Rare monuments of Rajendra Chola period! Discovery for the first time in Tamil Nadu!

தமிழ்நாட்டில் முதன்முறையாக ராஜேந்திர சோழர், குலோத்துங்க சோழர் கால வணிகக்குழுவினரின் 10 நினைவுத் தூண் கல்வெட்டுகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கொன்னைப்பட்டி கொன்னைக் கண்மாயில் இக்கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத் தலைவர் மேலப்பனையூர் கரு. ராஜேந்திரன், நிறுவனர் மங்கனூர் ஆ. மணிகண்டன் தலைமையிலான புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக உறுப்பினர்கள் எம். ராஜாங்கம், பீர்முகமது, ச. கஸ்தூரி ரங்கன், ஆ. கமலம் ஆகியோர் அடங்கிய குழுவினரால் இக்கல்வெட்டுகள் ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Advertisment

Rare monuments of Rajendra Chola period! Discovery for the first time in Tamil Nadu!

இந்தக் கல்வெட்டுகளின் கண்டுபிடிப்பு குறித்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் மங்கனூர் ஆ. மணிகண்டன் கூறியதாவது; “2016ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம், செல்லுகுடியில் ராஜேந்திர சோழரின் பெயர் தாங்கிய வணிகக்குழு கல்வெட்டு எமது குழுவினரால் அடையாளம் காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது வணிகக்குழு தொடர்புடைய நினைவுத்தூண் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நினைவுத்தூண் கல்வெட்டுகள்:

சமூகத்தின் உயர்நிலையில் இருந்தவர்களுக்கும், போர், வேட்டையாடுதல், பயிர்களைக் காக்கும் பொருட்டு விலங்குகளைத் துரத்துதல்உள்ளிட்ட நிகழ்வுகளில் உயிர்நீத்த வீரர்களுக்கு நடுகல், வீரக்கல், நினைவுத்தூண் ஆகியவை நடும் பழக்கம் இருந்துள்ளது. நினைவுத்தூண் கல்வெட்டுகள் புதுக்கோட்டை மாவட்டம், மேலப்பனையூர் வாழக்குறிச்சி, நெருஞ்சிக்குடி, செவலூர் ஆகிய ஊர்களில் சமீப வருடங்களில் கரு.ராஜேந்திரன் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Rare monuments of Rajendra Chola period! Discovery for the first time in Tamil Nadu!

தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரே இடத்தில் 10 நினைவுத்தூண் கல்வெட்டுகள்:

கொன்னைப்பட்டி எனும் இவ்வூர் கொன்றையூர் என்ற உத்தம சோழபுரம் என்ற பெயருடன் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொன்னைப்பட்டி கண்மாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நினைவுத்தூண்களில் ஒன்பது கல்வெட்டுகள் மட்டுமே நன்றாக வாசிக்கும் நிலையில் உள்ளன. இவை 5 முதல் 7 அடி உயரமும், அடியில் சதுர வடிவிலும், மேற்பகுதி எண்பட்டை வடிவத்துடனும் உள்ளன. இவற்றில் கல்வெட்டு பொறிப்பு ஒன்று முதல் இரண்டு தொடர் பக்கங்களில் 30 செ.மீ அகலம் முதல் 70 செ.மீ வரையிலான நீளத்துடன் ஒவ்வொரு கல்வெட்டிலும் அளவு மாறுபட்டு காணப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரே இடத்தில் 10 நினைவுத்தூண் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

கல்வெட்டிலுள்ள வாசகங்கள்:

1. ஸ்ரீ (ரா)ஜேந்தரசோழ தே(வர்)க்கு (யா)ண்டு 10 வது குன்றன் சா(த்தன்)

2.ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு 17 வது குன்றன் சா(த்தன்)

3..ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு 28 மருதன் செட்டி

4..ஸ்ரீ இராஜேந்தர சோழ தேவர்க்கு யாண்டு இருபத்து ஒன்பதாவது படை...

5.கஞ்சாரன் மூதன் நின்னா நாடு இர(ண்)டு ஞ்சக ஞெட்டி

6..ஸ்ரீ முத்தங் கஞ்சாறநான மும்முடி சோழ சிதலட்டி

7.ஸ்ரீ ராஜேந்த்ர தேவர்க்கு யாண்டு ஆவது (பூ)லாங்குள(த்)தான்

8………கங்கை கொண்ட சோழ செட்டி

9.ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 8 ஆவது சிறப்பன் அரசு

என்ற தகவல் பொறிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு விளக்கம்:

கொன்னைப்பட்டி நினைவுத்தூண் கல்வெட்டுகள், வணிகக்குழு தாவளத்தில் இருந்தோர் உயிர் நீத்தமையால் அவர்கள் நினைவாக நடப்பட்டவை என்பதைக் கல்வெட்டுகளிலுள்ள செய்திகள் உறுதிசெய்கின்றன. இக்கல்வெட்டுகள் பதினொன்றாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டவை அதாவது, ராஜேந்திர சோழரின் 10, 17, 28, 29 ஆட்சியாண்டுகள்தொடங்கி முதலாம் குலோத்துங்கனின் எட்டாவது ஆட்சியாண்டு வரை வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பட்டுள்ளன. மூன்று கல்வெட்டுகளில் ஆட்சியாண்டக் குறித்த தகவல் இல்லை.

Rare monuments of Rajendra Chola period! Discovery for the first time in Tamil Nadu!

இக்கல்வெட்டில் குன்றன் சா(த்தன்) என்ற பெயரில் இருவருக்கும், மருதன் செட்டி, ஞ்சக ஞெட்டி, கங்கை கொண்ட சோழ செட்டி, முத்தங் கஞ்சாறன் எனும் மும்முடி சோழ சிதிலட்டி, (பூ)லாங்குள(த்)தான், சிறப்பன் எனும் பெயர்கள் கொண்டவர்களுக்கும் நினைவுத்தூண் எடுப்பிக்கப்பட்டுள்ளது. இவை வணிகர்கள் மட்டுமின்றி வீரர்களின் நினைவாக நடப்பட்டிருப்பதை “ஸ்ரீ இராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு இருபத்து ஒன்பதாவது படை” என்று ஒரு கல்வெட்டு வெளிப்படுத்துகிறது.

செட்டி, ஞெட்டி ஆகிய சொற்கள் வணிகத்தொடர்பை உறுதிசெய்கின்றன. மேலும் ராஜேந்திர சோழரின் பெயரோடு கங்கைகொண்ட சோழ செட்டி, மும்முடி சோழ செட்டி என்று பெயர் சூட்டிக்கொண்டுள்ளதன் மூலம் வணிகர்களோடு கொண்டிருந்த தொடர்பை அறியமுடிகிறது. இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் இவ்வூர், சோழர் கால வணிகக்குழுவில் மிக முக்கிய பங்காற்றியிருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. சோழர் வரலாற்றில் இந்தக் கல்வெட்டுகள் முக்கிய இடம்பெறும் என்பதில் ஐயமில்லை.

வரலாற்று முக்கியத்துவமிக்க இக்கல்வெட்டைப் பாதுகாக்க கொன்னைப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் சி. செல்வமணி முழுமையான ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்துள்ளார். மேலும், முறைப்படுத்தி படியெடுக்கவும், தொடர் ஆய்வின்போதும் கொன்னைப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் தலைமையில் ஆசிரியர் சி. ஞானமணி, ச. நாராயணன், சி. பழனியப்பன், சே. முத்துப்பாண்டி உள்ளிட்ட கிராம மக்கள் ஒத்துழைப்பு நல்கினர்.