Skip to main content

தலையில் ஏன் அடிபட்டது என்று கேட்டால், தரையில் விழுந்து புரண்டார்கள் என்று பொய் சொல்வதா..? - சீமான் கேள்வி!

Published on 02/07/2020 | Edited on 02/07/2020

 

hj

 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர். 

 

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். அவர்கள் மரணம் அடைய அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட காவலர்களே காரணம் என்று நாடு முழுவதும் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய காவலர்கள் தற்போது ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். 

 

அதில், " இந்த மாதிரி மரணங்கள் ஏற்படும் போது நாம் அனைவருக்குமே அதிர்ச்சி ஏற்படுகின்றது. அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் கொல்லப்பட்டதற்கு அந்நாட்டில் பொதுமக்கள் அனைவரும் சாலைக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள். காவலர்கள் மக்களிடம் பொதுவெளியில் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டதை நாம் தொலைக்காட்சிகளில் பார்த்தோம். இந்தியாவில் ஏன் அந்தமாதிரியான மனிதத் தன்மை இல்லை. மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்று தந்தை மகனை அடித்துக்கொல்வதில் தொடங்கி, ஜெய் ஸ்ரீராம் என்று கூறச் சொல்லி அடித்துக்கொல்வதாகட்டும் சற்றும் அறத்தன்மை இல்லாத சம்பவங்கள் இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சாதிய ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

 

ஒவ்வொன்றையுமே நாம் சகித்து சகித்துச் சென்று கொண்டிருக்கின்றோமோ என்று நினைக்க தோன்றுகின்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது சாத்தான் குளத்தில் நடைபெற்றுள்ள தந்தை மகன் மரணத்தைப் பார்க்க வேண்டும். இந்தக் கொலை ஒரு தவிர்க்க முடியாத கோபத்தை ஏற்படுத்துகின்றது. காவல்துறையின்ர் இந்த வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை கொடுக்கிறார்கள். அதில் தலையில் அவர்களுக்கு எப்படிக் காயம் ஏற்பட்டது என்றால் கைது செய்யும் போது தரையில் படுத்து உருண்டார்கள் என்று தெரிவிக்கிறார்கள்.  அந்த முதல் தகவல் அறிக்கையைப் படிக்கும் போதே அவர்கள் பொய் சொல்வது மிகத் தெளிவாக அனைவருக்கும் தெரியும். காமெடியான ஒரு போலி அறிக்கையை முதல் தகவல் அறிக்கை என்று கொடுக்கிறார்கள். அதை எழுதும் போதே அது ஒரு வேடிக்கையாகத் தெரிந்திருக்க வேண்டும். 

 

இந்தச் செய்தியை மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் என்ன மனநிலை பாதிக்கப்பட்டவர்களா? அவர்கள் ஏன் தேவையில்லாமல் தரையில் படுத்து உருள வேண்டும். அதற்கான காரணம் என்ன என்று காவலர்கள் கூறியிருக்கிறார்களா என்றால் பல்வேறு பொய்களில் அதற்கும் சேர்த்து வேறு பொய்களைக் கூறியிருக்கிறார்கள். அந்த அறிக்கையை யார் பார்த்தாலும் இது போலி என்று கண்டிப்பாகக் கண்டுபிடித்து விடுவார்கள். செயற்கை மரணத்தை மறைக்க பல்வேறு பொய்களை அவர்கள் முதல் தகவல் அறிக்கையில் கூறியிருக்கிறார்கள். அது அனைத்தும் தற்போது பொய் என்று தெரியவந்துள்ளது. அவர்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும். கிடைக்கும் என்ற நம்பிக்கை தற்போது பிறந்துள்ளது" என்றார்.