/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/33_44.jpg)
அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல் கடந்த 7-ம் தேதி நடப்பதாக அதிமுக தலைமை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதற்கான வேட்புமனு விநியோகம் அதிமுக தலைமைக்கழகத்தில் வழங்கப்பட்டநிலையில், அதை பெறுவதற்காக அதிமுகவைச் சேர்ந்த சிலர் கட்சி அலுவலகத்துக்குச் சென்றனர். ஆனால் அவர்கள் யாருக்கும் மனு அளிக்கப்படாத நிலையில், வெளியேறிய அவர்களை கட்சி அலுவலகத்துக்கு வெளியே நின்ற சிலர் தாக்க தொடங்கினார்.
இந்நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடியும், பன்னீர் செல்வமும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத்தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பொன்னையன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக சசிகலா ஆதரவாளர் ரூபன் கே. வேலவன் அவர்களிடம் கேள்விகளை முன்வைத்தோம். அதிமுக தேர்தல் முடிவு தொடர்பாக அவர் கூறியதாவது...
"அதிமுக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்கள். இந்த தேர்தல் ஒரு கேலிக்கூத்தாகத்தான் அமைந்துள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் எல்லோரையும் அடித்து துரத்திவிட்டு நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம் என்று மார்தட்டிக் கொள்கிறார்கள். இதுதான் இவர்கள் தேர்தல் நடத்தும் முறையா? தனி ஆளாக தேர்தலில் நின்று வெற்றிபெறுவது என்பது பெரிய விஷயமா என்ன?யாரை இவர்கள் ஏமாற்றப்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. இதற்கு இரண்டு அமைச்சர்கள் ஜால்ரா தட்டுகிறார்கள்.
இவர்கள் சொல்வதை போல் அங்கு வேட்புமனு வாங்குவதற்கு தகுதியுள்ள நபர்கள்தான் தலைமைக்கழகம் சென்றார்கள். ஆனால் அவர்கள் யாரையும் இவர்கள் மதித்தார்களா, இல்லையே! இவர்கள் அனைவரும் எம்ஜிஆர் அவர்கள் கட்சி ஆரம்பித்த போது உடனிருந்தவர்கள். எல்லா தகுதிகளையும் தன்னகத்தே உடையவர்கள் தான். நாங்கள் எல்லாம் கூட அதற்கு பிறகு அரசியலுக்கு வந்தவர்கள் தான். ஆனால் வயதில் மூத்தவர்கள் என்று கூட பார்க்காமல் அவர்களை கட்சி தலைமை வேண்டுமென்றே அவமதிக்கிறது. இதை எல்லாம் பார்த்துதான் சின்னம்மா அவர்கள் இனிமேலும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று அறிக்கை வெளியிட்டார்.
இவர்களை யாரோ இயக்குகிறார்கள். எங்கள் பகுதி மக்கள் எல்லாம் என்ன கூறுகிறார்கள் என்றால், இவர்கள் பாஜகவின் கைகளுக்கு சென்றுவிட்டதாகவே நம்புகிறார்கள். தமிழக பாஜகவினர் என்ன கூறுகிறார்களோ அதற்கேற்ப இவர்கள் செயல்படுகிறார்கள். இவர்கள் கட்சியை வளர்ப்பதற்கான எந்த நடவடிக்களையும் இதுவரை எடுக்காமல் கட்சியை அழிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறார்கள். தேர்தலில் வெற்றிபெற வேண்டும், கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எந்த முயற்சியையும் எடுக்காமல் அடிமையாக இருக்கிறார்கள். தான் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ள அதிமுகவை பகடைக்காயாக வைத்துள்ளார்கள்.
சொத்துக்கள் தான் இவர்களுக்கு மிக முக்கியமான அம்சம். அதை விட்டுக்கொடுக்க இவர்கள் விரும்பமாட்டார்கள். அதை பாதுகாத்துக்கொள்ள கட்சியை அடமானம் வைக்கவும் தற்போது இவர்கள் துணிந்துள்ளார்கள் என்பதே அதிமுக தொண்டர்களின் கருத்தாக இருக்கிறது. பாஜக தான் இதன் பின்னணியில் இருக்கிறது என்பது ஊர் அறிந்த விஷயம். இதில் ஒன்றும் ரகசியம் இல்லை. பாஜகவின் கண் அசைவுக்கு கட்டுப்பட்டவர்கள் தான் இன்றைய அதிமுக தலைவர்கள்.
பாஜகவோடு கூட்டணி வேண்டாம் என்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொண்டர்களுமே விரும்பினோமே, ஆனால் அதை இன்ற அதிமுக தலைமை ஏற்றுக்கொண்டதா? யாருக்கும் விருப்பம் இல்லை என்றாலும் இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த நலனுக்காக பாஜகவோடு கூட்டணி வைத்தனர். அதனால் கட்சியினர் சோர்ந்து போய் வேலை செய்யவில்லை. வெற்றி கைவிட்டு போவதற்கு அதிமுக தலைமை பாஜகவோடு கூட்டணி வைத்தது மிக முக்கிய காரணம் என்று அரசியல் தெரிந்த அனைவருக்கு தெரியும், குறிப்பாக அதிமுக தொண்டர்களுக்கு அது புரியம். எனவே கட்சி தோல்வி பாதைக்கு சென்றதற்கு இவர்களின் அப்பட்டமான சுயநலன்களும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்காமல் போனதற்கு இதுதான் மிக முக்கிய காரணமாக அமைந்தது" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)