பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசுக்கு, ஆகஸ்ட் 7, 2023ஆம் தேதி மறக்கமுடியாத நாளாகிவிட்டது. ஆம், அன்றைய தினம்தான் மோடி அரசின் செயல்பாடுகளில், சுமார் 7.5 லட்சம் கோடி அளவிலான ஊழல்கள் குறித்த சி.ஏ.ஜி. அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மருத்துவக் காப்பீட்டுத் துறையில் நடந்துள்ள ஊழல்கள் ரமணா பட பாணியையும் மிஞ்சக்கூடியதாக உள்ளது!
ஆயுஷ்மான் பாரத் -பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற காப்பீட்டுத் திட்டத்தில் இணையும் ஒவ்வொரு பயனாளியின் குடும்பத்தினருக்கும் குறிப்பிட்ட விதிமுறைகளின்படி 5 லட்ச ரூபாய் அளவிலான மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கான நிதிப் பங்களிப்பில், ஒன்றிய, மாநில அரசுகள் 60:40 என்ற அளவில் பங்களிப்பு செய்கின்றன. மாநில அரசின் பங்களிப்பு இருந்தும் அதனை தனிப்பட்டு பிரதமரின் திட்டமாகக் காட்டுவதே தவறான விளம்பரமாகும்.
இத்திட்டத்துக்கான டேட்டா தளத்தை ஆய்வு செய்த சி.ஏ.ஜி., அதில் பயனாளிகளின் பெயர்கள், பிறந்த தேதி, சுகாதாரம் குறித்த கணக்குகள், பயனாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை என அனைத்தையும் ஆய்வு செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்தது. பல தகவல்கள் பொய்யாக, போலியாக ஏற்றப்பட்டிருந்தன. இதில் குறிப்பிடப்பட்டிருந்த மொபைல் எண்களைக் கொண்டு பயனாளர்களைத் தொடர்புகொள்ளவே முடியவில்லை.
* இத்திட்டத்தில் இணைவதற்கான தகுதியில்லாத குடும்பங்களை முறைகேடாக இணைத்திருந்த வகையில் மட்டுமே சுமார் 22.44 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந் திருப்பதாகக் கணக்கு வெளியிட்டுள்ளது சி.ஏ.ஜி.
* சுமார் 2.5 லட்சம் பயனாளர்களுக்கு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்ற தேதிக்குப் பின்னர் அறுவைச்சிகிச்சை நடந்ததாக தேதி குறிப்பிடப்பட்டுள்ளது! இந்த தில்லுமுல்லுவில் 1.79 லட்சம் பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். இந்த மோசடியில் அரசாங்கத்திடமிருந்து 300 கோடிக்குமேல் மருத்துவக்காப்பீடாகப் பெறப்பட்டுள்ளது!
* மருத்துவச் சிகிச்சைக்கான தொகையை க்ளைம் செய்யும்முன்பே அதற்கான தொகை அனுப்பப்பட்டு மோசடி நடந்திருக்கிறது!
* 45,846 மருத்துவக் காப்பீட்டு க்ளைம்களில், சம்பந்தப்பட்ட நோயாளி சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தேதி உள்ளது!
* ஒரே நோயாளி, ஒரே நேரத்தில் பல மருத்துவமனைகளில் சிகிச்சையிலிருந்ததாகவும் காட்டப்பட்டிருக்கிறது!
* 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவக் காப்பீட்டின்கீழ் சிகிச்சையளித்து மோசடி நடந்துள்ளது.
* போலியான ஆதார் எண் அல்லது பயன்பாட்டில் இல்லாத மொபைல் எண்களைப் பதிவு செய்துள்ளார்கள். உதாரணத்துக்கு, 9999999999 என்ற செல்போன் எண்ணில், மொத்தம் 7.49 லட்சம் பேரை இத்திட்டத்தில் இணைத் திருக்கிறார்கள்!
* அதேபோல், 8888888888 என்ற எண்ணைப் பயன்படுத்தி சுமார் 1.4 லட்சம் பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகக் காட்டப்பட்டுள்ளது! இன்னொரு போலியான மொபைல் எண் மூலமாக 96,000 பேர் வரை இணைக்கப்பட்டிருக்கிறார்கள்!
* அடுத்த மோசடி, "ரமணா' படத்தில் முக்கியமான காட்சியில், ஏற்கெனவே இறந்த ஒரு மனிதருக்கு சிகிச்சை அளிப்பதுபோல் ஒரு மருத்துவமனையில் நாடகமாடுவார்களே, அதனை நிஜத்தில் இத்திட்டத்தில் செய்திருக்கிறார்கள்! சிகிச்சையின்போதே 88,760 நோயாளிகள் இறந்துள்ளனர். அவர்களுக்காக மட்டுமல்லாது, "ரமணா' பட பாணியில், ஏற்கெனவே இறந்துவிட்ட 2,14,923 பேருக்கு மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கணக்கு காட்டி காப்பீட்டை க்ளைம் செய்துள்ளார்கள்! சத்தீஸ்கர், ஹரியானா, ஜார்கண்ட், கேரளா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இதுபோன்ற க்ளைம்கள் அதிகமாக செய்யப்பட்டுள்ளன!
* இத்திட்டத்தில் 11.04 லட்சத்துக்கு மேல் போலியான பயனாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகப் பலமுறை தேசிய சுகாதார ஆணையம் எச்சரிக்கைவிட்டும் அதுகுறித்து பெரிதும் கண்டுகொள்ளப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த மோசடி குறித்து தெரியவந்ததுமே ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலவும் இதுகுறித்து கேள்வி எழுப்பத் தொடங்கவும், பயனாளிகள் குறித்து சரிபார்க்க செல்போன் எண்களை ஆய்வு செய்வது தேவையில்லை என்றும், அது பயனாளிகளுக்கு அவசியமற்ற ஒன்று என்று ஒன்றிய அரசின் சுகாதார அமைச்சகம் சார்பில் மழுப்பலான பதிலைத் தந்திருக்கிறார்கள். அமைச்சகத்தின் பதில்கள் அனைத்தும் முழுப்பூசணியை சோற்றில் மறைப்பதாக இத்திட்டத்தில் நடந்துள்ள மோசடிகளை மறைப்பதுபோலவே உள்ளது. நேர்மையான அரசாக இருந்தால், சி.ஏ.ஜி. அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள முரண்பாடுகள், மோசடிகள் குறித்து நாடு முழுக்க தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். இத்திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழலை மறைக்கப் பார்ப்பதோடு, இத்தகைய மோசடிகள் தொடர்வதையும் வேடிக்கை பார்க்கிறது என்று வேதனையுடன் கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். மத்தியிலுள்ள அனைத்து புலனாய்வு அமைப்புகளும் ஒன்றிய அரசின் கைக்குள் இருக்கும் சூழலில், சி.ஏ.ஜி. அமைப்பு மட்டும்தான் ஓரளவு சுதந்திரமாகச் செயல்படுகிறது. அதன் குரலுக்கு மதிப்பளித்து விசாரணைக்கு உத்தரவிடுவதே நல்ல அரசுக்கு அழகு.
தெ.சு. கவுதமன்