Skip to main content

“இளைய ஜீவா; கதை சொல்லும் கல்; கல்லூரியின் கதாநாயகன்!” - தா. பாண்டியன் நினைவுகளைப் பகிரும் ஸ்டாலின் குணசேகரன்!

Published on 26/02/2021 | Edited on 01/03/2021

 

Stalin Gunasekaran shared memory about D.Pandian

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இன்று காலை சிகிச்சை பலனிற்றி காலமானார். அவருக்குப் பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும், ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை தலைவருமான ஸ்டாலின் குணசேகரன், தா.பாண்டியனுடனான தனது 50 வருட நினைவுகளை நக்கீரன் இணையத்துடன் பகிர்ந்துகொண்டார்.  

 

ஸ்டாலின் குணசேகரன் கூறியதாவது; “நான் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலத்தில், ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் எனும் ஊரிலிருந்த பள்ளி மைதானத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் தா.பாண்டியன் பேசினார். அப்போது அதனைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஈரோடு மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கிய 10 நபர்களில் என் தந்தையும் ஒருவர். 1952ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவர், 17 வயதில் தீவிரமாகப் பணியாற்றினார். பள்ளிக்கூடத்தில் படிக்கும் பாடத் திட்டங்களோடு சேர்ந்து மற்றவையும் படிக்க வேண்டும் என என்னிடத்தில் முதன்முதலில் சொன்னவர் என் தந்தை. அவர் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். ஆனால், அவர் இருந்த இயக்கத்தில், பெரிய சான்றோர்கள், அரசியல் மேதைகள் பலர் இருந்தனர். அவர்கள் பேச்சை எல்லாம் அடுத்த தலைமுறையினரும் கேட்க வேண்டும் எனும் விருப்பம் என் தந்தைக்கு இருந்தது. அதன் அடிப்படையில், அவர் சென்ற கூட்டத்திற்கு என்னையும் அழைத்துச் சென்றார். நானும் விளையாட்டாக அந்த உரையைக் கேட்கத் துவங்கினேன். தா.பாண்டியன், ஒன்றரை மணி நேரம் அந்த உரையை நிகழ்த்தியிருப்பார். என்னையும் மறந்து அந்த உரையை ரசித்துக் கேட்டிருக்கிறேன் என்பது இப்போது என்னால் உணரமுடிகிறது. 


அதன் பிறகு எனது 10வது வயதிலேயே அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் எனும் ஒரு அமைப்பில் இணைந்தேன். அதன் பிறகு மாணவர் மன்ற மாநாடுகளில் இவரது உரையைக் கேட்க முடிந்தது. சிக்க நாயக்கர் கல்லூரியில் நான் பி.யு.சி. படித்துகொண்டிருந்த காலத்தில், முதன் முதலாக அவரை எங்கள் கல்லூரிக்கு அழைத்தோம். அதற்கு எங்கள் கல்லூரி முதல்வர் ஒப்புக்கொள்ளவில்லை. அவரிடம் தயவுபண்ணி கேட்டு அவரை அழைத்துவந்தோம். அதன் பிறகு தொடர்ந்து நான்கு ஆண்டுகாலம் நாங்கள் அங்கு படிக்கும்வரை அவரை அங்கு அழைத்தோம். அதன்பிறகு நான் வெளியேவந்த பிறகு ஆறு ஆண்டுகள் என மொத்தம் 10 ஆண்டுகள் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக தா.பாண்டியன் கலந்துகொண்டது எங்கள் கல்லூரியில் மட்டும்தான் என நான் கருதுகிறேன்.

 

Stalin Gunasekaran shared memory about D.Pandian

 

கடைசி ஆண்டு அந்த கல்லூரியின் முதல்வர் அனந்த பத்மநாப நாடார், “நான் இந்த ஆண்டு பணி நிறைவு பெறுகிறேன். ஆனால், தா.பாண்டியன் இந்த கல்லூரிக்கு வந்து உரை நிகழ்த்துவதில் ஓய்வென்பது இருக்கக்கூடாது. அடுத்தடுத்து ஆண்டுகளிலேயே இவர்வந்து பங்கேற்க வேண்டும். இவர் நமது கல்லூரியின் சிறப்பு விருந்தினர் மட்டுமல்ல, கல்லூரிக்கு வருகைதரும் பேராசிரியரும் கூட” என அவர் குறிப்பிட்டது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அந்த ஆறு ஆண்டுகாலம் அவர் சிறப்புரை, நான் வாழ்த்துரை எனப் பேசுவோம். ஈரோடு புத்தகத் திருவிழாவுக்குக்கூட இரண்டு முறை அவரை அழைத்தோம் கிட்டத்தட்ட 10,000 நபர்களுக்கு முன்னால், ‘கல்லும் கதை சொல்லும்’ என்ற தலைப்பில் சிற்பக் கலை பற்றி ஒன்னேகால் மணி நேரம் அவர் ஆற்றிய உரையை, நியூ சென்ச்சுரி’ நிறுவனம் ஒரு புத்தகமாகக் கூட வெளியிட்டிருக்கிறார்கள். அதேபோல் எழுத்து என்றால், அவருக்கு நிகர் அவர்தான் என நான் எண்ணிப்பார்க்கிறேன். அவர் எழுத்தை அவர் பிழைதிருத்தி நான் பார்த்ததில்லை. அடித்து எழுதி நான் பார்த்ததில்லை. அவரை பார்த்து 50 ஆண்டுகாலம் ஆகியிருந்தாலும், அவருடன் நெருக்கமாக 40 ஆண்டுகாலம் தொடர்ந்து இருந்திருக்கிறேன். அவர் பல கட்டுரைகளை எழுதும்போது அவரின் அருகிலிருந்திருக்கிறேன். அவர், படபடவென அடுத்தடுத்த பக்கங்களில் எழுதிவிட்டு இறுதிப் பக்கத்தில் ஒரு கோட்டைப் போட்டுவிட்டு பக்கத்தில் இருப்பவர்களிடம் கொடுத்துவிடுவார். அதன்பிறகு அதனை 'ஜனசக்தி'யில்தான் பார்க்க முடியும். கவித்துவத்துடன் அந்த கட்டுரை அமைந்திருக்கும். 'நா', 'பேனா' இரண்டும் விளையாடும் என்பார்களே அதுபோல பேச்சாளராக, மிகப் பெரிய எழுத்தாளராக, மிகப் பெரிய சிந்தனையாளராக, மிகப் பெரிய கட்டுரையாளராக, ஏராளமான தொழிற்சங்களின் தலைவராக இவர் திகழ்ந்ததைப் பக்கத்திலிருந்து பார்க்கும் வாய்ப்பு கடந்த 40 ஆண்டுகாலமாக எனக்குக் கிடைத்தது. 

 

இலங்கை தமிழர்களுக்காக அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் என்ற முறையிலே அவர் அறிவித்த உண்ணாவிரதப் போராட்டம் தமிழகத்திலே மாபெரும் மாறுதலை ஏற்படுத்தியது. ஏனென்றால் அந்தப் போராட்டத்திற்கு 500 பேர்தான் வருவார்கள் என எண்ணி பந்தல் போட்டிருந்தோம். ஆனால், கிட்டத்தட்ட 7,000 பேர் பங்கேற்றனர். காலை முதல் மாலை வரை பந்தல் விரிவு படுத்தும் வேலையே நடந்தது. அந்த அளவிற்கு மக்களின் நாடிப்பிடித்து மக்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்று கருதி இடைவிடாமல் பாடுபட்ட அந்த இதயம் இப்போது ஓய்வு பெற்றிருக்கிறது. 

 

நான் அருகிலிருந்து பார்த்த காரணத்தினால் சொல்லுகிறேன், சித்தாந்தத் தெளிவும் ஆங்கிலத்தில் பெரும் புலமையும் பெற்றவர். அவரின் தந்தை அந்த காலத்தில் தலைமை ஆசிரியர். தாய் துணை ஆசிரியர். இவரது மூத்த சகோதரர் தா.செல்லப்பா, தமிழகத்தின் தலை சிறந்த பொருளாதார பேராசிரியர்களில் ஒருவர். இவரது இளைய சகோதரர் தா.பொன்னிவளவன் இந்நேரம் உயிரோடு இருந்திருந்தால், தா.பாண்டியனுக்கு நிகராக தமிழகத்தில் பேசப்பட்டிருப்பார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது மாணவர் பேரவை தலைவராகப் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர்.

 

Stalin Gunasekaran shared memory about D.Pandian

 

ஒரு கதாநாயகனைப் போல் கல்லூரியிலிருந்தவர் தா.பாண்டியன். பிறகு அதே கல்லூரியிலே துணைப் பேராசிரியராக நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டவர். அதன்பிறகு கல்லூரி பேராசிரியர் வேலை வேண்டாம் என்று ஒதுக்கிவைத்துவிட்டு கட்சியின் முழுநேர ஊழியராகப் பல்லாண்டுகாலம் செயல்பட்டவர். அநேகமாக, அவர் தமிழகத்தில் செல்லாத கிராமம் இல்லை. தமிழகத்தில் ஜீவாவுக்குப் பிறகு மக்களால் மதிக்கப்பட்ட பொதுவுடைமை இயக்கத்தின் பெரும் தலைவர் தா.பாண்டியன். அதனால்தான் அவரை அப்போதே 'இளைய ஜீவா' என அழைத்தார்கள். 1960 தொடக்கத்தில், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்’ எனும் அமைப்பை, ஜீவா பிரகடனப்படுத்தியபோது, அதன் பொதுச் செயலாளராக தா.பாண்டியனைத்தான் தேர்வுசெய்தார். ஜீவாவால் தேர்வு செய்யப்பட்ட 'இளைய ஜீவா' தா.பாண்டியன் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை” என்று தெரிவித்தார்.

 

 
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நாகை எம்.பி. செல்வராஜ் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

Published on 14/05/2024 | Edited on 14/05/2024
Nagai MP Selvaraj was laid to rest with the respect of the govt
கோப்புப்படம்

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தவர் எம். செல்வராஜ் (வயது 67). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக்குழுவின் உறுப்பினராகவும் இவர் பதவி வகித்துள்ளார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இத்தகைய சூழலில் எம். செல்வராஜ் எம்.பி. சிகிச்சை பலனின்றி நேற்று (13.05.2024) அதிகாலை காலமானார். மறைந்த எம். செல்வராஜ் கடந்த 1989, 1996, 1998 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Nagai MP Selvaraj was laid to rest with the respect of the govt

இந்நிலையில் நாகை எம்.பி. செல்வராஜியின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி கிராமத்தில் அவரது உடலுக்கு சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் நாராயணன், மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி. மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் செல்வராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து செல்வராஜியின் உடல் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த அரசு மரியாதை நிகழ்வானது திருவாரூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஜெயக்குமார் முன்னிலையில் நடைபெற்றது. 

Next Story

செல்வராஜ் எம்.பி. மறைவு; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்!

Published on 13/05/2024 | Edited on 13/05/2024
Selvaraj MP disappearance Condolences of the Communist Party of India

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், நாகபட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் எம். செல்வராஜ் இன்று (13.05.2024) அதிகாலை 02.40 மணிக்கு சென்னை மருத்துவ மனையில் காலமானார் என்ற துயரச் செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கப்பலுடையான் என்ற ஊரில் வாழ்ந்து வந்த ஏழை விவசாயி முனியன் - குஞ்சம்மாள் தம்பதியரின் மகனாக 1957 மார்ச் 16 ஆம் தேதி பிறந்தவர். நீடாமங்கலம் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் வலுவான மக்கள் தளமாகும். விவசாயிகள் இயக்கத்தில் முனியன் - குஞ்சம்மாள் குடும்பமும் இணைந்து செயல்பட்டு வந்த நிலையில் எம். செல்வராஜ் சிறுவயதிலேயே கம்யூனிஸ்டு இயக்கத்தில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார்.

பள்ளிக் கல்வியை முடித்து திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். மாணவர் பெருமன்றம், இளைஞர பெருமன்றம் போன்ற அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்ட செல்வராஜ் அதன் மாவட்ட, மாநிலப் பொறுப்புகளை ஏற்று சிறப்பாக பணியாற்றியுள்ளார். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் நீடாமங்கலம் இடைக்குழு உறுப்பினர், துணைச் செயலாளர், செயலாளர் என்று படிப்படியாக உயர்ந்து ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர், மாநிலக் குழு உறுப்பினர், தேசியக் குழு உறுப்பினர் என பல்வேறு உயர் பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றியவர். ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் திருவாரூர், நாகபட்டினம் என பிரித்து அமைக்கப்பட்ட போது திருவாரூர் மாவட்டத் துணைச் செயலாளர், நாகபட்டினம் மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் நீண்ட காலம் செயல்பட்டவர். வர்க்க எதிரிகளால் படுகொலை செய்யப்பட்ட சித்தமல்லி எஸ். ஜி. முருகையன், மூத்த மகள் கமலவதனத்தை வாழ்விணையராக ஏற்று, அந்த குடும்பத்தின் மூத்த மருமகனாக, அந்தக் குடும்ப பொறுப்புகளை ஏற்று சிறப்பு சேர்த்தவர். கமலவதனம் திருவாரூர் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக ஐந்தாண்டுகள் பணியாற்ற ஊக்கம் தந்தவர்.

Selvaraj MP disappearance Condolences of the Communist Party of India

கடந்த 1989 ஆம் ஆண்டு நாகபட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் பேட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முறையாக மக்களவைக்கு சென்றவர். தொடர்ந்து 1996, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் நாகபட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். நாடாளுமன்றத்தில் தொகுதி மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து போராடியவர். 1989 ஜூன் 12 ஆம் தேதி காவிரி நதிநீர் பிரச்சினை மீது நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்து தஞ்சாவூர் ராஜராஜ சோழன் சிலை முதல் வேதாரண்யம் ராஜாஜி பூங்கா வரை 110 கிலோ மீட்டர் தூரம் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தியதில் முன்னணி பங்கு வகித்தவர்.

ஓஎன்ஜிசி தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்களை அணி திரட்டி தொழிற்சங்கம் அமைத்து தந்தவர், தமிழ்நாடு ஏஐடியூசி துணைத் தலைவர் பொறுப்பில் செயல்பட்டு வருபவர். செல்வராஜுக்கு ருத்திராபதி, என்ற முத்த சகோதரர், நாகம்மாள், சாரதா மணி என இரண்டு மூத்த சகோதரிகள், வீரமணி, வெற்றிச் செல்வி என இளைய சகோதரரும், சகோதரியும் உள்ளனர். இதில் முத்த சகோதரி நாகம்மாள் சில வருடங்களுக்கு முன்னர் காலமாகிவிட்டார். செல்வராஜ் சிறுநீரகப் பாதிப்பு காரணமாக மாற்று சிறுநீரகம் பொருத்திக் கொள்ளும் சிகிச்சை பெற்றவர். இவரது சகோதரி சாரதாமணி சிறுநீரகம் அளித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. தொடர்சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் கட்சி பொறுப்புகளையும், மக்கள் பிரதிநிதி என்ற முறையில் தொகுதிப் பிரச்சினைகளிலும் சலிப்பறியாது, சோர்வு அடைந்து, ஓய்ந்து விடாமல் முனைப்போடு செயல்பட்டு முன்னுதாரணமாக திகழ்ந்த வந்த தலைமைத்துவம் கொண்ட மக்கள் ஊழியரை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி இழந்து நிற்கிறது. 

Selvaraj MP disappearance Condolences of the Communist Party of India

செல்வராஜ் - கமலவதனம் தம்பதியருக்கு செல்வப்பிரியா, தர்ஷினி என இரு மகள்கள் உள்ளனர். இதில் செல்வப் பிரியாவுக்கு கடந்த ஆண்டு (2023) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது. அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய செல்வராசு உடல் நலம் பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போது, அதிகாலை 02.40 மணிக்கு காலமானார். 


நாளை (14.05.2024) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில், கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள சித்தமல்லி கிராமத்தில் அவரது இறுதி நிகழ்வுகள் நடைபெறும். இவரது மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செங்கொடி தாழ்ந்தி, செவ்வணக்கம் கூறி, அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து தவிக்கும் அவரது வாழ்விணையர் கமலவதனம், மகள்கள் செல்வப்பிரியா, தர்ஷினி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது. மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கட்சி அமைப்புகள், செங்கொடியினை அரைக் கம்பத்திற்கு இறக்கி விட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.