தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தல்கள் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தென்மாவட்ட வாக்காளர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் ஆணையம் தமிழக பக்தர்களின் உணர்வுகளை கணக்கில் எடுக்காமல் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக ஏப்ரல் மாதம் மதுரை மீனாட்சி கோவில் திருவிழா தொடங்கிவிடும். மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், அழகர் எதிர்சேவை, வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி என்று லட்சக்கணக்கான மக்கள் கூடும் திருவிழாவை தேர்தல் ஆணையமோ, தமிழக அரசோ எப்படி கணக்கில் கொள்ளாமல் போனார்கள் என்று பக்தர்கள் வினா எழுப்புகிறார்கள்.
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 18 ஆம் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு தல்லாகுளத்தில் எதிர்சேவை நிகழ்கிறது. இந்த நிகழ்வுகளில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தோடு மதுரையில் கூடுவார்கள். இப்படிப்பட்ட முக்கியமான திருவிழா நாளில் வாக்குப்பதிவை அறிவித்திருப்பதால், தென் மாவட்டங்களில் பெருமளவு வாக்குப்பதிவு குறைய வாய்ப்புள்ளது என்று அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே, தமிழக வாக்குப்பதிவு தேதியில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.