Skip to main content

"பாமக போராட்டத்தில் வன்முறை... சுய சாதி பெருமை என்பது ஒரு மனநோய்" -ராஜூவ் காந்தி காட்டம்!

Published on 03/12/2020 | Edited on 03/12/2020
h

 

 

20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு சில தினங்களுக்கு முன்பு பட்டாளி மக்கள் கட்சி சார்பாக சென்னையில் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் கலந்துகொள்ள சென்னை வந்த அக்கட்சி தொண்டர்கள் காவல்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் கோபமான பாமக தொண்டர்கள் ஓடும் ரயில் மீது கல்லெறிந்தார்கள். இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில் இதுதொடர்பாக நம்முடைய கேள்வி ஒன்றுக்கு வழக்கறிஞர் ராஜூவ் காந்தி விரிவாக பதில் அளித்துள்ளார். அவரின் பதில் வருமாறு,

 

சென்னையில் சில தினங்களுக்கு முன்பு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி தராத காரணத்தால் போராட்டம் முழுமையாக நடைபெற முடியாமல் போனது. இந்த போராட்டத்தில் ரயில் மீது கல்லெறியப்பட்டது. இதுதொடர்பாக நீங்கள் ட்விட்டரில் கடுமையான வார்த்தைகளுடன் கருத்து தெரிவித்திருந்தன. இந்த போராட்டத்தை நீங்கள் தேவையில்லாத ஒன்று என்று நினைக்கிறீர்களா? 

இடஒதுக்கீட்டிற்கான நோக்கம் சாதி பெருமையை பேசுவதல்ல. இட ஒதுக்கீடு என்பது சாதியை பெருமைபடுத்துவது என்பது அல்ல. அப்படி செய்தால் இட ஒதுக்கீட்டிற்கான நோக்கமே சிதைந்து விடும். பழைய காலம் தொட்டே மக்களை ஒரு குறிப்பிட்ட பிரிவினராக பிரித்து இந்த சமூகம் நடந்தால் குற்றம், படித்தால் தவறு, நீர் எடுப்பது குற்றம் என்று பல்வேறு வகையில் குறிப்பிட்டு மனுநீதியின் அடிப்படையில் பிரித்து வைத்திருந்தனர். மனுநீதியை வைத்து ஒரு அநீதி செய்யப்பட்ட இடம்தான் இந்த இந்திய மண். அப்படி இருந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட சூத்திரன் என்று சொல்லக்கூடிய பெருவாரியான மக்கள், ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களால் அவர்களுக்கு கிடைக்கும் உரிமைகள் மறுக்கப்படுவதை பார்த்து ஆங்கிலேயர்கள்தான் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தனர். பிறப்பால் சாதி பார்க்கப்படுகிறது, இதன் மூலம் உயர்வு தாழ்வு கற்பிக்கப்படுகிறது, இதற்கு ஒரு சமூக நீதி வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். எனவே சமூகத்தில் தொடர்ந்து பின்னுக்கு தள்ளப்பட்டு கொண்டிருந்தவர்களை முன்னோக்கி அழைத்து வரவே இடஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. 

 

சமூகநீதி குறித்த தெளிந்த பார்வை அனைவருக்கும் வர வேண்டும். சமூக நீதி பார்வையில் அய்யா ராமதாஸ் அவர்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் அதை தங்கள் கட்சியின் தொண்டர்களிடம் கொண்டு சேர்த்துள்ளாரா என்பதை தெளிவாக பார்க்க வேண்டும். ராமதாஸ்க்கு இருக்கிற புரிதல் அவருடைய அன்பு மகன் அன்புமணிக்கு இருக்கிறதா என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது. ஆனால் பெருங்களத்தூரில் நேற்று நடந்த சம்பவம் என்று நமக்கு பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. சாதாரணமாக பேருந்து மறியல், தொடர்வண்டி மறியல் என்பது ஒரு அடையாளப் போராட்டம். அதில் வன்முறை வருவது என்பது சில நேரங்களில் நடக்கிறது. அதில் அனைவரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். ஆனால் அங்கு அவர்கள் போடுகின்ற கோஷம் என்பது நம்மை யோசிக்க வைக்கிறது. அங்கே வந்த இளைஞர் வன்னியருக்கான உரிமை என்பதை தாண்டி வன்னிய சாதி பெருமை என்பதைத்தான் முன் எடுத்தார்கள். கழுத்தில் மஞ்சள் துண்டை கட்டிக்கொண்டு வன்னியருனா யாரு, வன்னியருனா வெயிட்டு என்று சுய சாதி பெருமையை பேசினார்கள். எது எங்கே எதிரொலிக்கிறது என்றால் திருவண்ணாமலையில், விழுப்புரத்தில், கடலூரில் இருக்கிற ஒடுக்கப்பட்ட மக்களிடம் வன்னியர் பெரியவனா, அல்லது பறையர் பெரியவனா என்ற அளவில் இது நிர்மாணிக்கப்படுகிறது.

 

எந்த சாதியால் தாங்கள் ஒதுக்கப்பட்டு நீங்கள் சத்ரியன், நீங்கள் இதுக்குதான் லாய்க்கு, நீங்கள் படிக்கக்கூடாது, வேலைக்கு வரக்கூடாது, எங்கள் சாலையில் நடக்கக்கூடாது, கோயிலுக்குள் வரக்கூடாது என்று கொடுமைக்குள்ளான நீங்கள், அதை எதிர்த்து குரல் கொடுக்காமல் மீண்டும் நீங்கள் எந்த கொடுமையில் இருந்து வெளிவே வந்தீர்களோ அதே போல் மற்றொரு சமூகத்தினரை நடத்த முயல்வது எவ்விதத்தில் சரியாக இருக்கும். இதில் சமூக நதி துளி அளவேனும் இருக்கிறதா?  சாதிய பெருமைக்கான நீதி மட்டுமே இடஒதுக்கீட்டுக்கு தீர்வல்ல. இது ஒரு மனநோய். அனைவருக்கு இடஒதுக்கீடு வேண்டும், அனைத்து சாதியினருக்கும் வேண்டும், இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் என் சாதி உயர்ந்தது, உன் சாதி மட்டம் என்று கூறுவது என்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.