என்னை கொலை செய்ய முயல்கிறது இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரா என்கிற குற்றச்சாட்டை தனது அமைச்சரவை கூட்டத்தில் கூறியுள்ளார் இலங்கை அதிபராக உள்ள மைத்திரிபாலா சிறிசேனா. இந்த தகவல் செய்தியாக வெளியாக தற்போது சர்வதேச அரங்கில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் பணியாற்றும் நாமல்குமாரா என்பவர் ஒரு வாரத்துக்கு முன்பு, கொழும்பில் உள்ள போலிஸ் அதிபரிடம், ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவின் உயர்அதிகாரி நாலகசில்வாவுடன் சிலர் சேர்ந்துக்கொண்டு, அதிபர் மைத்திபாலா சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே ஆகியோரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார் விசாரிக்கவும் என புகார் கூறியுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் தேசிய குற்ற புலனாய்வு பிரிவு விசாரணையை தொடங்கியது. விசாரணை தொடங்கியதும், குற்றம் சாட்டப்படும் அந்த போலிஸ் அதிபர் இடைக்கால பணி நீக்கம் செய்ய வேண்டும்மென சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் மத்துமபண்டாரா, தேசிய போலிஸ் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் அவரை சஸ்பெண்ட் செய்தது போலிஸ் துறை.
இந்த விசாரணை நடந்துக்கொண்டு இருக்கும்போதே இலங்கை போலிஸார் கொழும்புவில் ராஜேந்திரகுமார் என்கிற நபரை கைது செய்தனர். இவர் 2015 க்கு முன்பு இந்தியாவில் இருந்து அரசியல் புகலிடம் தேடி இலங்கைக்கு வந்துள்ளார். உண்மையில் அவர் அரசியல் புகலிடம் தேடிவரவில்லை. இந்தியாவின் வெளிநாட்டு உளவுப்பிரிவான ரா வின் ஏஜென்டாக வந்துள்ளார் என தெரிந்து கைது செய்து விசாரித்தபோதுதான், இலங்கை அதிபர், முன்னாள் அதிபர், பாதுகாப்பு செயலாளரை ரா கொலை செய்ய திட்டமிடுகிறது என்கிற தகவல் தெரிந்து அதிபருக்கு தெரியவந்துள்ளது என்கிற தகவலை மீடியாக்களிடம் கூறினார் எம்.பி விமல் வீரவங்சா. அதோடு, அவர் ரா உளவாளி என்னை சந்திக்கவே இரண்டு முறை முயன்றுள்ளார், ஆனால் அவர் என்னை சந்திக்கவில்லை எனச்சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த பரபரப்புகளுக்கு இடையில்தான் இலங்கை அரசு வாரந்தோறும் அதிபர் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டம் கடந்த அக்டோபர் 16ந்தேதி அதிபர் மைத்திரிபாலாசிறிசேனா தலைமையில் நடந்துள்ளது. அந்தக்கூட்டத்தில் என்னை கொலை செய்ய இந்தியாவின் ரா அமைப்பு சதி செய்துள்ளது என அதிபர் பேசியுள்ளார். மற்ற அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள் என்கிற தகவல் அதிபர் மாளிகையில் இருந்து பத்திரிகைகளுக்கு கசியவிடப்பட்டது. இது மறுநாள் செய்தியாக வெளியாக உலக அரங்கம் பரபரப்பானது. இந்த செய்தியால் அதிர்ச்சியான இந்திய பிரதமர் மோடி உடனடியாக, இலங்கை அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதே நேரத்தில் இலங்கைக்கான இந்திய தூதர் தரம்சித்சிங் இலங்கை அதிபரை நேரில் சந்தித்து பேசிவிட்டு கிளம்பியதும், அப்படியொரு பேச்சை அமைச்சரவை கூட்டத்தில் பேசவில்லை என அமைச்சரவை தொடர்பான செய்திகளை தெரிவிக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜிதசேனாரத்னா அக்டோபர் 17ந்தேதி மதியம் செய்தியாளர்களிடம் மறுத்தார்.
சிறிது நேரத்தில் அதிபரின் மூத்த ஆலோசகர் சிறிரால் லக்திலக் செய்தியாளர்களிடம், தன்னை கொலை செய்ய ரகசிய அமைப்புகள் சதி திட்டம் தீட்டியுள்ளன என பேசினாரே தவிர இந்தியாவின் ரா அமைப்பு பற்றி ஒன்றும் சொல்லவில்லை என மறுத்தார்.
முதலில் இல்லை என்றார்கள், பின்னர் பேசினோம் என மாத்தி மாத்தி பேசி மழுப்பினார்கள். வரும் 20ந்தேதி இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இந்தியா வந்து பிரதமர் மோடி, அமைச்சர் சுஷ்மாசுவராஜ் போன்றோரை சந்திக்கிறார். இந்த சந்திப்பில் இந்தியா சார்பில் அதிபரின் குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் இந்தியா சார்பில் தெரிவிக்கப்படும் எனக்கூறப்படுகிறது.
இந்தியாவுக்கும் – சீனாவுக்கும் இடையில் ஆசிய பிராந்தியத்தில் நடந்துவருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் அதிகாரத்தில் உள்ளவர்களில் இந்தியா ஒருதரப்பை கவர் செய்து வைத்திருந்தால், சீனா ஒரு தரப்பை கவர் செய்து வைத்திருக்கும். அப்படி இலங்கையில் அதிபர் சிறிசேனா சீனா ஆதரவாளராகவும், பிரதமர் ரணில்விக்ரமசிங்கே இந்திய ஆதரவாளராகவும் உள்ளார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியை இந்தியாவுக்கு தரவேண்டும்மென பிரதமர் ரணில் விக்ரம்சிங்கே கூறியதாகவும், இதற்கு எதிர் நிலைப்பாடு அதிபர் கொண்டுள்ளார். இதேபோல் பல விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அதிபர் ஈடுபட்டுள்ளதால், அவர் மீது அதிருப்தியில் உள்ளது. இதை அறிந்தே உள்ளார் அதிபர். அதோடு அவருக்கு நாட்டில் எதிர்ப்புகளும் அதிகமாக உள்ளன. இதனால் அச்சத்தில் உள்ள அதிபர், தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாகவும், அதற்காக இலங்கையில் செயல்படும் ஆவா குழுக்களுக்கு இந்தியா ஆயுதம், பணம், பயிற்சி வழங்குகிறது என்கிற குற்றச்சாட்டை முதலில் தனக்கு ஆதரவான எம்.பிக்கள் மூலமாக பேசவைத்து அரசியல் செய்துள்ளார் என்கிறார்கள்.
ரா அமைப்பு.
இந்தியாவின் சார்பில் வெளிநாடுகளில் இயங்கும் புலனாய்வு அமைப்பு தான் ரா. ( ரிசர்ச் அனலைஸ் விங்க் என்பதன் சுருக்கமே RAW) இந்த அமைப்பு இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் மிரட்டல், தீவிரவாத அச்சுறுத்தல், இந்தியாவுக்கு எதிராக உருவாகும் சதித்திட்டங்களை புலனாய்வு செய்வதே இதன் பணி. இந்தியாவுக்கு எதிராக இருப்பவர்களை அடக்குவது, எதிர்த்தால் அழிப்பது என்பது கூடுதல் வேலை. இப்படியொரு அமைப்பு எல்லா நாட்டு உளவுத்துறையிலும் உண்டு. அமெரிக்காவுக்கு சிஐஏ, இஸ்ரேல்க்கு மொஸாட், பாகிஸ்தானுக்கு ஐ.எஸ்.ஐ உள்ளது. இந்தியாவுக்கும் – சீனாவுக்கும் இடையிலான முதல் யுத்தத்தில் இந்தியாவின் தோல்விக்கு பின் உருவானது தான் ரா. அப்போது முதல் பலப்பல வெளிநாட்டு ஆப்ரேஷன்களில் ஈடுப்பட்டுள்ளன. சிலப்பல வெற்றி, சிலப்பல தோல்வி. சமீபத்தில் வெளிநாட்டு தேர்தல் ஒன்றில் கவனம் செலுத்தி இந்தியாவுக்கு சாதகமான ஆட்சியை கொண்டு வந்துள்ளது என்கிற கருத்தும் ஏற்பட்டுள்ளது.
ரா அமைப்பை பார்த்து இலங்கை அதிபர் பயப்படக்காரணம், ஒருக்காலத்தில் இலங்கை சிங்கள அரசை 25 வருடங்களாக நெருப்பின் மீது நடக்கவைத்த விடுதலைப்புலிகள் என்கிற அமைப்புக்கு பயிற்சி தந்து ஆக்கமும், ஊக்கமும் எல்லா விதத்திலும் தந்தது ரா தான். இலங்கையில் சுமார் 40 ஆண்டுகாலமாகவே ரா அமைப்பினர், துணி வியாபாரியாக, வர்த்தகராக, சுற்றுலாப்பயணியாக பலபல வடிவங்களில் இலங்கையில் தங்கி உளவு வேலை செய்துவருகின்றனர். ரா அமைப்பு நினைத்தால் இலங்கையில் ஒருவரை அரியணை ஏற்றும், இல்லையேல் இறக்கிவிடும். உதாரணம் முன்னால் அதிபர் ராஜபக்சே. இதை தெரிந்ததால் தான் தற்போதைய அதிபர் சிறிசேனா அலறுகிறார்.
ஆவாக்குழு ?.
இலங்கையில் செயல்படும் கூலிப்படை ஒன்றின் பெயரே ஆவாக்குழு. மாணிப்பால் கிருஷ்ணா குழு, வட்டுக்கோட்டை தில்லு குழு, சுன்னாகத்தில் சானா குழு என தமிழர்கள் பகுதியில் பல குழுக்கள் உள்ளன. சிங்களர்கள் பகுதியிலும் இப்படிப்பட்ட குழுக்கள் உள்ளன. அரசியல்வாதிகளின் பெரும் பலத்தோடு உள்ளனர். விடுதலைப்புலிகள் கோலோச்சிக்கொண்டு இருந்த காலத்திலேயே யாழ்ப்பானத்தில் தீனா குழு செயல்பட்டு வந்தது. அப்படிப்பட்ட ஒருக்குழு தான் ஆவாக்குழு.
இவர்கள் கையில் கத்தியோடு உலாவருவார்கள். கட்டப்பஞ்சாயத்து செய்வார்கள், ஆள் கடத்தலில் இறங்கினார்கள் அது எதையும் போலிஸ் கண்டுக்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட குழுக்கள் கடந்த தேர்தலில் முன்பு அதிபராக இருந்த ராஜபக்சேவே பயன்படுத்திக்கொண்டு இருந்துள்ளார். இந்த குழுக்கள் இப்போது போலிஸ், இராணுவத்தோடு நேரடியாக மோதுகிறார்கள். இது இலங்கையில் பெரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்திவருகின்றன. இதில் ஆவா குழுவினரின் கைகளில் தற்போது லேட்டஸ்ட் துப்பாக்கிகள் உள்ளனவாம். அதைக்காட்டியும், சுட்டும் மிரட்டுகிறார்களாம். இவர்களை இந்தியாவின் ரா அமைப்பு தன் நாட்டுக்கு அழைத்துச்சென்று பயிற்சி தந்து அனுப்புகிறது, இலங்கையிலும் ரகசியமாக பயிற்சி வழங்குகிறது என இலங்கை புலனாய்வு அமைப்பு அதிபருக்கு தகவல் தந்துள்ளது. அதோடு, உங்களை இந்த குழுவை வைத்தே கொல்லவும் முயல்கிறது இந்தியா எனச்சொல்ல அதுவே இத்தனை பூதாகரத்துக்கும் காரணமாகியுள்ளது.