தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்டவர் . இதுவரை 400 திரைப்படங்களில் 2,000 பாடல்கள், தனிப் பாடல்கள் 7,000 பாடல்கள் என சுமார் 10,000 பாடல்களை எழுதியுள்ளார். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை மூன்று முறை பெற்றவர். ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவில் இருந்து திரைப்படங்களை அனுப்பும் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தார். ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் கவிஞர் பிறைசூடனும் நடித்திருக்கிறார்.
100 தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்களும் இயற்றியுள்ளார். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை 1996 ஆம் ஆண்டில் தாயகம் திரைப்படப் பாடல்களுக்காகவும், 1991 இல் என் ராசாவின் மனசிலே பாடல்களுக்காகவும் பெற்றார். தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் "கலைச்செல்வம்" விருதையும் பெற்றிருக்கிறார். இவர் 2015 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கபிலர் விருது பெற்றுள்ளார்.
பிறைசூடன் தன் முதல் பாடலை ௭ம்.௭ஸ் விஸ்வநாதன் இசையமைத்த சிறை திரைப்படத்திற்காக இயற்றினார். அதன் பின்னர் மற்ற இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் பாடல்களை இயற்ற தொடங்கினார். கவிஞர், பாடலாசிரியர், வசனகர்த்தா, நடிகர் என பன்முகம் கொண்டவர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்து சென்னைக்கு வந்து கலைத்தாயின் அரவணைப்பில் கலைத்துறைக்கு வாழ்நாள் முழுவதும் கலைப்பணி செய்தவர். எங்களைப் போன்றவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.
ஸ்ரீராம ராஜ்யம்’ உட்பட சில மொழிமாற்றுப் படங்களுக்கு பாடல்களோடு வசனங்களையும் எழுதியிருக்கிறார். நிறைய பக்திப் பாடல்களையும் எழுதியுள்ள இவர், அவருடைய கவிதைகளை ‘தாலாட்டு முதல் தாலாட்டுவரை’ என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். தமிழ் மொழிப் புலமையையும் திரையிசைப் பாடல் வரிகளின் நுட்பங்களை விளக்கும் திறமையையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தினார். கேப்டன் பிரபாகரன்’ படத்தில் ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடலும் மிகவும் பிரபலமானது.
‘இதயம்’ படத்தில் ‘இதயமே இதயமே’ பாடலில் இசையுடன் இவரின் வரிகள் காதல் தோல்வியின் வலியில் நனைத்தது. 'கோபுர வாசலிலே' படத்தில் ‘காதல் கவிதைகள் படித்துடும் நேரம்’, உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேனில் ‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி’, ஆர்.கே.செல்வமணி இயக்கிய ‘செம்பருத்தி’ படத்தில் ‘நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி படுத்தால் ஆறடிபோதும் எனும் பாடல், ‘அமரன்’ படத்தில் ‘வெத்தல போட்ட ஷோக்குல’ என்னும் பாடல் என இவரின் வெற்றிப் பாடல்கள் நீள்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் விளம்பரங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்தபோது அவற்றுக்கு ஜிங்கில்ஸ் எழுதியிருக்கிறார். பிறகு ‘ஸ்டார்’ படத்தில் ‘ரசிகா ரசிகா என் ரசிகா ரசிகா’ பாடலை எழுதினார்.
செப்டம்பர் 22--ந்தேதி கவிஞரோடு சென்னை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியின் டாக்டர் MGR அரங்கத்தில் நடந்த 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு முதல் கலந்தாய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் நல்வாய்ப்பு கிடைத்தது. தமிழ் மாநாடு சிறப்பாக நடக்க தன்னுடைய கருத்தையும் ஆலோசனையையும் வழங்கி தமிழ்த்தாய்க்கு தன்னுடைய தமிழ்ப்பணியை செய்தார் நம்மோடுதான் இருந்தார். அக்டோபர் 8---நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்ற துயரச்செய்தியை மனம் நம்ப மறுக்கிறது.
கவிஞர் திரைப்படப் பாடலாசிரியர் பிறைசூடனை இழந்துவாடும், கவிஞர்கள், இலக்கிய, திரைத்துறையின் நண்பர்களுக்கும், குடும்ப உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
-கவிஞர் அக்கினிபாரதி