விருதுநகர் மாவட்டம்- சாத்தூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ., எஸ்.ஜி.சுப்பிரமணியம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக, அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. தற்போது, கட்சியில் எந்தப் பொறுப்பும் வகிக்காத சுப்பிரமணியத்தை நீக்கும் அறிவிப்பில், ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வமும், எடப் பாடி பழனிசாமியும் கையெழுத்திட்டுள்ளனர்.
ஏன் இந்த நடவடிக்கை?
சாத்தூர் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், தனது தீவிர ஆதரவாளராக இருந்ததால், 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சிபாரிசு செய்து, அவர் எம்.எல்.ஏ. ஆவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார், மா.செ.வாக இருந்த கே.டி. ராஜேந்திரபாலாஜி. அதன் பிறகு, இருவருக்குமிடையே ’உரசல்’ ஏற்பட்டு, டிடிவி தினகரனின் அமமுக-வுக்கு தாவி, தகுதியிழப்பு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரானார், சுப்பிரமணியம். ஆனாலும், விருதுநகர் அமமுக மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு கிடைத்தது. பிறகு, அமமுக கசந்துபோய், மீண்டும் கே.டி. ராஜேந்திரபாலாஜி மூலம், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
சுப்பிரமணியத்தை, ராஜேந்திரபாலாஜி மீண்டும் அதிமுகவுக்கு கொண்டுவந்ததே, தனக்கு வேண்டாதவர் ஆகிவிட்ட சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கு ‘டஃப்’ கொடுப்பதற்காகத்தான் என்று அப்போது பேச்சு எழுந்தது. ஆனால், சாதிப்பாசம் இழுக்க... எதிர்பாராத "ட்விஸ்ட்' ஆக, அமைச்சரை கை கழுவிவிட்டு, ராஜவர்மன் எம். எல்.ஏ.-வுக்கு நெருக்கமானார் சுப்பிரமணியம். "நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்றாகி விட்டதே' என ராஜேந்திரபாலாஜிக்கு கோபமோ, கோபம். இந்த நிலையில்தான், வெறும் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருந்த சுப்பிரமணியம், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பிர மணியத்தை தொடர்பு கொண்டோம். ""என்ன தவறு செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. அமைச்சருக்கும், எம்.எல். ஏ.வுக்குமான உரசலில், நான் பலிகடா ஆக்கப் பட்டுவிட்டேன். ஒரு சாதாரண தொண்டனாக, நான் அதிமுகவில் தொடர்வதை யாராலும் தடுக்க முடியாது'' என்றார் குமுறலோடு.
சுப்பிரமணியம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தற்கு என்னதான் காரண மாம்?’ அதிமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். ""நானும் டிரவுசர் போட்ட காலத்துல இருந்து கட்சியில இருக்கேன். சொல்லப் போனா... இப்ப பெரிய பெரிய பொறுப்புல இருக் கிறவங்கள காட்டிலும் நான் சீனியராக்கும். சின்னம்மா வெளில வரட்டும். ஆட்சியில இப்ப டாப்ல இருக்கிறவங்கள்லாம் பல்லு பிடுங்கின பாம்பாயிருவாங்கன்னு, பப்ளிக்கா லூஸ்-டாக் விட்டு கட்சிக் காரங்களுக்குள்ள பிரச் சனை ஆயிருச்சாம். அப்புறம்... அமைச்சர் ராஜேந் திரபாலாஜிக்கு எதிரா இருக்கிறவங்கள ஒருங் கிணைச்சு மேல வரைக்கும் புகார் வேற அனுப்பினாராம். இது போதாதா? ராஜேந்திரபாலாஜி கிட்ட ஒபீனியன் கேட்டு எடப்பாடியும், ஓ.பி. எஸ்.ஸூம் கட்சியில இருந்தே சுப்பிரமணியத்த தூக்கிட்டாங்க''’என்றார் சிரித்தபடி.
""வெள்ளந்தியான சுப்பிரமணியத்துக்கு இது போதாத காலம்...''’என்று "உச்' கொட்டுகிறார்கள், சாத்தூர் தொகுதியில்!