Skip to main content

'சிறை' முதல் 'அண்ணாத்த' வரை...!

Published on 08/10/2021 | Edited on 09/10/2021

 

sirai to annaththe... writer piraisoodan

 

தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்டவர் . இதுவரை 400  திரைப்படங்களில் 2,000 பாடல்கள், தனிப் பாடல்கள் 7,000 பாடல்கள் என சுமார் 10,000 பாடல்களை எழுதியுள்ளார். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை மூன்று முறை பெற்றவர். ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவில் இருந்து திரைப்படங்களை அனுப்பும் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தார். ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் கவிஞர் பிறைசூடனும் நடித்திருக்கிறார்.

 

100 தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்களும் இயற்றியுள்ளார். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை 1996 ஆம் ஆண்டில் தாயகம் திரைப்படப் பாடல்களுக்காகவும், 1991 இல் என் ராசாவின் மனசிலே பாடல்களுக்காகவும் பெற்றார். தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் "கலைச்செல்வம்" விருதையும் பெற்றிருக்கிறார். இவர் 2015 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கபிலர் விருது பெற்றுள்ளார்.

 

பிறைசூடன் தன் முதல் பாடலை ௭ம்.௭ஸ் விஸ்வநாதன் இசையமைத்த சிறை திரைப்படத்திற்காக இயற்றினார். அதன் பின்னர் மற்ற இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் பாடல்களை இயற்ற தொடங்கினார். கவிஞர், பாடலாசிரியர், வசனகர்த்தா, நடிகர் என பன்முகம் கொண்டவர்.

 

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்து சென்னைக்கு வந்து கலைத்தாயின் அரவணைப்பில் கலைத்துறைக்கு வாழ்நாள் முழுவதும் கலைப்பணி செய்தவர். எங்களைப் போன்றவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.

 

ஸ்ரீராம ராஜ்யம்’ உட்பட சில மொழிமாற்றுப் படங்களுக்கு பாடல்களோடு வசனங்களையும் எழுதியிருக்கிறார். நிறைய பக்திப் பாடல்களையும் எழுதியுள்ள இவர், அவருடைய கவிதைகளை ‘தாலாட்டு முதல் தாலாட்டுவரை’ என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். தமிழ் மொழிப் புலமையையும் திரையிசைப் பாடல் வரிகளின் நுட்பங்களை விளக்கும் திறமையையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தினார். கேப்டன் பிரபாகரன்’ படத்தில் ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடலும் மிகவும் பிரபலமானது.

 

‘இதயம்’ படத்தில் ‘இதயமே இதயமே’ பாடலில் இசையுடன் இவரின் வரிகள் காதல் தோல்வியின் வலியில் நனைத்தது. 'கோபுர வாசலிலே' படத்தில் ‘காதல் கவிதைகள் படித்துடும் நேரம்’, உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேனில் ‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி’, ஆர்.கே.செல்வமணி இயக்கிய ‘செம்பருத்தி’ படத்தில் ‘நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி படுத்தால் ஆறடிபோதும் எனும் பாடல், ‘அமரன்’ படத்தில் ‘வெத்தல போட்ட ஷோக்குல’ என்னும் பாடல் என இவரின் வெற்றிப் பாடல்கள் நீள்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் விளம்பரங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்தபோது அவற்றுக்கு ஜிங்கில்ஸ் எழுதியிருக்கிறார். பிறகு ‘ஸ்டார்’ படத்தில் ‘ரசிகா ரசிகா என் ரசிகா ரசிகா’ பாடலை எழுதினார்.

 

செப்டம்பர்  22--ந்தேதி கவிஞரோடு சென்னை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியின் டாக்டர் MGR அரங்கத்தில் நடந்த 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு முதல் கலந்தாய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் நல்வாய்ப்பு கிடைத்தது. தமிழ் மாநாடு சிறப்பாக நடக்க தன்னுடைய கருத்தையும் ஆலோசனையையும் வழங்கி தமிழ்த்தாய்க்கு தன்னுடைய தமிழ்ப்பணியை செய்தார் நம்மோடுதான் இருந்தார். அக்டோபர் 8---நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்ற துயரச்செய்தியை மனம் நம்ப மறுக்கிறது. 

 

கவிஞர் திரைப்படப் பாடலாசிரியர் பிறைசூடனை இழந்துவாடும், கவிஞர்கள்,  இலக்கிய,  திரைத்துறையின் நண்பர்களுக்கும், குடும்ப உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

 


                                                                                                                                                      -கவிஞர் அக்கினிபாரதி 

 

 

 

Next Story

வாய் திறந்த ஜாஃபர் சாதிக் - சிக்கும் திரைப் பிரபலங்கள்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Jaffer Sadiq case he invested in films by fraud money

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.

மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். தொடர்ந்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்ட மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை, வீட்டை தாழிட்டு நோட்டீஸ் ஒட்டிச் சென்றிருந்தது. தொடர்ந்து ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து என்.சி.பி. தலைமையகத்தில் சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய என்.சி.பி. துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங்க், ஜாபர் சாதிக் குறித்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்களைப் பகிர்ந்தார். அவர் கூறுகையில், “ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகையை சம்பாதித்து, தனது குற்றங்களை மறைக்க திரைப்படங்கள், கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் போன்ற பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அவரது போதைப்பொருள் கடத்தல், உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் புதுடெல்லி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா வரை பரவியிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தியுள்ளனர். அவரது தயாரிப்பு நிறுவனத்தில் போதைப்பொருள் பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரது தயாரிப்பு நிறுவனம் பண மோசடி செய்யும் முன்னோடியாக இருந்ததாக தெரிகிறது” என்றார். 

மேலும், தமிழ்நாடு திரைத்துறை சார்ந்த பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல், கட்டுமான துறையில் இருக்கும் நபர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு, அதில் தொடர்புடைய திரைப் பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியாவுக்கு தனியாகச் செல்ல வேண்டாம் எனத் தோழிகளிடம் கூறினேன்” - பிரபல எழுத்தாளரின் பரபரப்பு கருத்து

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
sensation by America writer says I have told my friends not to go to India alone

ஸ்பானிஷ் பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் மோட்டார் சைக்கிளிலேயே உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டு வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 66 நாடுகளுக்கு இந்த தம்பதி பயணம் செய்துள்ளனர். 

இதுவரை இத்தாலி, ஈரான் எனப் பல நாடுகளுக்குச் சென்ற இந்த தம்பதி ஆப்கானிஸ்தான் சென்றதைத் தொடர்ந்து அடுத்த பயணமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தனர். அந்த வகையில், கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இருவரும் தனித்தனி பைக்கில் ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அன்று இரவு தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற ஒரு குக்கிராமத்தில் தற்காலிகமாக டெண்ட் அமைத்து இருவரும் தங்கினர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இளைஞர்கள் சிலர், இருவரையும் தாக்கியதோடு அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சமூக வலைத்தளங்களில் அந்த தம்பதி வீடியோ பதிவிட்டனர். அந்த பகுதியில் ரோந்து பணிக்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தங்களுக்கு நேர்ந்த முழு துயரத்தையும் அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து விசாரித்த நிலையில், குற்றவாளி ஒருவன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.

sensation by America writer says I have told my friends not to go to India alone

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான டேவிட் ஜோசப் வோலோட்ஸ்கோ, இந்த சம்பவம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவில் வாழ்ந்தபோது, நான் கண்ட பாலியல் தொல்லைகள் போல் வேறு எங்கும் கண்டதில்லை. சில நாட்கள் மட்டுமே அங்கு தங்கியிருந்தாலும், துன்புறுத்தப்படாமலோ அல்லது தாக்கப்படாமலோ அல்லது பாலியல் வன்கொடுமை செய்யப்படாமலோ கூட ஒரு பெண் பயணியை நான் சந்தித்ததில்லை.

நான் இந்தியாவை நேசிக்கிறேன். உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக இந்தியா எப்போதும் இருக்கும். ஆனால் அங்கு தனியாக பயணம் செய்ய வேண்டாம் என்று பெண் தோழிகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறேன். இந்திய சமூகத்தில் இது ஒரு முக்கியப் பிரச்சனையாகவே இருக்கிறது. இதில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இவருடைய கருத்துக்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.