Skip to main content

தினகரனை அழைத்தால் என்ன? இரத்தின சபாபதி பேட்டி

Published on 12/06/2019 | Edited on 12/06/2019

 

அதிமுகவுக்கு ஒரே தலைமை வேண்டும். இரட்டைத்தலைமை அ.தி.மு.க-வில் கூடாது என்று அதிமுக எம்எல்ஏக்கள் ராஜன் செல்லப்பா, குன்னம் ராஜேந்திரனும் கூறியிருந்தனர். இதையடுத்து ஜீன் 12ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஆலோசனைக்கூட்டம் நடக்க உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர்.
 

அதன்படி இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோர் மீது அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தது தொடர்பாக சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த 3 எம்எல்ஏக்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 

 


 

 

 

admk - ops - eps



இந்த நிலையில் நக்கீரன் இணையதளத்திடம் அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தின சபாபதி சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
 

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லையா?
 

அதற்காகத்தான் வந்தோம். இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் மதிக்கவில்லை என்கிறபோது திரும்பிவிட்டோம். மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் என்பது பழமொழி. என்னதான் என் தாய் கட்சியாக இருந்தாலும், அழைக்காமல் போனால் அங்கு பிரச்சனைதான் வரும். 
 

அழைக்காததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
 

அது என்னவென்று தெரியவில்லை. அவர்களைத்தான் கேட்க வேண்டும்.
 

கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தது தொடர்பாக சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதற்கு நீங்கள் நீதிமன்றத்திற்கு சென்றதால் அழைப்பு அனுப்பவில்லையா? 

 

Rathinasabapathy mla



நடவடிக்கை எடுக்கணும் என்றுதானே புகார் கொடுத்திருக்கிறார். அதற்கு சபாநாயகர் விளக்கம் கேட்டிருக்கிறார். அந்த நோட்டீஸ்க்கு ஸ்டே வாங்கியிருக்கிறோம். இதற்காக அழைப்பு கொடுக்காமல் இருக்கலாமா? ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சி இருக்க வேண்டும் என்றுதானே நாங்கள் சொல்லி வருகிறோம். அழைப்பு கொடுத்திருந்தால் கலந்து கொண்டிருப்போம். 
 

ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று ராஜன்செல்லப்பா கூறியிருப்பது பற்றி...
 

கட்சியில் உள்ள அனைவரும், பொதுமக்கள் விருப்பும் ஒருவரை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தால் இந்த இயக்கம் வலிமை பெறும். இல்லையென்றால் இதே குழப்ப சூழ்நிலை தொடரும். பொதுச்செயலாளர் தேர்வுதான் சரியானது.  இரட்டைத் தலைமை கட்சிக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே ஒத்துவராது. 
 

பொதுச்செயலாளர் தேர்வு எப்படி இருக்க வேண்டும்?
 

எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிமுக பைலாப்படி தேர்தல் நடத்துவது இப்போது சாத்தியப்படுமா என்பது தெரியவில்லை. பொதுக்குழு உறுப்பினர்களாவது ஒற்றுமையாக இருந்து ஒற்றைத் தலைமையை தேர்வு செய்ய வேண்டும். பிரிந்து இருப்பவர்கள் அனைவரையும் அழைக்க வேண்டும்.
 

அனைவரையும் அழைக்க வேண்டும் என்றால்...
 

டிடிவி தினகரன் உள்ளிட்டவர்களையும் அழைக்க வேண்டும். 
 

தனிக்கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்த தினகரன் மீண்டும் அதிமுகவுக்கு வருவாரா? இவர்கள்தான் அழைப்பார்களா?

 

அவரிடமும்  கணிசமான தொண்டர்கள் உள்ளார்கள். அவர்களையும் அழைத்து பேச வேண்டும். ஒன்றுப்படுத்த வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்கள் இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார்கள். அவர்களை அழைத்து துணை முதல் அமைச்சர், ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவியெல்லாம் கொடுக்கும்போது தினகரனை அழைத்தால் என்ன? எல்லோரும் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும் என்று அவர் கட்சி தொடங்குவதற்கு முன்பிலிருந்தே நான் வலியுறுத்தி வருகிறேன். 


 

 

 

 

சார்ந்த செய்திகள்