Skip to main content

அமித்ஷா என்ன பூதமா... ஸ்டாலினை எதிர்த்து போட்டியா..? -சீமான் தடாலடி பதில்

Published on 20/11/2020 | Edited on 20/11/2020
hjk

 

 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடப்பு அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரின் பதில்கள் வருமாறு, "அமித்ஷா தமிழகம் வருவதை பற்றி என்னிடம் அதிகம் கேள்வி எழுப்பப்படுகிறது, அவர் என்ன மனிதர்தானே அல்லது பூதமா? அவரை பார்த்து ஏன் பயப்பட வேண்டும் என்று தெரியவில்லை. அதுவும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்கு பயம் ஏற்படுவதாக பாஜக சொல்வதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அப்படியெல்லாம் யாரும் பயப்படவில்லை என்பதே உண்மை. நம் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். அதை கேட்க ஒருவருக்கும் துப்பில்லை. இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழர்களை எல்லாம் அங்கே அழித்து ஒழித்தாகிவிட்டது. 

 

பிறகு எதற்காக அவர்களுக்கு இங்க பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த பயிற்சியை எடுத்துக்கொண்டு சென்று அவர்கள் என்ன செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்? மீன் பிடிக்க செல்லும் எங்கள் தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்வார்கள். அதுதானே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படகுகளை பறிமுதல் செய்து அதனை இலங்கை நீதிமன்றம் அரசுடைமையாக்குகிறது. ஒருவேளை நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் இவ்வாறு செய்ய விடுவோமா? அவர்களுக்குத்தான் அந்த துணிச்சல் வந்திருக்குமா?  இவர்கள் கேள்வி கேட்க மறுப்பதால் இந்த நிலை வந்திருக்கிறது. இது அனைத்தும் கொஞ்ச நாட்களுக்குத்தான். இலங்கை அரசுக்கு நாம் என்பதை காட்டும் நாள் வெகு தூரத்தில் இல்லை. 

 

ஏன் நீங்கள் பயிற்சி கொடுக்கிறீர்கள் என்று கேட்டால், நாம் பயிற்சி கொடுக்கவில்லை என்றால், பாகிஸ்தான் கொடுக்கும், சீனா கொடுக்கும், அமெரிக்கா கொடுக்கும் என்று கதை விடுகிறார்கள். இதை நாம் நம்ப வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். நாமும் இவ்வளவு காலம் அதை நம்பியதாக நடித்தோம். ஆனால் அதனை தொடர விடக்கூடாது என்பதே நம் அனைவரின் விருப்பமாக உள்ளது. இதனை கேட்க நாதியில்லை. எங்களுக்கு என்று ஒரு தலைவன் கிடையாது. அவ்வாறு இருந்திருந்தால் நாங்கள் ஏன் புலம்ப போகிறோம். தலைவன் இல்லா நாடும், தகப்பன் இல்லாத வீடும் தட்டுகெட்டு நிற்கும் என்பார்கள். அது தற்போது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இன உணர்வும் மான உணர்வும் கொண்டு பேச யாரும் இல்லை. அதனால் தான் இந்த நிலைமை எங்களுக்கு வந்துள்ளது.

 

தேர்தல் அரசியலில் எப்படி வெற்றி பெறுவது என்றுதான் பார்க்கிறார்கள். இந்திய அளவிலும் அதைத்தான் பார்க்கிறார்கள், தமிழக கட்சிகளும் அதைத்தான் செய்ய விரும்புகிறார்கள். மக்கள் நலனை யாரும் பார்ப்பதில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவீர்களா என்று கேட்கிறீர்கள், எங்கள் கட்சியினரும் அப்படி போட்டியிட வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள், நானும் போட்டியிட வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். முதலில் கட்சி சின்னங்களை ஒழிக்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழித்துவிட்டு வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்று பல முறை தேர்தல் ஆணையத்திடமே நேரில் முறையிட்டுள்ளோம்.  அவ்வாறு கொண்டுவந்தால் தான் வாக்குக்கு பணம் கொடுப்பது தடுக்கப்படும்" என்றார்.