Skip to main content

பொற்பனைக்கோட்டையில் அயலக தொடர்பை வெளிப்படுத்தும் குடுவையின் அடிப்பாகம், பிணைப்பு முகட்டு ஓடுகள் கண்டுபிடிப்பு!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

The bottom of the flask that reveals the neighborhood contact at Porpanaikottai, the discovery of the bonding ridge tiles!

 

புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் கடந்த வாரம் முதற்கட்ட அகழ்வாய்வுப் பணி நிறைவடைந்த நிலையில், தொடர் மேற்பரப்பாய்வில் ஈடுபட்ட புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தினர் கோட்டையின் வடக்கு வாயிலின் மேற்பரப்பில் செங்கல் சிதிலங்களுக்கு இடையே கோட்டையின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட சுடுமண் பிணைப்பு முகட்டு ஓட்டினைக் கண்டுபிடித்துள்ளனர்.

 

இந்தக் கண்டுபிடிப்பு குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் ஆ. மணிகண்டன் கூறியதாவது, "பொற்பனைக்கோட்டையின் நான்கு புறவாயில்கள், வழிபாட்டு ஆலயங்கள், உயர்ந்த கோட்டைச் சுவர், கொத்தளத்தின் வடிவம், புற, அகக்கோட்டைகள், அக - புற அகழிகள், அகக்கோட்டையின் மையத்தின் மேற்புறமாக அரண்மனை மேடு, கிழக்குப்புறமாக வாவிகுளம் என ஒட்டுமொத்த கட்டுமான அமைப்பும் தமிழ்நாட்டில் வேறெங்கும் காணவியலாதவாறு சங்ககால இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள அதே வடிவமைப்புடன் காணப்படுகிறது. 

The bottom of the flask that reveals the neighborhood contact at Porpanaikottai, the discovery of the bonding ridge tiles!

கோட்டையின் செழுமைக்கு வலுசேர்க்கும் வகையில் பல்வேறு சான்றுகள் தொடர்ச்சியாகக் கிடைத்துவருகின்றன. முன்னதாக பொற்பனைக்கோட்டையின் அரண்மனை மேட்டுப் பகுதியில் மேலாய்வு மேற்கொண்டபோது ஆம்போரா குடுவையை ஒத்த சுடுமண் குடுவையின் அடிப்பாகத்தைக் கண்டறிந்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் அகழ்வாய்வு இயக்குநர் முனைவர் இள. இனியன் அவர்களிடம் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது.

 

ஆம்போரா குடுவை:

ரோம், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து ஆலிவ் எண்ணெய், ஒயின் உள்ளிட்ட திரவப்பொருட்கள் சிறப்பு வடிவிலான ஆம்போரா குடுவைகளில் பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வணிகம் செய்யப்பட்டுள்ளதற்கான ஏராளமான சான்றுகள் உலகம் முழுவதும் கிடைத்துள்ளன. இந்தியாவில் குஜராத்தில் துவாரகா, கேரளாவில் பட்டிண, புதுச்சேரியில் அரிக்கமேடு, ஆந்திராவில் சந்தரவல்லி, தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் புகலூரிலும், ஆத்தூரிலும், ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் சில இடங்களிலும்  இக்குடுவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

The bottom of the flask that reveals the neighborhood contact at Porpanaikottai, the discovery of the bonding ridge tiles!

 

திரவங்களை சேமிக்கும் உள்நாட்டுக் குடுவைகள்:

ஃபிரான்சில் டூர்நுஸ், குஜராத்தில் துவாரகா, புதுச்சேரியில் அரிக்கமேடு ஆகிய இடங்களில் கிடைத்த ஆம்போரா குடுவைகளின் அடிப்புற அமைப்பைப் போன்றே பொற்பனைக்கோட்டையிலும் சுடுமண் குடுவையின் அடிப்பரப்பும் உள்ளது. இருப்பினும் குடுவையை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட களிமண் வகையைப் பொறுத்தே வெளிநாட்டிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டதா என உறுதி செய்ய இயலும் என தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் தொல்லியல்துறைத் தலைவர் பேராசிரியர் செல்வக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இது உள்நாட்டு களிமண்ணில் தயாரிக்கப்பட்டு திரவப் பொருட்களை சேமிக்கும் குடுவையாக பயன்படுத்தப்பட்டிருக்கும் வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

 

ஆம்போராவை ஒத்த சுடுமண் குடுவைகள்:

ரோம் உள்ளிட்ட மேலை நாடுகளில் ஒயின், ஆலிவ் எண்ணெய் உள்ளிட்டவற்றைக் கொண்டு செல்லவும் சேமிக்கவும் கடைப்பிடித்த அதே தொழில்நுட்ப அறிவுடன் இங்கிருந்து உற்பத்தியான மருந்துப்பொருட்கள், வாசனை திரவியங்கள், எண்ணெய் பொருட்கள் உள்ளிட்ட திரவப்பொருட்களை இவ்வகையான குடுவைகள் மூலம் உள்நாட்டின் பல பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் கொண்டு சென்றிருக்கவும் வாய்ப்பிருப்பதை அனுமானிக்க முடிகிறது.

The bottom of the flask that reveals the neighborhood contact at Porpanaikottai, the discovery of the bonding ridge tiles!

கோட்டை கட்டுமானங்களில்  சங்ககால  மேற்கூரை ஓடுகள்:

நான்கு வாயிற்பகுதிகளிலும் பாதுகாப்பு அறைகள் இருந்ததற்கான செங்கல் கட்டுமானங்களின் அடிப்பகுதியைக் காணமுடிகிறது. கோட்டையின் மேற்புறமதில் பகுதியில் எமது குழுவினரால் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் கூரை ஓடுகள், ஆதிச்சநல்லூரில் 2020ஆம் ஆண்டு அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட அதே வடிவத்துடனும் நீர்வடிவதற்கான வரிப்பள்ளம், ஆணிக்குமிழ் பொறுத்துவதற்கான துளை உள்ளிட்ட அமைப்புகளுடன் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூரிலும், கீழடியிலும் கண்டெடுக்கப்பட்ட கூரை ஓடுகளின் வடிவமைப்பையொத்த கூரை ஓடுகள் பொற்பனைக்கோட்டையிலும் காணப்படுவது சங்ககால கட்டுமானத் தொழில்நுட்பத் தொடர்பில் ஒருமித்திருந்ததை உணர்த்துகிறது.

 

ரோமாபுரி பாணியிலான சுடுமண் பிணைப்பு ஓடு கண்டுபிடிப்பு:

பழமையான ரோமாபுரி கட்டுமானங்களில் தெக்குலா எனப்படும் சுடுமண் ஓடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஓடுகளின் பக்கவாட்டு பிணைப்பு பகுதியில் நீள் வாக்கிலமைந்த இம்ரெக்ஸ் என்றழைக்கப்படும் சிறிய முகட்டு ஓடு பயன்படுத்தப்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் வகையில் இங்கிலாந்து நாட்டின் ஸ்கிப்டன் நகரிலுள்ள கிரவென் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர். அதே அமைப்பிலான சுடுமண் இணைப்பு ஓட்டினை பொற்பனைக்கோட்டையின் வடக்குப்புற வாயிற் மேட்டில் கண்டுபிடித்துள்ளோம். இதன் நீளம் 6.2 செ.மீ, 3.3 செ.மீ முகட்டின் உயரம், 6 செ.மீ அடிப்புற அகலம் கொண்டதாக உள்ளது. கோட்டையின் மேற்புறகூரை அமைப்புகளில், சுடுமண் ஓடுகள், ஆணிக்குமிழ்கள் மற்றும் மரச்சட்டங்களில் பிணைக்கப்பட்டிருந்ததையும், நீள்வரிசைகளில் அமைக்கப்பட்ட ஓடுகளில் நீர் கசியாத வண்ணம் இரண்டு ஓடுகளைப் பிணைக்கும் இடத்தில் மேலிருந்து கீழாக நீள்வரிசையில் அடுக்கி சிறிய வடிவிலான பிணைப்பு முகட்டு ஓடுகள் பயன்படுத்தியிருப்பதை இக்கண்டுபிடிப்பின் மூலம் உறுதி செய்ய முடிகிறது.

The bottom of the flask that reveals the neighborhood contact at Porpanaikottai, the discovery of the bonding ridge tiles!

 

கோட்டை வீரர்களுக்கான பாதுகாப்பு அறைகள்:

இதன் மூலமாகக் கோட்டையின் மேற்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறைகள், கொத்தளங்களில் ஓட்டினாலான கூரை வேயப்பட்டு கோட்டை பாதுகாப்பு வீரர்கள் மழை, வெயில் உள்ளிட்ட எவ்வித காரணங்களாலும் பாதுகாப்புப் பணியை தளர்வின்றி செய்திட, உரிய கட்டுமான அமைப்புகளை ஏற்படுத்தியிருப்பதையும் உறுதி செய்ய முடிகிறது.

 

தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்:

பொற்பனைக்கோட்டையில் வசித்த மக்கள் மேம்பட்ட வாழ்க்கை வாழ்ந்ததை உறுதிப்படுத்தும் வகையில் புதிய தரவுகள் கிடைத்துக்கொண்டே உள்ளன. முழுமையான விரிவான தொடர் அகழாய்வுகளை பொற்பனைக்கோட்டை அரண்மனை மேட்டுப்பகுதியில் மேற்கொள்ளும்போது சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட அரண் மற்றும் கோட்டை குறித்த அனைத்து கருத்துகளுக்கும் வலுசேர்க்கும் புதிய தொல்லியல் சான்றுகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதுசார்ந்து தொடராய்வுகளை தமிழ்நாடு அரசும் மத்திய, தமிழ்நாடு தொல்லியல் துறையும்  செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்