Skip to main content

பசி என்னும் தீயை அணைப்போம்! -ரஜினி பெயரில் ஒரு அன்னதான மையம்!

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

‘மண்ணுலகத்தில் உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒரு சிறிதெனினும் கண்ணுறப் பார்த்தும், செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன்.’ என்ற ராமலிங்க வள்ளலார் “இறையருளைப் பெறுவதற்கான ஆதாரம் அன்புதான். அன்பு மனதில் ஊற்றெடுக்க வேண்டுமென்றால், எல்லா உயிர்களையும் நேசிப்பது ஒன்றுதான் வழியாகும். அன்னதானம் செய்பவர்களை கடவுளின் அம்சம் என்றே சொல்ல வேண்டும். பசியானது புத்தியை தடுமாறச் செய்யும். பசி என்னும் தீயை அன்னத்தால் அணைக்க வேண்டும். அன்னமிடுபவர்கள் பெருங்கருணையாளர்கள் என்றால் மிகையில்லை.” என்று தெளிவுபடச் சொல்கிறார். 

 

rajini food providing centre


வள்ளலாரின் கருணை உள்ளம் குறித்து இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்றால், வள்ளலாரின் படத்தோடு, மகா அவதார் பாபாஜி மற்றும் ரஜினிகாந்த் படங்களையும் பேனரில் இடம்பெறச்செய்து, ரஜினி அன்னதான மையம் என்ற பெயரில், ரஜித் பாலாஜி என்பவர் சிவகாசியில் தொடர்ந்து அன்னதானம் செய்துவருவதுதான்.  
 

சிவகாசி அரசு மருத்துவமனையில் காலையில் நோயாளிகளுக்கு மூலிகைக் கஞ்சி கிடைக்கச் செய்கிறார். சிவகாசியில் தனக்குச் சொந்தமான இடத்தில் அன்னதானமும் செய்துவருகிறார். ‘இது எப்படி உங்களால் முடிகிறது?’ என்று கேட்டால், “தமிழகத்தில் மூன்று இடங்களில் ஓட்டல் தொழில் செய்கிறேன். அதனால், அரிசி, பருப்பு போன்றவை நிறைய வருகிறது. அதனைக்கொண்டு உணவு தயாரிக்கிறோம்.  சாப்பாடுகூட கிடைக்காமல் கஷ்டப்படுபவர்களைக் கண்டறிந்து, அன்னதானம் நடக்கும் இடத்துக்கு அழைத்து வருகிறோம். ஆரம்பத்தில் இப்படிச் செய்தோம். இப்போது, தானாகவே மக்கள் வந்துவிடுகிறார்கள். ரஜினி மக்கள் மன்றத்தில் நான் எந்தப் பொறுப்பிலும் இல்லை. 
 

ரஜினி பெயரில் இந்த நல்ல காரியத்தைச் செய்துவருவதால், ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் இவரை வாழ்த்தியிருக்கிறார். வாழ்க்கையில் எவ்வளவோ சம்பாதிக்கிறோம். நமக்காக எவ்வளவோ செலவு செய்கிறோம்.  ‘பசி போக்குவதே ஜீவகாருண்யம்’ என்று கூறிய வள்ளலார்,  ‘எல்லா உயிர்களையும் தன் உயிர்போல் பாவித்து, சம உரிமை வழங்குவோரின் மனதில் இறைவன் வாழ்கிறான்.’ என்று கூறியதோடு, வாழ்ந்தும் காட்டினார். அவர் வழியில் என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.” என்றார் தன்னடக்கத்தோடு. 
 

கடவுள் உள்ளமே கருணை இல்லமே! ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்கிறது புறநானூறு. 

 

 

Next Story

வாக்காளர் அட்டை இங்கே! என் ஓட்டு எங்கே? - வாக்காளர் ஆத்திரம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
 Sivakasi, voter panic due to inability to vote
சாந்தி - சங்கரன்

தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்களில், ஒரு கோடியே 74லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை. மொத்தத்தில், அதி முக்கிய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றாத வாக்காளர்கள் 28 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் யார் யாருக்கு என்னென்ன  கஷ்டமான சூழ்நிலையோ தெரியவில்லை. ஆனாலும், வாக்களிக்கும் முக்கியத்துவத்தை உணராமல், சோம்பேறித்தனமாக வீட்டிலோ, அலட்சியமாக வெளியூர்களிலோ இருந்தவர்கள், அனேகம் பேர்.

சிவகாசியில் வாக்குச்சாவடி ஒன்றிலிருந்து நம்மை அழைத்த சங்கரன், தன்னையும் தன் மனைவி சாந்தியையும் வாக்களிக்க அனுமதிக்காததால், கொதித்துபோய்ப் பேசினார்.  “இத்தனை வருடங்களாக ஓட்டு போட்டுட்டு இருக்கேன். வாக்காளர் அடையாள அட்டை எங்ககிட்ட இருந்தும், இந்தத்தேர்தல்ல உங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொன்னா, இது அக்கிரமம் இல்லியா? இதெல்லாம் எப்படி நடக்குது? ரொம்பக் கொடுமையா இருக்கு. எங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொல்லி, அங்கேயிருந்த சிவகாசி மாநகராட்சி அலுவலர்களைப் பார்க்கச் சொன்னாங்க.

 Sivakasi, voter panic due to inability to vote

மூணு மாசத்துக்கு முன்னால லிஸ்ட்லசெக் பண்ணும்போது எங்க பேரு இருந்துச்சுன்னு நான் சொன்னேன். லிஸ்ட்ல உங்க பேரு இல்ல. போன் நம்பர் தப்பா இருக்குன்னாங்க. அப்புறம் இன்டர்நெட்ல EPIC நம்பரை போட்டுப் பார்த்து, எலக்‌ஷன் கமிஷன்ல என் பேரு இருக்கிறத காமிச்சதும், அப்படியான்னு சொல்லி, ஓட்டு போடவிட்டாங்க. ஆனா..என் வீட்டுக்காரம்மா சாந்திக்கு ஓட்டு இல்லைன்னு சாதிச்சிட்டாங்க. அவங்க ரொம்பவும் மனசு வேதனைப்பட்டு, நூறு சதவீதம் வாக்களிப்போம்னு போர்டு வைக்கிறாங்க. ஆனா.. ஓட்டு போட வந்தவங்களுக்கு ஓட்டு இல்லைங்கிறாங்க. அப்படின்னா.. நான் வச்சிருக்கிற வாக்காளர் அடையாள அட்டைக்கு என்ன மதிப்புன்னு மொதல்ல சத்தம் போட்டாங்க. அப்புறம் அழுதுட்டாங்க.” என்றார் ஆதங்கத்துடன்.

 Sivakasi, voter panic due to inability to vote

இதே சிவகாசியில், சிவகாசி மாநகராட்சியின் முதலாவது வார்டு திமுக கவுன்சிலர் செல்வத்தின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. சென்னை சாலிகிராமத்தில் வாக்களிக்கச் சென்ற நடிகர் சூரியின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அவராலும் வாக்களிக்க முடியாமல் போனது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் வாக்களிக்க வராத கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுப்போன சாந்தி, நடிகர்சூரி போன்றோரும் நிறையப்பேர் இருக்கிறார்கள். வாக்களிப்பதில் உள்ள குறைபாடுகளுக்குத் தீர்வுகாண முடியாத நிலையில் உள்ளது டிஜிட்டல் இந்தியா என்று கடுமையாக சாடுகின்றனர் சமூக ஆர்வலர்கள். 

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.