டிசம்பரில் சசி ரிலீசாவார் என்ற நம்பிக்கையுடன் அவர் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் சொந்த பந்தங்கள். சசி உறவினரான கார்த்திகேயன் பெயரில் ஜெ.வின் போயஸ் கார்டன் வீட்டிற்கு நேர் எதிரே இரண்டரை கிரவுண்ட் பரப்பளவில் பிரமாண்ட மாளிகைக்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கின. (நக்கீரன் இதை Exclusiveஆக வெளியிட்டிருந்தது). அது பினாமி சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக வாங்கப்பட்ட சொத்து என வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தார்கள்.
அதன்பின் என்ன நிலவரம் என ஸ்பாட் விசிட் அடித்தோம். தற்போதும் கட்டிட வேலைகள் தொய்வில்லாமல் வெகு வேகத்துடன் நடந்துவருகிறது. அங்கிருந்த மேற்பார்வையாளர் ஒருவரிடம் பேசினோம். ""வருமானவரித்துறை சீல் வைத்தபோது கட்டிடம் அடித்தளம் வரையில் தான் வந்திருந்தது. தற்பொழுது அது தரைத்தளம், முதல்மாடி தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இது மொத்தம் நான்கு மாடிகளைக் கொண்டது. இதன் வேலை முடிவதற்கு இன்னும் 6 மாதமாகும். மாநில அரசு இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு எந்த தடையும் விதிக்கவில்லை. வருமானவரித் துறை இந்த சொத்தை சீஸ் செய்திருந்தாலும், கட்டிடம் கட்டுவதற்கு எந்த மறுப்பையும் சொல்லவில்லை'' என்றார்.
பிரமாண்டமான அறைகளுடன் 1 லட்சம் சதுர அடி அளவிலான அடுக்குமாடி குடியிருப்பு உருவாகிக் கொண்டிருப்பதை படமெடுத்துவிட்டு, சசிகலா விடுதலையாகி வந்தால் எங்கே தங்குவார் என விசாரித்தோம். ""ஜெயலலிதாவின் வீட்டுக்கு எதிரே கட்டப்பட்டு வரும் இந்த கட்டிடத்தில் இருந்துதான் அரசியல் செய்ய விரும்புகிறார் சசி. அரசின் நினைவிடமாக்கப்பட்ட ஜெ.வின் போயஸ் கார்டன் வீட்டிற்கு எதிரில் பழைய நினைவுகளோடு தங்கவே விரும்புகிறார். ஆனால் இந்த கட்டிடம் சசிகலா விடுதலையாகி வரும் பொழுது தங்கக்கூடிய அளவிற்கு தயாராகவில்லை. எனவே தற்பொழுது சசிகலா தங்குவதற்கு புதிய வீடு ஒன்று தி.நகர் பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது'' என அந்த வீட்டின் முகவரியை தந்தார்கள்.
எண் 181, அபிபுல்லா சாலை, தி.நகர் என வழங்கப்பட்ட முகவரிக்கு சென்றோம். முகவரிக்கு பக்கத்தில் இருந்த வீடு சசிகலாவுடன் சிறையில் இருக்கும் இளவரசிக்கு சொந்தமானது. நடராஜனின் உடல் நிலை மோசமானபோது பரோலில் வந்த சசிகலா இளவரசியின் வீட்டில்தான் தங்கியிருந்தார். அந்த வீட்டுக்கு பக்கத்தில் இருந்த இரண்டு மாடிகள் கொண்ட வீட்டையும் இளவரசியின் பெயரில் சசிகலா வாங்கியிருந்தார்.
வீட்டைச் சுற்றி ஆளுயரத் தடுப்புகளைக் கட்டி புதிதாக புனரமைத்திருந்தனர். போயஸ் கார்டனில் ஜெ. வீட்டில் அவர் தொண்டர்களை பார்த்து கையசைப்பதற்கு வசதியாக இருந்த பால்கனி போல, இந்த வீட்டிலும் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த வீட்டிலிருந்தே, இளவரசியின் வீட்டிற்கு செல்ல ஒரு பாதை அமைக்கப்பட்டி ருக்கிறது. போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் வீட்டில் ஒரே நேரத்தில் 10 கார்களை நிறுத்த முடியும். தி.நகர் வீட்டில் 2 கார்களை நிறுத்தவே வசதி உள்ளது. தனியார் செக்யூரிட்டிகள் பாதுகாப்புக்காக உள்ளனர்.
அவற்றைப் படமெடுத்துவிட்டு வந்த நாம், சசிகலாவின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியிடம் விடுதலை தேதி பற்றிக் கேட் டோம். ""ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ்தண்டனை பெற்றவர்களுக்கு அவர்களது தண்டனையில் குறைப்பு எதுவும் செய்ய முடியாது என்கிறார்கள். ஆனால் கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவித்த பலருக்கு தண்டனை குறைப்பு சலுகைகள் அளித்திருக்கிறார்கள். ஆகவே சசிகலாவை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என கர்நாடக சிறைத்துறைக்கு 17ந் தேதி மனு கொடுத்துள்ளோம். 27-ஆம் தேதிக்குள் பதில் கொடுப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். சசிகலாவிற்காக சொத்துகுவிப்பு வழக்கில் ஆஜரான அசோகன் என்ற வழக்கறிஞரின் ஜுனியரான முத்துக்குமார் என்பவர் பெயரில் அபராத தொகை முழுமையாகக் கட்டிவிட்டோம். பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்'' என்றார்.
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் அபராதத் தொகை 30 கோடியே 30 லட்சம் ரூபாய் வருகிறது. இவர்களது சொத்துக்கள் அனைத்தும் வருமானவரித்துறையால் முடக்கப்பட்டிருக்கிறது. எனவே அபராதத் தொகையை வெள்ளைப் பணமாகக் கட்டுவதற்கு சசிகலாவின் வழங்கறிஞர்கள் மிகுந்த சிரமப் பட்டிருக்கிறார்கள். சுதாகரனுக்கு சொத்துக்கள் அதிகம். அவர் அபராத தொகையை எளிதாக திரட்டிவிட்டார். ஆனால் அதனைக் கட்டுவதில் ஏற்பட்ட தாமதத்தால் அவர் சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலைக்குப் பிறகு ஒரு வாரம் கழித்துதான் விடுதலை ஆவாராம்.
சசிகலா விடுதலையாகும்போது வரவேற்க பெங்களூர் முதல் சென்னை தி.நகர் வரை விழா ஏற்பாடுகளை சொந்தபந்தங்கள் திட்டமிட்டிருக்கிறது. சென்னை வந்த அமித்ஷாவும், சசிகலாவின் விடுதலையாகும் சிக்னலை சுட்டிக் காட்டி எல்லோரும் ஒற்றுமையாக இருங்கள் என ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரிடமும் சொல்லிவிட்டு சென்றதாக மன்னார்குடி வட்டாரங்கள் மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றன.