1990ஆம் ஆண்டுவரை இந்தியாவில் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இத்தனைக்கும், இந்தக் கோரிக்கை நீண்ட நெடுங்காலமாக அரசியல் கட்சிகளால் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், அந்தக் கோரிக்கையை ஆய்வுசெய்ய 1979 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி அன்றைய ஜனதா அரசு பி.பி.மண்டல் தலைமையில் ஒரு கமிஷனை நியமித்தது. அந்தக் கமிஷன் 1983 ஆம் ஆண்டு தனது ஆய்வறிக்கையை இந்திரா தலைமையிலான அரசிடம் சமர்ப்பித்தது. இந்தியா முழுவதும் 52 சதவீதம் மக்கள் பிற்படு்ததப்பட்டோராக இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. ஆனால், மத்திய அரசுப் பணிகளில் 27 சதவீதம் வழங்கவும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அளவு மொத்தமாக 49 சதவீதமாக இருக்கும்படியும் பரிந்துரை செய்தது.
இந்தப் பரிந்துரையை இந்திரா தலைமையிலான அரசு அமல்படுத்துவதற்கு முன் அவர் படுகொலை செய்யப்பட்டார். பின்னர் வந்த ராஜிவ் அரசும் இந்தப் பரிந்துரையை அமல்படுத்துவதில் காலந்தாழ்த்தி வந்தது. இந்நிலையில்தான், 1989ஆம் ஆண்டு வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணி அரசு அமைந்தது. அந்தச் சமயத்தில் கூட்டணிக் கட்சியான பாஜகவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி மண்டல் பரிந்துரைகளை அமல்படுத்தினார் வி.பி.சிங். 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமல்படுத்தப்பட்ட அந்த இடஒதுக்கீடு பரிந்துரைகள் இன்றுவரை பிற்படுத்தப்பட்டோருக்கு முழுமையாக சென்றுசேரவில்லை என்பதே நிஜம்.
வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் ஆகஸ்ட் 1990ல் அரசு அறிவிப்பு வெளியானது. 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தது. மண்டல் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு 24 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இன்றுவரை மத்திய அரசு அமைச்சகங்களில் ஏ பிரிவு அதிகாரிகளாக 17 சதவீதம் பேரும், பி பிரிவில் 14 சதவீதம் பேரும், சி பிரிவில் 11 சதவீதம் பேரும், டி பிரிவில் 10 சதவீதம் பேரும் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்டோர் பணி நியமனம் பெற்றுள்ளனர். இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட உண்மைகளாகும். மத்திய அரசின் மையமாக இருக்கும் அமைச்சரவை செயலகத்தில் ஏ பிரிவு அதிகாரி பணியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் ஒருவர்கூட நியமிக்கப்படவில்லை என்பது இன்னும் பெரிய கொடுமை.
பிற்படுத்தப்பட்டோரின் நிலைமை இப்படி இருக்க, உயர்சாதிகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு மோடி அரசு தனது ஆட்சியின் கடைசி கட்டத்தில் அறிவித்தது. அந்த அறிவிப்பை அமல்படுத்திய வேகமும், முறையும் வியப்பை ஏற்படுத்துகிறது. அதிலும் பொருளாதார ரீதியில் பின்தங்கியோர் எனப்படும் முன்னேறிய வகுப்பினர் யார் என்று அரசு கூறியுள்ள விளக்கம் வேதனையைத்தான் ஏற்படுத்துகிறது. ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் வருமானம், 5 ஏக்கர் நிலம், 1000 சதுர அடி வீடு கொண்டோர் அனைவரும் ஏழைகள் என்ற பட்டியலில் வருகிறார்கள்.
இந்த அடிப்படையிலான ஏழைகளுக்கு 2019-20 கல்வி ஆண்டிலேயே உயர்படிப்புகளில் இந்த ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. பிற்படுத்தப்பட்டோரின் பொருளாதார வரம்பு 72 ஆயிரம் ரூபாயாகவும், அதிகபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், உயர்சாதி ஏழைகள், வருமான வரி கட்டினாலும் ஏழைகள்தான் என்ற மோடி அரசாங்கத்தின் முடிவுக்கு பெயர்தான் மனுநீதி என்கிறார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனுநீதி இப்போது மீண்டும் அமலாகத் தொடங்கியுள்ளது. அதன் வெளிப்பாடுதான், காலங்காலமாக கல்வி மற்றும் பொருளாதாரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களைக் காட்டிலும் குறைவான கல்வித் தகுதியும், அதிகமான பொருளாதார வசதி பெற்றிருந்தாலும் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற அடாவடியை மோடி அரசு அமலாக்கியுள்ளது.
இதன்மூலம் காலங்காலமாக அறிவில் சிறந்தோராக தங்களை அடையாளப்படுத்தி வந்தவர்களின் கல்வித் தரத்தை அரசாங்கமே அம்பலப்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்ல, இட ஒதுக்கீடை பிச்சை என்று கேலி பேசியுள்ளனர் சில உயர்சாதியினர். இன்று கல்வியில் பின்தங்கியோரைக் காட்டிலும் மிகக் குறைவான மதிப்பெண் பெற்றிருந்தாலும், இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பை பெறும் நிலைக்கு தயாராகி இருக்கிறார்கள் என்ற உண்மையும் வெளிப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தேர்வு எழுதியோரில் வேலைக்கு தகுதியானோர் பெற வேண்டிய மதிப்பெண்கள் இந்தியா முழுவதும் விவாதப் பொருளாகியது. அதாவது பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் குறைந்தபட்சம் 61.5 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினத்தோர் 53,75 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆனால், முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் வெறும் 28.5 மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. தமிழகத்தில் இந்த நிலை என்றால், மேற்கு வங்கத்தில் சைபர் மதிப்பெண் எடுத்திருந்தாலும் வேலை என்ற கொடுமையான அறிவிப்பு வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அந்தக் கொந்தளிப்பு அடங்குவதற்குள், அஞ்சலகத்துறை தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் பணியைப் பெற நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் நிலவரத்தை அறிந்தபோது உயர்சாதியினரின் கடந்தகால ஒடுக்குமுறை எப்படி இருந்திருக்கும் என்பதை வெளிப்படையாகவே அறியமுடிந்தது. அதாவது, பொதுப்பிரிவினர் 95.2 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்டோர் 95 மதிப்பெண்களும், தாழ்த்தப்பட்டோர் 94.8 மதிப்பெண்களும், பழங்குடியின மக்கள் 89.6 மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். மேலும், செவித்திறன் குறைபாடுள்ளோர் 64.2, வேறு உடல்குறை உள்ளோர் 78.4, பார்வைக் குறை உள்ளோர் 85.8, கை, கால் முடக்கம் உள்ளோர் 88.8 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கை, கால் முடக்கப்பட்டோரைவிட, பார்வைக் குறைபாடு உள்ளோரைவிட முன்னேறிய சாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்குள் வருமானமுள்ளவர்கள் முன்னுரிமை பெற்றிருந்தனர். இது அவமானகரமான நடவடிக்கை என்றாலும், இந்த நவீன காலத்திலேயே இப்படியென்றால் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய நிலை எப்படி இருந்திருக்குமென்ற கேள்வி உண்டாகிறது.
ஆம். ஒரு நூற்றாண்டு போராட்டத்தின் சமூகநீதி பலனை, ஒரே அறிவிப்பில் அறுவடை செய்ய முடியும் என்றால், அதன் பெயர்தான் மனுநீதி என்கிறார்கள். பிற்படுத்தப்பட்டோரையும் தாழ்த்தப்பட்டோரையும் இன்னொரு சமூகநீதிப் போராட்டத்துக்கு தயார் செய்ய இந்த மனு அநீதி பயன்படும் என்றே சமூகநீதி போராளிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.