Skip to main content

தாய் தந்த ‘க்ளுவால்’ சிக்கிய மகன்! கேரள நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

 

Son trapped by mother Clue  Judgment of the Court of Kerala

 

மிக அரிதிலும் அரிதான குற்ற வழக்குகளில் குற்றம் நிரூபணமாகி தீர்ப்பு வெளியாகும்போது அது ஏகத்திற்கும் பரபரப்பாகிவிடும். அதுபோன்றுதான் அக். 13 அன்று கேரளாவின் கொல்லம் மாவட்ட கூடுதல் மற்றும் சிறப்பு செசன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தற்போது கேரளாவில் வைரலானதுடன் ஹாட் டாபிக் ஆகியிருக்கிறது.

 

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் வரும் அஞ்சல் பகுதியின் ரப்பர் எஸ்டேட் ஓனரான விஜயசேனன், தன் ஒரே மகள் உத்ராவை (25), பத்தனம்திட்டாவின் அடூர் பகுதியைச் சேர்ந்த சூரஜ் (27) என்பவருக்கு 2019இல் திருமணம் செய்துகொடுத்திருக்கிறார். திருமணத்தின்போது, கிலோ அளவு தங்க நகைகள், நிலம், பணம், கார் என்று வரதட்சணையாக வாரிக் கொட்டியிருக்கிறார்.

 

திருமணமான சில மாதங்களில் வாழ்க்கை கசக்க, சொத்தை அனுபவிக்கவும், வேறொரு திருமணம் செய்யவும், மனைவி உத்ராவை தன் வீட்டில் வைத்தே பாம்பை ஏவிவிட்டு கொல்ல சூரஜ் முயற்சி செய்து அது முடியாமல் போகியுள்ளது. இருந்தும் சூரஜ், இரண்டாம் முறையாக 2020 மே 07 அன்று கடும் விஷத் தன்மை கொண்ட பாம்புடன் உத்ராவின் வீட்டிற்கே போய், பாம்பை ஏவி மனைவியைக் கொலை செய்து மாட்டிக்கொண்டார். கட்டிய மனைவியைக் கணவனே பாம்பை ஏவி கொலை செய்த சம்பவம் கேரளாவை உலுக்கியெடுத்தது.

 

இதுவரையிலும் நடந்தவை நக்கீரனில் விரிவான கட்டுரையாக வெளிவந்திருந்தது.

 

இதன் பிறகுதான் இந்த வழக்கில் சூடும், க்ளைமேக்ஸும்.

 

கேரள போலீசின் கொடைக்கு அஞ்சியே நடந்தவற்றை வரி விடாமல் கேரள ரூரல் க்ரைம் பிரான்ஞ்சிடம் ஒப்புக்கொண்டிருக்கிறார் சூரஜ். கொல்லம் ரூரல் எஸ்.பி.யான ஹரிசங்கர் மற்றும் க்ரைம் பிரான்ச் டி.ஒய்.எஸ்.பி.யான அசோகன் குழுவினர் குற்றவாளிக்கு எதிரான 32 மெட்டீரியல் எவிடன்ஸ்களைக் கைப்பற்றியவர்கள், அன்றைய தினம் உத்ராவுடன் சூரஜ் மட்டுமே இருந்ததையும் சாட்சியுடன் உறுதி செய்தனர். ஆனால், பாம்பை ஏவியது சூரஜ்தான் என்பதற்கான ஆதாரமில்லாததால், அதனை உறுதிசெய்யும் வகையில் டி.ஒய்.எஸ்.பி. அசோகன் தலைமையிலான குழுவில் வனத்துறையினர், பாம்பு ஆராய்ச்சியாளரான மவீஷ்குமார் அடங்கிய குழுவினர், தனியாக ரூம் செட் செய்து, கட்டிலில் உத்ரா அளவிற்கு பொம்மை உருவாக்கப்பட்டு பொம்மையின் கையில் கோழி சதையைக் கட்டி விஷப் பாம்பை சாதாரண முறையில் இயல்பாகக் கடிக்க விட்டுள்ளனர்.

 

Son trapped by mother Clue  Judgment of the Court of Kerala
                                                                 சூரஜ்  

 

பின்னர் அந்த விஷப் பாம்பை புரோகேட் பண்ணி, சீண்டி, ஆங்காரப்பட வைத்து கடிக்க வைத்துள்ளனர். இரண்டு முறையின்போதும் பாம்பு கொத்திய பாகத்தின் வீரியம், பல்லின் ஆழம், கடியின் தன்மை ஆகியவற்றை ஆதாரங்களுடன் நீதிமன்றத்திடம் சமர்ப்பித்தவர்கள், மூன்று நாட்கள் பாம்பைப் பட்டினி போட்டு அதற்கு வெறியேறிய பிறகே ஏவிக் கொலை செய்ததை அறிவியல்பூர்வமாக விசாரணையில் உறுதிசெய்ததையும் சமர்ப்பித்திருக்கின்றனர்.

 

கொல்லம் கூடுதல் செசன்ஸ் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்திருக்கிறது. 13.10.2021 அன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதியான மனோஜ், சூரஜ் மீதான குற்றங்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டதால் சூரஜ்ஜை குற்றவாளி என்று அறிவித்ததோடு தண்டனை விபரம் அடுத்த நாள் அறிவிக்கப்படும் என்றும் தீர்ப்பு சொல்லியிருக்கிறார்.

 

கேரளாவின் மிக முக்கியமான முற்றிலும் மாறுபட்ட இந்தக் குற்ற வழக்கின் தீர்ப்பை மாநிலமே பரபரப்புடன் உற்று நோக்கியது. அக். 14 அன்று சிறப்பு நீதிமன்றத்தின் வெளியே பரபரப்பு பற்றியிருக்கிறது. சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி, குற்றவாளி சூரஜ்ஜிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது வைரலாகியதுடன் அனைத்து மீடியாக்களிலும் தொலைக்காட்சிகளிலும் பிரேக்கிங் நியூஸ் ஆனது.

 

சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞரான மோகன்ராஜ், வரதட்சணை விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட விஸ்வமயாவின் வழக்கிற்காகவும் நியமிக்கப்பட்டவர்.

 

Son trapped by mother Clue  Judgment of the Court of Kerala
                                                           மோகன்ராஜ்

 

சூரஜ் வழக்கில் எதிர்பார்க்கப்பட்டது. மேக்சிமம் பனிஷ்மெண்ட்டான தூக்கு தண்டனை. அனைத்துப் பிரிவின் குற்றங்களும் சரியான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருக்க தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டால், ஆறு மாதத்தில் குற்றவாளி சட்ட வழிகளின்படி கேரள உயர் நீதிமன்றத்திற்கு அப்பீல் போய்விடுவார். நீதிமன்றமும் வழக்கை எடுத்துக்கொள்ளும். அதற்கு சட்ட வழிகள் உள்ளன. அந்த வழியில் அவர் தப்பிவிடுவார். ஆனால், ஆயுள் தண்டனை கொடுத்ததால் 5 வருட சிறை வாசத்திற்குப் பின்புதான் அவரது அப்பீல் கேசை எடுக்க முடியும். அதாவது தீர்ப்பால் தனக்கு எந்த வழியில் பாதிப்பு என்று கேட்பதற்கு 5 வருடம் தண்டனை அனுபவித்த பிறகுதான் சான்ஸ். மேலும், சூரஜை தூக்கில் போடுவதற்கு அவருக்கு வயது குறைவு. இதற்கு முன் அவர் மீது புகாரோ, எந்த ஒரு வழக்கோ கிடையாது. அதைக் கருத்தில்கொண்டுதான் தூக்கு தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டிருக்கலாம் என்கிறார். 307, 328, 302, 201 ஆகிய பிரிவின் குற்றங்கள் சரிவர நிரூபிக்கப்பட்டுள்ளன. இதில் முதல் பிரிவிற்கு 10 வருடம் தண்டனை. அடுத்த பிரிவிற்கு ஏழு வருடம். ஆக முதலில் 17 வருடத் தண்டனையை அனுபவித்த பிறகுதான், இரட்டை ஆயுள் தண்டனை வருகிறது. அதில் 5 வருட தண்டனையை அனுபவித்த பிறகே அவர் அப்பீல் போக முடியும். ஆனால் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் காலத்தில், எது வேண்டுமானாலும் நடக்கலாம். அவர் வெளியே வரலாம். தவிர இதுபோன்று பாம்பை ஏவிக் கொலை செய்த அரிதிலும் அரிதான சம்பவம் தேசத்தில் மூன்றே மூன்று சம்பவங்கள்தான் நடந்துள்ளன. வட மாநிலங்களில் இரண்டும், மூன்றாவது இந்தக் வழக்கு கேராளவில். வடமாநிலத்தின் இரண்டு சம்பவங்களும் முடிவு தெரியாமல் அப்படியே போய்விட்டன. ஆனால் மிகக் குறுகிய காலத்தில் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு தரப்பட்ட சம்பவம் இது ஓன்று மட்டுமே என்கிறார்கள்.

 

Son trapped by mother Clue  Judgment of the Court of Kerala
                                                              விஜய சேனன்

 

“இந்த வழக்கில் கோர்ட்டும், போலீசாரும் நல்லா செயல்பட்டிருக்காங்க. ஆனா நாங்க எதிர்பார்த்த நீதி கிடைக்கல. தூக்கு தண்டனை தரப்படும்னு நெனைச்சோம். ஆயுள் தண்ணட கொடுக்கப்பட்டிருக்கு. அதுதான் மனசுக்கு கவலையாயிருக்கு. நாங்க அப்பீலுக்குப் போவோம்” என்கிறார் உத்ராவின் தந்தையான விஜய சேனன்.

 

சூரஜ்ஜின் தாயாரான ரேணுகாவோ, “எங்கவீட்டு மாடியில் பலா மரக்கிளைகள் படர்ந்திருக்கும். அது வழியா வந்த சாரைப் பாம்பு ஒன்னு உத்ரா ரூமுக்குள்ள போயிருக்கு. அதப் பாத்து உத்ரா சத்தம் போட்டப்ப சூரஜ் போயி அந்தப் பாம்ப கம்புல புடிச்சி வெளியே போட்டுட்டான். அதுக்குப் பின்னால், காலைல நா எங்க ஆடுகள வெளிய அனுப்புறப்ப விஷ பாம்பு வந்ததப் பாத்து நா ஒதுங்கிட்டேன்.

 

சூரஜை கூப்பிட்டு பாம்பு பிடிக்கிற வாவா சுரேஷை வரச் சொல்லி பாம்ப பிடிச்சிட்டுப் போகச் சொன்னேன். அவர் வராததால, சவரக்காடு சுரேஷை வரவச்சிருக்கான் சூரஜ். அவர் வந்து ரெண்டு பாம்பையும் பிடிச்சிட்டுப் போயிருக்கார். இந்தப் பக்கம் பாம்புக அதிகம். இதுதான் நடந்தது” என்கிறார்.

 

உத்ரா, அவரது தாய் வீட்டில் பாம்புக் கடியால் கொலையான பின்பு விசாரிக்க வந்த போலீசார், சூரஜின் தாய் ரேணுகாவிடமும் விசாரித்திருக்கிறார்கள். அது சமயம் அவர் பாம்பு பிடி சுரேஷ் பற்றிச் சொல்ல, அதன்பிறகே இந்தக் கேசில் துவண்டிருந்த போலீசார் அலர்ட் ஆகி சுதாரித்திருக்கிறார்கள். சூரஜின் தாய் ரேணுகா கொடுத்த க்ளுவே அந்தச் சம்பவத்தில் நடந்த அத்தனையும் வெளிவர அடிப்படைக் காரணமாகியிருக்கிறது என்கிறார்கள்.

 

செய்தி: பரமசிவன் & மணிகண்டன்


படங்கள் : இராம்குமார்