Skip to main content

உதயநிதி களமிறக்கிய பிரகாஷ்; அரசியலில் கவனம் பெற்ற ஈரோடு தொகுதி!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Prakash  fielded  Erode constituency on recommendation of Udayanidhi

2024 நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த முறை திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் ஈரோடு மக்களவைத் தொகுதி அரசியல் வட்டாரத்தில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. அதற்கு முக்கிய காரணம் 'இந்தியா' கூட்டணியில் திமுக போட்டியிடும் இடங்களில்  இளைஞரணி கைவசம் சென்ற ஒரே ஒரு தொகுதி  ஈரோடு தான். சேலத்தில் நடந்து முடிந்த இளைஞரணி மாநாட்டில் பேசிய உதயநிதி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.  அதன் எதிரொலியாகவே  ஈரோடு மக்களவைத் தொகுதி இளைஞரணிக்கு சென்றுள்ளதாக அரசியல் வட்டாரத்தில்  தகவல் சொல்லப்படுகிறது. 

இந்த முறை இளைஞரணித் துணைச் செயலாளர் பிரகாஷ்-க்கு திமுக தலைமை ஈரோடு மக்களவைத் தொகுதியில் வாய்ப்பு வழங்கியுள்ளது. கொங்குப் பகுதியில் கட்சியைப் பலப்படுத்த நினைத்த திமுக தலைமை இந்த முறை கோவை, ஈரோட்டிலும் கூட்டணிக் கட்சிகளிடமிருந்து கேட்டு வாங்கி தங்களது வேட்பாளர்களை களம் நிறுத்தியுள்ளது. அதுவும், பல சீனியர்கள் போட்டியிருந்தும் இளைஞரணித் துணைச் செயலாளர் பிரகாஷ்-க்கு ஈரோடு மக்களவைத் தொகுதி சென்றதுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது உதயநிதியின் சிபாரிசு தான். பிரகாஷ் இளைஞரணி மாநாடு வெற்றிகரமாக அமைய முக்கியப் பங்காற்றியவர், தொகுதிக்குள் நன்கு பரிச்சியமானவர் என்பதும் கூடுதல் பலமாக அவருக்கு அமைந்தது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். முன்னதாக ஈரோடு மக்களவை சீட் ரேஸில் மாவட்ட அமைச்சர் முத்துசாமியின் ஆதரவாளர் மற்றும் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பிரகாஷ் பெயர்கள் இறுதி பட்டியலில் இருந்த நிலையில் உதயநிதியின் தீவிர ஆதரவாளரே ரேசில் வெற்றி பெற்றுள்ளார்.

48 வயதான  பிரகாஷ் திமுக குடும்ப பின்னணியைச் சேர்ந்தவர். இவரது தந்தை கே.எஸ்.ஈஸ்வரமூர்த்தி 1977 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை திமுகவில் காணியம்பாளையம் கிளைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இதனால் சிறுவயதிலேயே பிரகாஷ் திராவிட கொள்கையில் ஈர்ப்புக் கொண்டவர். பிரகாஷ் ஈரோடு மாவட்டம்  மொடக்குறிச்சி அடுத்துள்ள காணியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். இளங்கலை பொருளாதாரம் படித்த பட்டதாரியான பிரகாஷின் மனைவி கோகிலா, மொடக்குறிச்சி ஒன்றிய திமுக கவுன்சிலராக கடந்த 2011 ஆம் ஆண்டு பதவி வகித்துள்ளார். இதனிடையே, ஈரோடு மாவட்டத்தில் களப்பணியில் தீவிரமாக செயல்பட்ட பிரகாஷ்-க்கு கடந்த 2012 ஆண்டு திமுக தலைமை இளைஞரணி அமைப்பாளர் பதிவி வழங்கியது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட பிரகாஷ் கட்சி பணிகள் மூலம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் நல்ல தொடர்பில் இருந்து வந்தார். 

இதையடுத்து,  உதயநிதி திமுக இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு கொங்கு பகுதியில் இளைஞரணியை வலுப்படுத்த சரியான நபராக பிரகாஷ் இருப்பார் என அமைச்சர் அன்பில் உதயநிதிக்கு அறிமுகம் செய்து வைத்ததாக தகவல் சொல்லப்படுகிறது. அதன்பிறகு உதயநிதிக்கும் பிரகாஷின் செயல்பாடுகள் பிடித்துப் போகவே, கடந்த 2022 ஆம் ஆண்டு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பொறுப்பு பிரகாஷுக்கு வழங்கப்பட்டது. அத்துடன், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், மாவட்டங்களில் இளைஞரணி கவனிக்கும் பொறுப்பும் கூடுதலாக கொடுக்கப்பட்டது. அதிலும், பிரகாஷின் செயல்பாடுகள் திருப்திகரமாக உதயநிதிக்கு தெரிந்தது. அதனைத் தொடர்ந்து, மேற்கு மாவட்ட சுற்றுப் பயணங்களில்  உதயநிதி உடன் காரில் ஒன்றாக பயணிக்கும் அளவிற்கு நெருக்கமாக வளர்ந்தார் பிரகாஷ். இதையடுத்தே சீனியர்கள் தடை இருந்தும் கட்சியை அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்லும் விதமாக உதயநிதி பரிந்துரையில் பிரகாஷ்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் சொல்லப்படுகிறது. 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு திமுக தலைமையிடம் வந்த பிறகு அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறை இளைஞரணியே ஈரோட்டில் முழு வீச்சில் பிரகாஷ்-க்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி, அமைச்சர் உதயநிதி, கனிமொழி, அன்பில் மகேஸ், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் வரை பிரகாஷூக்கு அதரவாக ஈரோட்டில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் திமுக இளைஞரணி சார்பில் சீனியர்களுக்கு மத்தியில் முதல் ஆளாக களம் இறங்கியுள்ள ஈரோடு வேட்பாளர் பிரகாஷ் வெற்றி பெற திமுக இளைஞரணியே களத்தில் இறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.