சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் சமீபத்தில் நகைகள் திருடு போன வழக்கு பரபரப்பாக பேசப்பட்டது. அதுகுறித்தும் இதற்கு முன்பு ரஜினி வீட்டில் நடந்த ஒரு திருட்டு குறித்தும் பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் ஓய்வுபெற்ற உதவி கமிஷனர் ராஜாராம் அவர்கள்.
தன்னுடைய வீட்டின் லாக்கரில் இருந்த 60 சவரன் நகைகளைக் காணவில்லை என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் அணிந்த நகைகள் அவை என்றும், தன்னுடைய வீட்டின் பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் தன்னுடைய புகாரில் அவர் தெரிவித்திருந்தார். அதில் ஈஸ்வரி என்கிற பெண் 6 மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு விலகியிருந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். ஈஸ்வரியை விசாரித்தபோது புகார்களை அவர் முதலில் மறுத்தார். அவருடைய வங்கிக் கணக்குகளை சோதனை செய்து பார்த்தபோது லட்சக்கணக்கான பணப் பரிவர்த்தனை நடந்திருப்பது தெரிந்தது. அவரையும் அவருடைய கணவரையும் விசாரித்தபோது சோழிங்கநல்லூரில் 95 லட்சம் ரூபாய்க்கு நிலம் வாங்கியிருப்பது தெரிந்தது. வங்கியில் கடன் வாங்கி இரண்டே வருடங்களில் அதை அடைத்துள்ளனர். இந்த நகைகளை விற்றுத்தான் அனைத்தையும் செய்துள்ளனர் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
23 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த் வீட்டில் ஒருமுறை திருடு போனது. அவருடைய போயஸ் கார்டன் வீட்டிற்கு அப்போது பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது இரவில் ஒரு திருடன் ஏணி வைத்து ஏறி வீட்டுக்குள் நுழைந்து, வைர நகைகளைத் திருடி, வெளியேறி தன்னுடைய சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு பஸ்ஸில் திரும்பிக் கொண்டிருந்தான். திருடிய நகைகளிலிருந்து ஒரு மோதிரத்தைத் தன் கையில் அணிந்துகொண்டான். நடுவில் சாப்பிட இறங்கும்போது அந்த மோதிரம் தொலைந்து போனது. ஊருக்குச் சென்று குழி தோண்டி, திருடிய நகைகளை அதில் புதைத்தான். அதன் பிறகு செய்திகளில் ரஜினிகாந்த் வீட்டில் திருடு போயிருக்கிறது என்பதைப் பார்த்த பிறகு தான், தான் ரஜினிகாந்த் வீட்டில் திருடியிருக்கிறோம் என்பதே அவனுக்குத் தெரிந்தது. சில காலம் கழித்து அதே போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அவன் திருடச் சென்றான். அந்த வீட்டுப் பெண் இவனைப் பார்த்துக் கத்த ஆரம்பித்ததும் பயத்தில் வெளியேறினான். அந்தப் பெண் போலீசில் புகாரளித்தார். பதுங்கியிருந்த இவனைப் போலீசார் கண்டறிந்தனர்.
விசாரணையில் அவனைப் பற்றிய அனைத்து விவரங்களும் தெரிந்தன. குண்டர் சட்டத்தில் அவன் கைது செய்யப்பட்டான். ரஜினிகாந்த் வீட்டில் அவன் திருடியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் தனக்கு மிகவும் பிடித்தமான ஒரு வைர மோதிரம் மிஸ் ஆவதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். இடையில் உணவு அருந்தும்போது அது காணாமல் போனதாக அவன் கூறினான். போலீசார் அந்த இடத்திற்கே சென்று அந்த மோதிரத்தைக் கண்டுபிடித்தனர். சிறை சென்று வெளியே வந்த பிறகும் திருடுவதை அவன் விடவில்லை. மீண்டும் போலீசாரால் அவன் கைது செய்யப்பட்டான். திருடச் சென்ற ஒரு வீட்டில் ஒரு பெண்ணிடம் தான் தவறாக நடந்து கொண்டதையும் விசாரணையில் தெரிவித்தான். தன் தங்கைக்குத் திருமணம் செய்வதற்காகத் திருட ஆரம்பித்த அவன், ரஜினிகாந்த் வீட்டிலேயே திருடி தென் சென்னையையே கலக்கும் திருடனாக மாறி அதன்பிறகு என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.