கடந்த வாரம் வாரணாசியில் பிரதமர், இளையராஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்ற காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழை வளர்க்க பாஜக எடுத்த அடுத்தகட்ட முயற்சி என்று பாஜக தலைவர்கள் பலரும் இதுதொடர்பாக சிலாகித்து வருகிறார்கள். ஆனால் தமிழக முதல்வர் உள்ளிட்ட யாரும் இல்லாத நிலையில் இது தமிழை வளர்க்க நடத்தப்பட்ட விழாவா இல்லை பாஜக அரசியல் செய்ய வேண்டும் என்ற காரணத்துக்காக நடத்தப்பட்ட விழாவா என்ற கேள்வியைத் தமிழ் அறிஞர்கள் பலரும் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் மருத்துவர் காந்தராஜ் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
உ.பி-யில் காசி தமிழ்ச் சங்கமம் என்ற நிகழ்ச்சி பிரதமர் தலைமையில் மிகப் பிரபலமாக நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் தமிழ் இந்தியாவில் நீண்டகாலம் பேசிவருகின்ற மொழி, அனைவரும் தமிழைக் கற்க முயல வேண்டும், எதிர்காலத்தில் தமிழை வளர்க்க தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்தப் பேச்சை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழை வளர்க்க நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த விழாவில் யார் யார் எல்லாம் கலந்துகொண்டார்கள். பிரதமர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா, உ.பி முதல்வர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா? இளையராஜா தமிழர்தான். இவருக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. திருவாசகம் பாடினாரே என்றால் அதெல்லாம் இப்போது அவருக்கு ஞாபகமாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. இவ்வளவு பெரிய தமிழ்ச் சமூகத்திலிருந்து நான்கு பேர் கூட தமிழ்நாட்டிலிருந்து வரவில்லையே ஏன்? இவர்கள் தமிழை எதற்காக வளர்க்கிறேன், வளர்க்கிறேன் எனக் கூக்குரல் இடுகிறார்கள் என்பது நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான செய்தியாக இருக்கிறது.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல்காந்தி தமிழ்நாட்டில் எந்த குட்டிக்கரணம் போட்டாலும் உங்களால் வெற்றிபெற முடியாது என்று பாஜகவை பார்த்துக் கூறினார். இது அமித்ஷா மற்றும் மோடியின் பார்வைக்குச் சென்றதை அடுத்து அவர்கள் தமிழ்நாடு மீது தனிக்கவனம் செலுத்தி வருகிறார்கள். அதன் ஒரு கட்டமாக மாதம் ஒருமுறை தமிழகம் வந்து ஆங்காங்கே விழாக்களில் பங்கெடுத்து தமிழ் உலகில் சிறந்த மொழி, மூத்த மொழின்னு கூறிவிட்டு ஒரு திருக்குறளை சொல்லிவிட்டு போறாங்க. நாங்களும் தமிழை காப்பாத்துறோம்ன்னு தற்போது இவர்கள் காசி தமிழ்ச் சங்கமம்னு நிகழ்ச்சி நடத்துறாங்க.
ஆனால் அதிலேயும் பாருங்க தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் தமிழ் மட்டும்தான் தமிழ், சங்கமம் கூட வட மொழிதான். இந்த லட்சணத்தில்தான் இவர்கள் தமிழை வளர்க்கிறார்கள். தமிழை வளர்க்கப் போகிறேன், தமிழை வளர்க்கப் போகிறேன் என்று சொல்கிறார்களே எப்படி என்று இதுவரை ஏதேனும் கூறியிருக்கிறார்களா? அறிவியல் பூர்வமாகத் தமிழை வளர்ப்பேன் என்கிறார்களா இல்லை ஆன்மீக ரீதியாகத் தமிழை வளர்ப்பது பற்றிப் பேசுகிறார்களா என்று எதுவுமே இவர்கள் கூறுவது இல்லையே. அதைத்தானே நாம் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் தமிழை வளர்க்கப் பாடுபட வேண்டும் என்று கூறியுள்ளதாக நிறையப் பேர் பேசுகிறார்கள். அவருக்கு மிக்க நன்றி, ஆனால் அதை அவர் சொல்லியவாறு நடைமுறைப்படுத்த வேண்டும். நாடாளுமன்றத்தில் தமிழில் பேசலாம், மொழிபெயர்ப்புக்கு ஆவண செய்யலாம், தமிழை இந்தியா முழுவதும் நடைபெறும் தேர்வுகளில் பயன்படுத்தலாம் என அறிவித்து அதை உறுதிப்படுத்த வேண்டும். அதைவிட்டுவிட்டு வெறும் வாயில் முழம் போடக்கூடாது. ஆனால் அவர்கள் வாயில் மட்டுமே தமிழை வளர்ப்பார்கள் என்று அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் அவர்கள் வாயை வைத்துத்தான் இன்றைக்கு இந்த இடத்திற்கே வந்துள்ளார்கள்.