புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தமிழ் வேந்தனை நக்கீரன் சார்பில் சந்தித்து பேட்டி கண்டோம். அப்போது அவர் புதுச்சேரி அரசியல் நிலை குறித்தும், தங்களது கட்சி குறித்தும் நக்கீரனிடம் பகிர்ந்துகொண்டதை இங்குக் கேள்வி பதிலாகத் தொகுத்துள்ளோம்...
புதுச்சேரியில் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருக்கிறதாகக் கூறப்படுகிறது, இதற்கெல்லாம் என்ன தீர்வு இருக்கிறது? இது தொடர்பான வாக்குறுதி உங்களிடம் இருக்கிறதா?
வாக்குறுதியே கிடையாது.. நிறைவேற்றிக் காட்டுவோம். சட்ட ஒழுங்கு பிரச்சனை நிறைய இருக்கிறது. காவல்துறையின் கை கட்டப்பட்டுள்ளது. புதுச்சேரி ரவுடிகளின் கோட்டையாக உள்ளது. யார் உயிருக்கும் பாதுகாப்பில்லை. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கம் அதிகமாக இருக்கிறது. சமீபத்தில் கூட சிறுமி படுகொலை செய்யப்பட்டார். மனதை உருக்கிய சம்பவம் அது. ஒரு சிறுமியை 54 வயது பெரியவர் ஒருவரும் 19 இளைஞர் ஒருவரும் சேர்ந்து வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ளனர். அவர்கள் தன்னிலை மறந்து கஞ்சாவிற்கு அடிமையானதால் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
தமிழ்நாட்டிலிருந்துதான் புதுச்சேரிக்குள் கஞ்சா வருகிறது. தமிழகத்தில் 10 வருடம் அதிமுக ஆட்சி இருந்தத போது இது போன்று ஏதாவது சம்பவம் நடந்ததா? வடமாநிலத்திலிருந்து தமிழநாட்டிற்கு கஞ்சா வருகிறது; அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வருகிறது. அதனைக் கண்டிப்பாகத் தடுக்க வேண்டும்; தற்போது உள்ள ஆட்சியாளர்கள் தடுக்க தவறிவிட்டார்கள். கட்டப்பட்டுள்ள காவல்துறையின் கையை அவிழ்த்துவிட்டால்தான் தடுக்கமுடியும். இதைப்பற்றியெல்லாம் பாஜகவிற்கு எந்தக் கவலையும் இல்லை. உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு வரவில்லை. அவர்கள் என்ன தப்பு செய்தார்கள்? ஏன் வரவில்லை? முதல்வர் ரங்கசாமி வரவில்லை. நிவாரணம் கொடுத்தால் போதுமா? இன்றைக்கு அந்தச் சிறுமி உயிரோடு இருந்திருந்தால் வருங்காலத்தில் ஒரு முதல்வராகவோ, ஆட்சியராகவோ ஆகியிருப்பார்.
எல்லாம் செய்துவிட்டு நிவாரணம் கொடுத்துட்டா முடிஞ்சுடுமா? யாருக்குச் சார் உங்க பணம் வேணும். ஏழைகளுக்குச் சம்பாரிக்கும் திறமை இருக்கிறது. நீங்க என்ன எங்களுக்குப் பணம் தருவது. உங்கள் பணம் எங்களுக்கு வேண்டாம். எங்களைப் படிக்க விடுங்க. ஒருகாலத்தில் கல்வியில் பாண்டிச்சேரி எங்கையோ இருந்தது; ஆனால் இன்று இந்தியாவிலேயே பின் தங்கியுள்ளது. இவர்கள் கல்விக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறது இல்லை.
ஒருபக்கம் முதல்வர் ரங்கசாமி பாஜகவுடன் கூட்டணி, மறுபக்கம் வைத்தியலிங்கம் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி இப்படி இருவரும் பலமான கூட்டணி அமைத்ததால் அதிமுக தனித்து விடப்பட்டுள்ளதா?
ரங்கசாமி - பாஜக ஒரு பலமான கூட்டணி என்று கூறுவது தவறு. ரங்கசாமியை பாஜக சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். எங்கள் முதல்வர் ஒரு கூண்டு கிளிபோன்று உள்ளார். அவரை டார்ச்சர் பண்றாங்க பாஜக. கொரோனா சிகிச்சையின் போது முதல்வர் ரங்கசாமி மருத்துவமனையில் இருந்தபோது, பாஜக மூன்று எம்.எல்.ஏக்களை தேர்ந்தெடுத்துவிட்டது. ரங்கசாமியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவரது கட்சி தொண்டர்களே அதிருப்தில் இருக்காங்க. புதுச்சேரியே ஒரே ஆர்.எஸ்.எஸ் மயமா மாறிவிட்டது. அதை மாற்றவேண்டும். இளைஞர்கள் ஒன்றாகச் சேர்ந்து அதனை மாற்றிக்கொண்டிருக்கிறோம்.
வைத்திலிஙகம் இந்தியா கூட்டணி பலமான கூட்டணி கிடையாது. கடந்த தேர்தலில் வைத்திலிங்கம், ஜான்குமார் உள்ளிட்ட 9 எம்.எல்.ஏக்கள் காங்கிரசில் இருந்தார்கள். அன்றைக்குக் காங்கிரஸ் பேரியக்கம் ஒன்றாக இருந்தது. அதிலிருந்து பிரிந்துவந்தவர்கள்தான் தறபோது பாஜகவில் இருக்கின்றனர். அப்படியிருக்கும் போது இந்தக் கூட்டணி எப்படி பலமான கூட்டணி என்று சொல்ல முடியும். இவர்கள்தான் பிரிந்துவந்துட்டார்களே என்று பார்த்தால் அதனால் பாஜகவிற்கு பலம் கிடையாது.
மக்கள் மாறி மாறி கட்சி தாவுபவர்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நமச்சிவாயத்திற்கு 54 வயது இருக்கும்.அதற்குள் 7 கட்சி மாறிவிட்டார். எனக்கு 34 வயதாகிறது. நான் ஒரு கட்சி அதிமுகவில்தான் இருக்கிறேன்.
நமச்சிவாயம் ரங்கசாமியின் நாற்காலிக்கு ஆசைப்பட்டார் என்று கூறப்பட்டது, இதனால் இருவருக்கும் உள்ளே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. ஆனால் தற்போது ரங்கசாமி நமச்சிவாயத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
நான் முதலே கூறியதுபோல் எங்க முதல்வர் ரங்கசாமியைக் கூண்டுக் கிளியாக மாற்றிவிட்டனர். நமச்சிவாயம் நடுவில் நிற்கிறார். முதல்வர் ரங்கசாமி ஒரு ஓரமாக நின்றுகொண்டிருக்கிறார். பார்ப்பதற்கே பாவமாக இருக்கிறது. என்.ஆர்.காங்கிரஸ் எங்களுடன் கூட்டணியிலிருந்த வரைக்கும் நல்ல கட்சி. அதிமுக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி என்றாலே மக்களுக்குப் பிடிக்கும். இருகட்சிகளும் கூட்டணி என்று அறிவித்துவிட்டாலே அவர்கள்தான் ஆளும் கட்சியாக மாற்றிவிடுவார்கள். ஆனால் பாஜக உள்ளே வந்த பிறகு முதல்வர் ரங்கசாமிக்கு அதிகமான இழி பெயர்கள் வந்துள்ளது. அவரால் மக்களுக்கு எதுவும் நல்லது செய்யமுடியவில்லை, அப்படி இருக்கும் போது கூட்டணியில் இன்று தொடர்கின்றனர். அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. உதாரணமாக மாணவர்களுக்கு இலவச சைக்கிள் கொடுத்ததில் ஊழல் நடந்துள்ளது. இப்படிப் பல சம்பவங்கள் நடந்துள்ளது. இதனை எதிர்த்து அதிமுக மட்டுமே குரல்கொடுத்துள்ளது. மற்ற யாரும் கண்டுகொள்வதில்லை, கமிஷனுக்கு ஆசைப்படுகிறார்கள்.