சசிகலாவின் வருகை அ.தி.மு.க. தலைவர்களை ஏகத்துக்கும் பதட்டமடைய செய்திருக்கிறது. சிறையிலிருந்து விடுதலையான சசிகலாவுக்கு பெங்களூரிலிருந்து சென்னை வரையில் அசத்தலான வரவேற்பை அளிக்க திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார் டி.டி.வி. தினகரன்.
இதனையடுத்து முதல்வர் எடப்பாடியின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் டிஜிபி திரிபாதியை சந்தித்து, ""அ.தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என புகார் வாசித்தார்கள்.
டிஜிபியிடம் புகார் கொடுக்க அமைச்சர்கள் போயிருக்கக் கூடாது என ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பில் விவாதப் பொருளானது. ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான புதுமை பாலு நம்மிடம், ""முதலமைச்சர் எடப்பாடியும் அவரது தலைமையில் உள்ள அமைச்சரவை சகாக்களும்தான் தமிழக அரசின் உச்சபட்ச அதிகாரம் படைத்தவர்கள். இவர்களின் உத்தரவுகளை நிறைவேற்றும் பொறுப் பில் இருப்பவர்கள்தான் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள். அப்படியிருக்கும் நிலையில், டி.ஜி.பி.யை சந்தித்து அமைச்சர்கள் புகார் தெரிவிப்பது ப்ரோட்டகாலுக்கு எதிரானது.
கேபினெட் அமைச்சர்களே புகார் கொடுப்பது அவர்களைவிட டிஜிபி உயர்ந்தவராகி விடுகிறார் என பொருள். அதுவும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகமே புகார் கொடுப்பது மரபுகளை மீறிய செயல். ஒரு பிரச்சனை குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க புகார் தெரிவிக்க வேண்டுமாயின் அ.தி.மு.க. நிர்வாகிகள் சென்று கொடுத்திருக்க வேண்டும். அதுதான் மரபு. அமைச்சர்கள் செல்லக் கூடாது'' என்கிறார் அதிரடியாக.
இதற்கிடையே, சென்னையில் சசிகலாவுக்கு வரவேற்பும் பேரணியும் நடத்த அனுமதி கேட்டு கடந்த 5-ந்தேதி டிஜிபி திரிபாதியிடம் அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழன் மனு கொடுத்தார். இதனை அறிந்து டென்சனான எடப்பாடி பழனிச்சாமி, மீண்டும் சி.வி.சண்முகத் திடம் பேச, இரண்டாம் முறையாக மீண்டும் டி.ஜி.பி.யை சந்தித்து 6-ந் தேதி புகார் வாசித்தார் சி.வி.சண்முகம். அ.தி.மு.க.வினரிடம் பதட்டம் அதிகரித்தபடியே இருந்தது.
இது குறித்துப்பேசிய சி.விசண்முகம், ""சசிகலா, தினகரனின் ஆதரவாளர்கள் மனித வெடிகுண்டாக மாறுவோம் என பேட்டி தருகின்றனர். தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தி அதனை அ.தி.மு.க. மீது பழி போட துடிக்கிறார்கள். மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து விட்டு சிறை சென்றவர் சசிகலா''‘என்று போட்டுத்தாக்கினார். டிஜிபி அலுவலகத்தை விட்டு வெளியே சென்றதும், ""ரொம்ப உணர்ச்சிவயப்படுறீங்க'' என சண்முகத்திடம் சொல்லியிருக்கிறார் ஜெயக்குமார்.
தினகரனோ,’""சின்னம்மா (சசிகலா) வெளியே வருவதால் அமைச்சர்கள் பயந்து நடுங்குகிறார்கள். சட்டம் ஒழுங்குப் பிரச் சனையை ஏற்படுத்தி எங்கள் மீது பழிபோட திட்டமிட்டுள்ளனர்'' என்கிறார் ஆவேசமாக.
அ.தி.மு.க.வுக்கும் சசிகலாவுக்கும் சம்மந்தமில்லை என முதல்வர் தொடங்கி சில அமைச்சர்கள் வரை சொல்வதும், சசிகலாவின் வருகையை ஒடுக்க நினைப்பதும் எடப்பாடிக்கு எதிரான புகைச்சல்களை அ.தி.மு.க.வில் அதிகரிக்கச் செய்திருக்கிறது.
இதற்கிடையே சென்னைக்கு வந்ததும் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு முதலில் செல்ல வேண்டும் என்றே திட்டமிட்டிருந்தார் சசிகலா. வருவதற்கு 4 நாட்களுக்கு முன்பு, சென்னைக்குள் நுழைந்ததும் எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு சென்று, அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு (இதனை சசிகலாதான் அமைத்தார்) மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, எம்.ஜி.ஆர். வீட்டினுள் சில நிமிடங்கள் அமர்ந்து விட்டு கிளம்புகிற மாதிரி தனது திட்டத்தை மாற்றியிருந்தார் சசிகலா. இதனை ஜானகி எம்.ஜி.ஆரின் தம்பி மகள் சுதாவிடம் தெரிவித்தது தினகரன் தரப்பு.
இதனையறிந்து அதனை தடுக்கும் முயற்சியாக, மற்றொரு மகள் கீதா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை எதிர்த்து பதில் மனு தாக்கல் செய்ய சுதா தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எடப்பாடியின் மறைமுக தூண்டுதலாலேயே சசிகலாவுக்கு எதிராக மனு போடப்பட்டிருப்பதாக ஒரு தகவல் தினகரனுக்கு கிடைக்க, அதனை சசிகலாவிடம் வெள்ளிக்கிழமையே பாஸ் செய்திருந்தார்.
எடப்பாடியை மேலும் பதட்டமடைய வைக்க, எம்.ஜி.ஆர். இல்லத்தில் வரவேற்பு அதிகமாக இருக்க வேண்டும் என திட்டமிட்ட தினகரன், அந்த பொறுப்பை மாவட்ட கழக முன்னாள் துணைச்செயலர் வைத்திய நாதனிடம் கொடுத்தார். இந்த பதட்டச் சூழலால், ஜெ நினைவிடம் செல்ல நினைத்த சசிகலா, தம்மால் ஒரு மோதல் போக்கு உண்டாகி விடக்கூடாது எனவும் ஆலோசித்திருக்கிறார்.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நம்மிடம் பேசிய பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க.வின் எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் அழகப்பன், ‘""காண்ட்ராக்ட் உள்பட எந்த பிரதிபலனும் பாராமல் 35 ஆண்டு காலம் கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக் கிறோம். சின்னம்மா மற்றும் முதல்வர் எடப்பாடிக்குமிடையே நடக்கும் மோதலால், புரட்சித்தலைவரால் உருவாக்கப்பட்டு அம்மாவால் பாதுகாக்கப்பட்ட அ.தி.மு.க. அழிந்து விடுமோ என பயமாக இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை சின்னம்மாவின் ஒற்றைத் தலைமைக்குள் அ.தி.மு.க. வந்தால் மட்டுமே இன்னும் பல ஆண்டுகாலம் அ.தி.மு.க. உயிர்ப்புடன் இருக்கும்'' என்கிறார் அழுத்தமாக!
சசிகலா-எடப்பாடி மோதலை பா.ஜ.க. உருவாக்கி வருகிறது என்ற எண்ணமும் அ.தி.மு.க தொண்டர்களிடம் உள்ளது.