Skip to main content

தேசத்தை உலுக்கிய சாக்கோ கொலை! விசாரணை அதிகாரி நமக்கு கொடுத்த எக்ஸ்க்ளூசிவ் தகவல்!     

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

Sacco case that rocked the nation! Exclusive information given to us by the investigating officer!

 

கேரளாவில் கடந்த வாரம் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நடித்த ‘குருப்’ திரைப்படம் வெளியானது. இது கேராளவில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியான திரைப்படம். இது பட்டையைக் கிளப்பியதுடன் மீண்டும் கேரளாவைப் பரபரப்பிலும் அதிர்ச்சியிலும் தள்ளியிருக்கிறது.

 

சுமார் 37 வருடங்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த சாக்கோ கொலை, 12 வருடங்களுக்குப் பின்பு தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதிலும் ‘சாக்கோ கொலை’ என பரபரப்பாக ஊடகங்களிலும், மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியோடு பேசப்பட்ட விஷயமாயிற்று. தேடப்பட்ட, தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் 37 வருடங்களாக இன்றைய அளவில் தனிப்பெயராக நீடிப்பது மட்டுமல்லாமல், நீதித்துறை வரலாற்றில் நீண்ட வழக்காக நீடித்துக்கொண்டிருக்கும் சாக்கோ கொலையின் குற்றவாளி தலைமறைவாக இருக்கிறாரா அல்லது மரணமடைந்துவிட்டாரா என விடை தெரியாத அளவுக்கு ஆச்சர்யக்குறியாய் நிற்கிறது சாக்கோ கொலை வழக்கு.

 

Sacco case that rocked the nation! Exclusive information given to us by the investigating officer!
சாக்கோ

 

மிகச்  சூழ்ச்சியாக, அதிர்ச்சியும் திகிலும், விறுவிறுப்பும் கொண்ட சாக்கோ கொலைச் சம்பவம் நடந்தது இப்படித்தான்.

 

கேரளாவின் மாவலிக்கரையைச் சேர்ந்த சுகுமார குருப் என்பவர் 1979களில் வளைகுடா நாட்டில் வேலையிலிருந்தவர். அப்போதைய நேரத்தில் தனக்கான எட்டு லட்சம் ரூபாயில் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறார். அந்தக் காலகட்டங்களில் இது மதிப்பு கூடிய பாலிசி மட்டுமல்ல, கட்ட வேண்டிய பாலிசி தொகையும் அதிகம். 1983இல் கேரளா திரும்பிய சுகுமார குருப்பின் மூளை கிரிமினல்தனமாக எந்த வழியிலாவது, தான் சாகாமல் அந்த 8 லட்சம் இன்சூரன்ஸ் தொகையைப் பெற வேண்டும் என மனக்கணக்குப் போட்டிருக்கிறது.

 

Sacco case that rocked the nation! Exclusive information given to us by the investigating officer!
சுகுமார குருப்

 

அதை நிறைவேற்ற முகூர்த்தம் குறித்த சுகுமார குருப், மாவலிக்கரையைச் சேர்ந்த தன் வயதையொத்த இளைஞனும் டாக்சி டிரைவருமான அப்பாவி சாக்கோவை தேர்ந்தெடுத்திருக்கிறார். வாய்ப்புக்காகக் காத்திருந்த சுகுமார குருப், 1984 ஜனவரி 7ஆம் தேதியன்று இரவு நேரம் பேருந்துக்காகக் காத்திருந்த சாக்கோவை சினிமா பிரதிநிதி ஒருவர் தன் காரில் லிஃப்ட் கொடுத்து ஏற்றிக்கொண்டு போகும்போது, தன்னோடு இரண்டு பேரைச் சேர்த்துக்கொண்டு காரை வழிமறித்து சாக்கோவை கடத்தியிருக்கிறார். தன்னுடைய அம்பாசிடர் காரில் சாக்கோவை திணித்த சுகுமார குருப்பும் அவரது ஆட்களும் வலுக்கட்டயாமாக சாக்கோவின் வாயில் மதுவை ஊற்றி, போதை ஏறியதும் சாக்கோவிற்கு தனது உடையை அணிவித்து, பின் அவரை மாவலிக்கரையை ஒட்டியுள்ள குன்னம் பகுதியில் பெட்ரோல் ஊற்றி அடையாளம் தெரியாமல் எரித்துக் கொன்ற சுகுமார குருப், அதில் தன் உடைகள் மட்டும் எரிந்தும் எரியாதவாறும் அடையாளம் தெரிகிற மாதிரி செட்டப் செய்திருக்கிறார். தொடர்ந்து இறந்து கிடப்பது சுகுமார குருப் என்றும் அதற்கான அடையாளத்தைக் காட்டிவிட்டு, தன்னுடைய இன்சூரன்ஸ் தொகை 8 லட்சத்தையும் இன்சூரன்ஸ் கம்பெனியிடமிருந்து பெற்றுக்கொள்ளும்படி தனது உறவினர்களிடம் தெரிவித்துவிட்டுத் தலைமறைவாகிவிட்டார் சுகுமார குருப்.

 

Sacco case that rocked the nation! Exclusive information given to us by the investigating officer!

 

ஒருவர் எரிக்கப்பட்டுப் பிணமாகக் கிடக்கும் சம்பவம் தெரியவர அப்பேதைய செங்கன்னூர் டி.ஒய்.எஸ்.பி.யான டி.எம். ஹரிதாஸ் ஸ்பாட்டிற்கு வந்து சம்பவ இடத்தைத் துல்லியமாக ஆராய்கிறார். அது சமயம் சம்பவ இடத்திற்கு வந்த சுகுமார குருப்பின் மனைவி, தன் புருஷனக் காணவில்லை என்றும், அங்கு கிடந்தது தன் புருஷனின் உடை, உடல் என்றும் அவரை யாரோ கொலை செய்து எரிச்சுருக்காங்க என்றும் டி.ஒய்.எஸ்.பி. ஹரிதாசிடம் சொல்லியிருக்கிறார். ஆனாலும் இன்வெஸ்ட்டிகேஷன் அதிகாரியான ஹரிதாசிற்கு கரிக்கட்டையாய் கிடப்பது சுகுமாரகுருப்தானா என கனத்த சந்தேகம். அவரது விசாரணை பரவலாக விரிய அது சமயம் சுகுமார குருப்பின் 8 லட்சம் பாலிசி விவகாரம் தெரியவருகிறது.

 

இதனிடையே சாக்கோவை காணவில்லை என்ற ‘மேன் மிஸ்ஸிங்’ எஃப்.ஐ.ஆரும் காவல் நிலையத்தில் பதிவாக டி.ஒய்.எஸ்.பி.யின் விசாரணையில் கடத்தி எரித்துக் கொல்லப்பட்டது சாக்கோ என்று தெரியவந்தது. அதனைப் போஸ்ட்மார்ட்ட ரிப்போர்ட்டும் உறுதி செய்திருக்கிறது. அதையடுத்தே இன்சூரன்ஸ் தொகையை அடைய சாக்கோவை கடத்தி எரித்துக் கொன்றுவிட்டுத் தான் கொல்லப்பட்டதாக நாடகமாடிய சுகுமார குருப் தப்பித் தலைமறைவாகியிருக்கிறார் என்ற விசாரணை அறிக்கையோடு நீதிமன்றமேறுகிறது வழக்கு. குற்றவாளி சுகுமார குருப், பிடிபடாமல் தலைமறைவான நிலையில், 12 வருடங்களாக நடந்த சாக்கோ கொலை வழக்கில், சிக்கிய அவரது டிரைவர் பொன்னப்பன் மற்றும் அவர் மைத்துனர் பாஸ்கர பிள்ளை இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதுவரையிலும் சுகுமார குருப் போலீசின் வசம் சிக்காமல் போனதால் அந்த வழக்கு நிலுவையில் நீண்டுபோயிருக்கிறது.

 

இதையடுத்தே அந்தத் திருப்பம்

 

13 வருடங்களுக்கும் மேலாக சுகுமார குருப் பிடிபடாமல் தலைமறைவாகிப் போனவர், இருக்கிறாரா? இறந்து விட்டாரா அல்லது வெளிநாடு தப்பிவிட்டாரா என பல்வேறு சந்தேகங்கள் போலீசுக்கு முளைக்க, சாக்கோ கொலை வழக்கு ஊடகங்களால் ஈர்க்கப்பட்டு பரபரப்பு செய்தியாக, கேரளாவின் இண்டு இடுக்கெல்லாம் சாக்கோ கொலை திகிலும் பரபரப்புமாய் பேசப்பட பின்னர் இந்தியா முழுக்கப் பரவி, சாக்கோ கொலை பேச்சுக்கள் 2000களில் தொடர்ந்து விறுவிறுப்பாகிவிட்டது. இந்தச் சூழலில் இறந்தது சுகுமார குருப் அல்ல என்று போலீசின் ஆவணங்களில் ஏற, அதனடிப்படையில் சுதாரித்த இன்சூரன்ஸ் நிறுவனம் 8 லட்சம் பாலிசி தொகையைத் தராமல் முடக்கிவிட்டது. அவர் எங்கேயிருக்கிறார் என யாருக்குமே தெரியாத மர்மாகிவிட்டது. 

 

இந்தநிலையில்தான், 37 வருடமாகியும் குற்றவாளி சுகுமார குருப் போலீசுக்குக் கிடைக்காமல் தலைமறைவு லிஸ்ட்டிற்குள் போன சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சுகுமார குருப் என்பதில், குருப் என்ற பெயரைத் தாங்கிய திரைப்படம் கடந்த வாரம் கேரளாவில் ரிலீஸ் ஆனது. ’குருப்’ படம் வெளியானது 37 வருடங்களுக்கு முன்பு நடந்த பயங்கரத்தை அப்பட்டமாகத் தோலுரிப்பதால் படம் கேரளாவில் வைரலானது. இதையடுத்து, தற்போது கேரள மக்களிடம் சாக்கோ கொலை பற்றிய சூடான பேச்சு கனமாக அடிபடத் தொடங்கியிருக்கிறது.

 

Sacco case that rocked the nation! Exclusive information given to us by the investigating officer!
டி.ஒய்.எஸ்.பி., டி.எம். ஹரிதாஸ்

 

தற்போது 83 வயதைத் தொடும் சாக்கோ கொலையின் இன்வெஸ்டிகேசன் அதிகாரியான டி.எம். ஹரிதாஸ் டி.ஒய்.எஸ்.பி., கொல்லத்தில் தன் வயதான மனைவியுடன் வசிப்பதையறிந்த நாம், நமது, நண்பர் மூலமாக சம்பவம் குறித்தும் அவரிடம் பேசியதில், சாக்கோ கொலையின் பின்னணியை அவர் விவரித்தது படு ஆச்சர்யமாக இருந்தது.

 

அவர் தெரிவித்ததாவது, “இப்படி ஒருத்தன் எரிந்து கெடக்கான். மர்மமாயிருக்குன்னு அன்னைக்கி எனக்குத் தகவல் வந்ததும் ஸ்பாட்டை துல்லியமாக ஆராய்ந்தேன். இத்தன வருடமா நா சாக்கோ கொலை பத்தி அனைத்து பத்திரிகைகளுக்கும் பல நூறு தடவ பேட்டி குடுத்திருக்கேன். இந்தக் கேஸ்ல இதுவரைக்கும் பேட்டியில சொல்லாதத, வெளிப்படுத்தாத விஷயங்களை இப்ப சொல்றேன்” என மனம் திறந்தவர்.

 

“எரிஞ்சு பொணமா கிடந்தது சுகுமார குருப்தாம்னு சொன்னாங்க. ஆனா என்னோட இன்வெஸ்டிகேசன்ல இன்சூரன்ஸ் தொகை பற்றிய தகவல் வந்ததும் அலர்ட் ஆன நான், தரோவா விசாரிச்சிட்டு, இறந்தது நான்தான்னு சுகுமார குருப் நாடகமாடியது தெரிஞ்சிடிச்சி. என்னோட இன்வெஸ்டிகேசன்ல செத்தது சுகுமார குருப்பில்லன்னு தெளிவா தெரிஞ்சுக்கிட்டேன். கொலைக்கிப் பின்னால் தலைமறைவாகி தப்பிச்சுட்டுப் போயிட்டான் சுகுமார குருப். அந்தச் சமயத்தில் தப்பிச்ச சுகுமார குருப், எர்ணாகுளம் பக்கமுள்ள ஆல்வா பகுதியிலிருக்கும் ஒரு லாட்ஜ்ல தலைமறைவாயிருக்காம்னு எனக்கு இன்ஃபர்மேஷன் கெடைச்சது. அப்ப உள்ள சூழ்நிலையில், என்னால அவனப் புடிக்க முடியும்ற நிலைதான். இந்த விஷயத்த என்னோட மேலதிகாரியான ஆலப்புழா எஸ்.பி. ராமச்சந்திரன்ட்ட சொன்னப்ப, அவர், ‘அவனப் புடிக்க நீ போக வேணாம். உனக்குக் கீழ உள்ள ஆபீசர அனுப்பு’ன்னாரு. என்னயப் போக அவர் அனுமதிக்கல. எனக்கு அவர் இந்தக் கேஸ்ல ஃப்ரீடம் குடுக்கல்ல. மேலதிகாரி ஏன் அப்டிச் சொன்னார்னு தெரியல. நா திகைச்சுப் போயிட்டேன்.

 

ஆனா அவனப் புடிக்கப் போன சர்க்கிள் இன்ஸ்பெக்டர் உடனடியாப் போவாம, நேரந்தாண்டி அங்க போனதால அவனுக்கு இன்ஃபர்மேஷன் கெடைச்சி, சுகுமார குருப் அங்கிருந்து தப்பிச்சிட்டான். போலீஸ்லயே அவனுக்குக் தகவல் குடுக்க ஆள் இருக்கறத நெனைச்சி எனக்கு ரொம்ப அதிர்ச்சியாயிறுச்சி. இந்தக் கேஸ்ல நா ரொம்ப ரிஸ்க் எடுத்தேன். டோட்டல் வேஸ்ட். இந்தக் கேஸ்ல ஆச்சர்யம் என்னான்னா. கொலை நடந்து 37 வருஷமாச்சு இன்னைய டேட் வரைக்கும் சுகுமார குருப் புடிபடல்ல. அவம் இருக்கானா, இறந்திட்டானான்னு யாருக்குமே தெரியல்ல. தேசத்தில் இதுவரை நடந்திராத சம்பவம் சாக்கோ கொலை” என்றார் சன்னமான குரலில்.

 

மீண்டும் புகையையும் புகைச்சலையும் கிளப்பியிருக்கிறது சாக்கோ கொலை.