Skip to main content

ராஜீவ்காந்தியின் கடைசி நிமிடங்கள் - உடனிருந்த ஜெயந்தி நடராஜன் 1991இல் கொடுத்த பேட்டி!

Published on 21/05/2019 | Edited on 21/05/2019

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் 28-ஆம் ஆண்டு  நினைவு தினம் இன்று நாடுமுழுவதும் அனுசரிக்கப்பட்டுவருகிது. அன்று அவர் உயிரிழந்த கடைசி தருணம் வரை அவர் உடனிருந்த ஜெயந்தி நடராஜன் 1991-ல் அளித்த உருக்கமான பேட்டி அந்நாளில் நம் நக்கீரனில் பிரசுரமானது அது தற்போது மீண்டும் உங்களுக்காக...

 

ராஜீவ்காந்தியின் கடைசி மரண நிமிடங்கள் வரை உடனிருந்து அவராலேயே உயிர் தப்பிய ஜெயந்தி நடராஜன் கதறி அழுதபடி நேரில் கண்டதை பேட்டியாக அளித்தார்.

 

jeyanthi natarajan

ஜெயந்தி நடராஜன்



ஸ்ரீபெரும்புதூரை  நோக்கி நாங்கள் பயணமாவதற்கு முன்பு ராஜீவின் பத்திரிகை ஆலோசகர் சுமன் துபே, ’இரண்டு வெளிநாட்டு பெண் நிருபர்கள் ராஜீவை பேட்டி எடுக்க விரும்புகிறார்கள், இதை அவரிடம் தெரிவியுங்கள்’ என்று கூறினார். நானும் நந்தம்பாக்கத்தில் அவரிடம் விவரத்தை கூறினேன். அவர் ’பூந்தமல்லி நிகழ்ச்சி முடிந்த பின் காரில் ஏற்றிவிடுங்கள். காரிலேயே பேட்டி தருகிறேன்’ என்றார். அதன்படி அந்த நிருபர்கள் காரிலேயே பேட்டி எடுத்தனர்.


கார் ஸ்ரீபெரும்புதூரை அடைந்தது. முதலில் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் காரில் ஏறி மேடைக்கு அருகில் இறங்கினார். நானும் காரிலிருந்து இறங்கி ராஜீவுடன் சேர்ந்து நடந்து சென்றேன். திடீரென ஞாபகம் வந்தவராகத் திரும்பிய ராஜீவ் ''அந்த பெண் நிருபர்கள் எங்கே? அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொள்ளாதவாறு நீங்கள் கவனித்து கொள்ள வேண்டும்” என்றார்.


நான் உடனடியாக நகரவில்லை. ''ஜெயந்தி... வெளிநாட்டு நிருபர்கள், அவர்களை நாமதான் பத்திரமா பாதுகாக்கணும் புறப்படுங்க...'' என்றார். வேறு வழியில்லாமல் திரும்பி மெதுவாக நடந்தேன். எட்டு அடிதூரம்தான் நடந்திருப்பேன் ''டமார்'' என்ற ஒரு பெரும் சத்தம் என் காதில் கேட்டது. திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன். ராஜீவ்காந்தி நின்றிருந்த இடத்தில் தீப்பிழம்பும் புகையுமாக இருந்தது.

 

 

rajiv gandhi's last minute

குண்டு வெடிப்பில் ராஜீவ் காந்தி உடல்



போலீஸ் அதிகாரிகளும், பொதுமக்களும் அங்கும் இங்குமாக ஓடினர். ஒன்றும் புரியாமல் நான் ஸ்தம்பித்து நின்றேன். திடீரென ஒரு கதறல் ''ராஜீவ் காந்தி எங்கே...''

சடாரென அந்த இடத்திற்கு வந்தேன். போலீசார் தடுத்தும் கேட்காமல் ராஜீவ் இருந்த இடத்திற்கு ஓடினேன். நான் முதலில் பார்த்தது  மெய்க்காப்பாளர் குப்தாவைத்தான். நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர் உயிர் பிரிந்தது. ராஜீவ் காந்தியை தேடினேன். ஒரு உடலின் தலை முடியை பார்த்தவுடன் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. மெல்ல புரட்டிப்பார்த்தேன். காலில் போடப்பட்டிருந்த ஷூவில் இருந்த 'லோட்டா' என்ற எழுத்தை பார்த்தவுடன் அதிர்ந்து போனேன்.

 

rajiv gandhi last press meet

கடைசி செய்தியாளர் சந்திப்பு



காரணம் ராஜீவை விமானநிலையத்தில் சந்தித்தபோது அவரின் ஷூவில் அந்த எழுத்துக்களைப் பார்த்தேன். ராஜீவின் உடல்தான் என்று அறிந்த நான் 'அய்யோ' என்று அலறினேன். மூப்பனார் பக்கத்தில் ஓடி வந்தார், அவரும் கதறி அழுதார்.”

கடைசியில், ”எங்கள் உயிர் மூச்சான உத்தமமானவர், இப்படி அரசு ஆஸ்பத்தரி சவக்கிடங்கில் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதே'' என்று நம்மிடம் பேசும் போதே கதறி அழுதார் ஜெயந்தி நடராஜன்.