தமிழ்நாட்டில் பிறந்து கேரளாவில் குடியேறிய மலையாள எழுத்தாளர் ராமேசன் நாயர் எழுதிய குரு பௌர்ணமி என்ற கவிதைத் தொகுப்புக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளத்திலும், தமிழிலும் இலக்கியத்தரமாக எழுதக்கூடியவர் இவர். சிலப்பதிகாரத்தையும், திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இதையறிந்த கலைஞர், 2000மாவது ஆண்டு தமிழக அரசு சார்பில் அழைத்து பாராட்டியிருக்கிறார்.
கம்பராமாயணத்தை இப்போது மலையைளத்தில் மொழிபெயர்த்து வருகிறார். பாலகாண்டத்தில் 20 சதவீதம் மொழிபெயர்த்திருப்பதாக கூறும் இவர், கம்பனின் மொழி அழகை வேறு எந்த மொழியிலும் கொண்டுவர முடியவில்லை என்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அருகேயுள்ள குமாரபுரத்தில் பிறந்தவர் இவர். எஸ்.டி.ஹிந்துக் கல்லூரியில் பிஏ படித்தவர் இவர். இவரது முதல் கவிதை 12 ஆவது வயதில் வெளிவந்தது. 170 திரைப்படங்களுக்கு பாடல் எழுதிய இவர், ஜேசுதாஸ் உள்ளிட்ட பாடகர்களுக்காக 3 ஆயிரம் பக்திப் பாடல்களையும் எழுதிக் கொடுத்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் பிறந்து கேரளாவில் குடியேறி சாகித்திய அகாடமி விருது பெறும் மூன்றாவது நபராக ராமேசன் நாயர் கருதப்படுகிறார். ஏற்கெனவே, நீல பத்மநாபன், ஏ.மாதவன் ஆகியோர் தமிழ் படைப்புக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.