Skip to main content

எதிரும் புதிருமாக இருந்தவர்கள் இன்று அருகருகே... விஜயகாந்த் - ராமதாஸ் சந்தித்த பின்னணி

Published on 14/03/2019 | Edited on 14/03/2019

 

2005ல் தேமுதிகவை தொடங்கிய விஜயகாந்த், பாமக கோட்டை என சொல்லி வந்த விருத்தாசலத்தில் 2006ல் தனித்து நின்று வெற்றி பெற்றார். பாமகவின் சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கோவிந்தசாமியை தோற்கடித்தார். அதிலிருந்து தேமுதிகவை கடுமையாக சாடி வந்தது பாமக. சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவதையும், தேர்தலில் நிற்பதையும் கடுமையாக விமர்சித்து வந்தது பாமக. 

 

ramadoss-vijayakath2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவை கடுமையாக விமர்சனம் செய்தது பாமக. அந்த தேர்தலில் பாமகவின் தோல்விக்கு பெரிதும் காரணம் தேமுதிக என கூறப்பட்டது. வடமாவட்டங்களில் பாமகவின் இடங்களை பறித்தது தேமுதிக. அதனைத் தொடர்ந்து நடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமகவும், தேமுதிகவும் இணைந்தன. அந்த தேர்தலில் பாமகவுடன் சுமூகமான உறவு தேமுதிகவுக்கு இல்லை. ராமதாஸ் - விஜயகாந்த் ஒரே மேடையில் பிரச்சாரமும் செய்யவில்லை. தேமுதிக, பாமக தொண்டர்களுக்கும் நல்ல சுமூகமான உறவு அப்போது இல்லை. 

 

ramadoss-vijayakath


அதனைத் தொடர்ந்து நடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் பாமக தனித்து நின்றது. மக்கள் நலக்கூட்டணியின் முதல் அமைச்சர் வேட்பாளராக உளூந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு இரண்டாம் இடத்தை பிடித்தார். 
 

தற்போது நடைபெறவுள்ள 2019 பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் முந்தி சென்று 7+1 வாங்கிய பாமக, அதிமுக தலைவர்களுக்கு தைலாபுரத்தில் விருந்து வைத்து கொண்டாடியது. மேலும், வட மாவட்டங்களில் தங்களுக்கு தொகுதிகளை கேட்டது. தேமுதிகவோ பாமகவைவிட அதிகம் சீட் வேண்டும் என்று அடம் பிடித்ததுடன் வடமாவட்டங்களையே குறிவைத்தது. இறுதியாக 4 தொகுதிகளை கொடுத்து தேமுதிகவை வலைக்குள் விழ வைத்தது அதிமுக.

 

ramadoss-vijayakathயார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என இறுதி முடிவு எடுக்க புதன்கிழமை மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணிக் கட்சிகள் அழைக்கப்பட்டிருந்தன. இதில் பாமக - தேமுதிக இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும், வாக்குகள் சிதறக்கூடாது என்றும், பாமக நிறுவனர் ராமதாஸை, உங்கள் கட்சி நிர்வாகிகள் சந்தித்தால் நன்றாக இருக்கும் என சுதீஷுக்கு அதிமுக ஆலோசனை வழங்கியது. 
 

அப்போது, ''நாங்கள் சென்று ராமதாஸை பார்த்தால் தேர்தலுக்கான சந்திப்பு என்பார்கள், விஜயகாந்தை சந்தித்து ராமதாஸ் உடல்நலம் விசாரித்தால் நன்றாக இருக்கும்'' என்று சுதீஷ் கூறியிருக்கிறார். அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி, ''இதுவும் நல்லதுதான் இருதலைவர்களின் சந்திப்பு நடந்தால்தான் இரு கட்சித் தொண்டர்களும் இணைந்து பணியாற்றுவார்கள். இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கோகுலஇந்திராவை அனுப்பி வைப்பதாக'' தெரிவித்துள்ளார். 
 

அதன்படி வியாழக்கிழமை காலை 11.10 மணிக்கு விஜயகாந்த் இல்லத்திற்கு சென்றனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி. அவர்களுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செய்தித் தொடர்பாளர் கோகுலஇந்திராவும் சென்றனர்.  
 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவிற்கே உண்மையான வெற்றி” - ராமதாஸ்

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
Ramadoss said that Real victory for PMK in Vikravandi by-election

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குவித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளார். இந்த நிலையில் இந்த தேர்தலில் பாமகவிற்கே உண்மையான வெற்றி என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணி 56,261 வாக்குகள் பெற்றிருக்கிறார். முடிவு எப்படி  இருந்தாலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பா.ம.க. தலைவணங்கி ஏற்கிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ஆளுங்கட்சி அதன் அத்துமீறலை  தொடங்கி விட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவிர மீதமுள்ள 33 அமைச்சர்களும், 125 க்கும் கூடுதலான சட்டப்பேரவை உறுப்பினர்களும் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு பணத்தையும், பரிசுப் பொருட்களையும் வெள்ளமாக பாயவிட்டனர். ஒவ்வொரு நாளும் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து அரிசி மூட்டை, மளிகை சாமான், வேட்டி  சேலை, தங்க மூக்குத்தி, தினமும் ரூ.300 முதல் ரூ.500 வரை பணம் என வாரி இறைக்கப்பட்டது. மது ஆறாக பாய்ந்தது. ஊருக்கு ஊர் பிரியாணி சமைத்து வாக்காளர்களுக்கு விருந்து வைத்தனர். நிறைவாக ஒவ்வொரு வாக்குக்கும் ரூ.3000 வரை பணம் வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.10,000 வரை திமுக வழங்கியது.

அந்த வகையில் திமுகவின் வெற்றி என்பது அரிசி மூட்டைகளுக்கு கிடைத்த வெற்றி, டோக்கனுக்கு கிடைத்த வெற்றி, வேட்டி & சேலைகளுக்கு கிடைத்த வெற்றி, தங்க மூக்குத்திகளுக்கு கிடைத்த வெற்றி, மளிகை சாமான்களுக்கு கிடைத்த வெற்றி, வெள்ளமாக பாய விடப்பட்ட மதுவுக்கு கிடைத்த வெற்றி, திமுக சார்பில் செலவழிக்கப்பட்ட ரூ.250 கோடிக்கு கிடைத்த வெற்றி. இவை அனைத்துக்கும் மேலாக விக்கிரவாண்டி தொகுதிக்கான தேர்தல் அதிகாரிகளும், காவல் அதிகாரிகளும் திமுகவின் தொண்டர் அணியினராகவே மாறி, திமுகவின் தேர்தல் விதிமீறல்களை வேடிக்கைப் பார்த்தது மட்டுமின்றி, அனைத்து அத்துமீறல்களுக்கும் துணை நின்றார்கள். அந்த வகையில் இது திமுகவும், தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையினரும் அமைத்திருந்த கள்ளக் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி.

மறுபுறத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மக்களை மட்டுமே நம்பி களத்தில் இறங்கியது. பாட்டாளி மக்கள் கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் வீடு வீடாக சென்று மக்களைச் சந்தித்து திமுக அரசின் மக்கள்விரோத செயல்பாடுகள் குறித்தும், சமூக அநீதி குறித்தும் மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தனர். அதைக் கூட தடுக்கும் வகையில் மக்களை அழைத்துச் சென்று பட்டிகளில் அடைத்து வைத்தனர். இத்தனை அடக்குமுறைகளையும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணி 56,255 வாக்குகளை  குவித்திருக்கிறார். இது 2024 மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு கிடைத்த 32,198 வாக்குகளை விட  75 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுங்கட்சி சார்பில் பணமும், பரிசுகளும் வாரி இறைக்கப்பட்ட போதிலும், அவற்றை புறக்கணித்து விட்டு  56,261 வாக்காளர்கள் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்திருப்பது ஜனநாயகத்திற்கும், பா.ம.க.வின் மக்கள் பணிக்கும் கிடைத்த வெற்றி ஆகும். அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் உண்மையான வெற்றி பாட்டாளி மக்கள் கட்சிக்கு தான் கிடைத்திருக்கிறது. பணத்தை வாரி இறைத்து திமுக பெற்ற வெற்றி தற்காலிகமானது. 2026 தேர்தலில் பா.ம.க. மாபெரும் வெற்றியை பெறுவது உறுதி.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு  56,261 வாக்குகள் பெற்ற பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விக்கிரவாண்டி தேர்தலில் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பா.ம.க. மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், களப்பணி ஆற்றிய பா.ம.க மற்றும் கூட்டணி கட்சிகளின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'அதிமுக இணையாமல் வெற்றி சாத்தியமில்லை' - ஓபிஎஸ் பேட்டி

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
'Victory is not possible without ADMK alliance'-OPS interview

அதிமுக ஒன்றிணையாமல் வெற்றி சாத்தியமில்லை என  முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசுகையில், 'விக்கிரவாண்டி தொகுதியில் இரண்டு இலைகளுடன் கூடிய மாங்கனி இருக்கிறது என வலியுறுத்திச் சொல்லி இருக்கிறேன். அதுதான் விக்கிரவாண்டியில் வெற்றி பெறப் போகிறது. அதிமுக என்பது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதாவும் தொண்டர்களை வைத்து இதை மாபெரும் இயக்கமாக உருவாக்கினார்கள். உறுதியாக ஒரு தொண்டன் அதிமுகவின் தலைமையை ஏற்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சரி செய்யாவிட்டால் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஓபிஎஸ் ஒருபோதும் அதிமுகவிற்கு உண்மையாக இருந்தது கிடையாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு, ''நேற்று இதுகுறித்து நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறேன். இதற்கு மேல் விளக்கம் கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. ஏனென்றால் கட்சியின் நலன் கருதிப் பேசாமல் இருக்கிறேன். அவரைப்போல நான் தெனாவெட்டாகவோ, சர்வாதிகாரமாகவோ பேச மாட்டேன் என்பது நாட்டு மக்களுக்கும், கட்சித் தோழர்களுக்கும் தெரியும். இந்தச் சூழ்நிலையில் கட்சி இணைப்பதுதான் ஒரே வழி. நடைபெற இருக்கின்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்குப் பின்னர் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் கட்சி இணையாமல் சாத்தியமில்லை'' என்றார்.