டத்தில் காலையில்  ஒன்பது மணிக்கு வேலைக்குச் சென்று 12 மணி வரை வேலைபார்த்துவிட்டு அங்கேயே அசதியாக சோறு சாப்பிட்டுவிட்டு மக்கள் படுத்திருக்கும் புகைப்படங்களை எடுத்து வைத்துக்கொண்டு இங்கே பார்த்தீர்களா, நூறுநாள் வேலைத் திட்டத்தில் எப்படி வேலை செய்யாமல் தூங்குகிறார்கள் பாருங்கள், என்று பேசுவதெல்லாம் அறிவில்லாத் தனமாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. இந்த நூறு நாள் வேலைத்திட்டத்திலேயே முறைகேடு நடக்கிறது என்று பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்துகிறார்கள். நிலைமை இப்படி இருக்க பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுவது என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது. வேலை செய்யும் இடத்தில் அவர்கள் மீது வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தால் அந்த குறிப்பிட்ட நபர் சரிசெய்யப்பட வேண்டியவர்தான், அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக நூறுநாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் தூங்குகிறார்கள், பேன் பார்க்கிறார்கள் என்று கூறினார் அதை எப்படி புரிந்துகொள்வது, ஆக மொத்தம் இவரைப் போன்ற ஆட்களை எல்லாம் தமிழக அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியது அவசியம். 

 

இவர் விலை உயர்ந்த காரில் செல்கிறாரே, எங்கே உழைத்து சம்பாதித்தார், அமெரிக்க உள்ளிட்ட வெளிநாட்டு நாய்களுடன் கொஞ்சுகிறாரே, அது எங்கே இருந்தது வந்தது. இவர் அணிகின்ற உடையிலிருந்து, தங்கி இருக்கின்ற வீடு உள்பட இவருக்கு எத்தனை நாள் திட்டத்தின் படி இந்த சொத்துக்கள் வந்தது என்று அவர் சொல்வாரா? 100 நாள் திட்டத்தில் வேலை செய்து தினம் 200 ரூபாய் சம்பாதிப்பவனிடம் இவ்வளவு கேள்வி எழுப்பினால், அவருக்கு வந்த சொத்துக்களுக்கு நாங்கள் கேள்வி எழுப்ப கூடாதா? அதற்கு அவர் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும். திராவிடமே வேண்டாம் என்பார் ஆனால் திராவிட வீட்டில் பெண் எடுப்பார், பிரபாகரனை தூக்கில் போட தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றிய ஜெயலலிதாவின் அமைச்சரவையில் சபாநாயகராக இருந்த காளிமுத்து வீட்டில் பெண் எடுக்கத் தெரிகிறது, அப்புறம் என்ன திராவிடம் வேண்டாம், கொம்பு வேண்டாம்.

 

சீமான் குறிப்பிட்ட சிலரின் அஜெண்டாவை தமிழகத்தில் செயல்படுத்தும் ஒரு நபராகவே இருந்து வருகிறார். அதைத் தாண்டி மக்கள் நலனுக்காக அவர் எப்போதுமே அவர் செயல்பட்டது இல்லை" என்றார்.